சுய மரியாதை திருமணத்தை மறந்த பெரியார் அருளகத்திற்காக பிரகாஷ் .
ராமசாமி நாயக்கருடைய இரண்டாவது திருமணம் 09-07-1949 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26.
மணியம்மையை விட 46 வயது அதிகம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு. இந்த இரண்டாவது திருமணம் நடக்கும்முன் ஈ.வே. ராமசாமி நாயக்கர், திருமணங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் தெரியுமா?
”மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பது சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்” (குடியரசு 03-06-1928)
நாயக்கரைப் பற்றி அண்ணாத்துறை பெரியாரின் திருமணம் கட்சிப் பெருமையின் மீது வீசப்பட்டஈட்டி. இயக்கத்தின் மாண்பு, அதன் தலைவரின் தகாதச் செயலால் தரைமட்டமாகிவிடும். ‘உரத்த குரல் எடுத்து ஊரெல்லாம் சுற்றினாலும்’ தலைவர் போக்கால் ஏற்பட்ட கண்ணியக் குறைவைக் காப்பாற்றிவிட முடியாது. போற்றிப் பரப்பி வந்த இலட்சியங்களை மண்ணில் வீசும் அளவுக்குத் தலைவரின் சுயநலம் கொண்டு போய் விட்டுவிட்டது. இனி அவரின் கீழிருந்து தொண்டாற்றுதலால் பயன் இல்லை. உழைத்து நாம் சிந்தும் வியர்வைத் துளிகள் அவரது ”சொந்த” வயலுக்கு நாம் பாய்ச்சிய தண்ணீராகவே ஆகும் என்று கருதி அவரது தலைமை கூடாது; அது மாறும்வரை கழகப் பணிகளிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதாக எண்ணற்ற கழகங்களும், தோழர்களும், நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும் கண்ணீர்த்துளிகளைச் சிந்தி ஒதுங்கி நிற்கின்றனர். (திராவிட நாடு – 21-08-1949)
வயதுப் பொருத்தமில்லாத திருமணத்தைப் பற்றி அண்ணாத்துரை அதுமட்டுமல்ல1940-ல் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பத்திரிகையான விடுதலையில் அண்ணாத்துரை எழுதிய ஒரு தலையங்கத்தைப் படித்துப் பாருங்கள்.“தாத்தா கட்ட இருந்த தாலி”என்ற தலைப்புக் கொடுத்து அண்ணாதுரை எழுதுகிறார்.
”தொந்தி சரிய மயிரே வெளிர நிறை தந்தமனைய உடலே” படைத்த 72 வயதான ஒரு பார்ப்பனக் கிழவர், ”துள்ளுமத வேட்கைக் கணையாலே” தாக்கப்பட்டு கலியாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.வயது 72 ஏற்கெனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளைக்குட்டியும் பேரன் பேத்தியும் பெற்றவர். இந்தப் பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன? இருண்ட இந்தியாவில், எத்தனை முறை வேண்டு மானாலுந்தான் ஆண்மகன் கலியாணம் செய்து கொள்ளலாமே
பெண்தானே, பருவ மங்கையாயினும் பட்டாடை உடுத்திக் கொண்டு பல்லாங்குழி ஆடி விளையாடும் சின்னஞ்சிறு சிறுமியாயினம், மணமாகிப் பின்னர் கணவன் பிணமானால் விதவையாகிவிடவேண்டும். இளமை இருக்கலாம். ஆனால் இன்பவாழ்வுக்கு அவள் அனுமதி பெற அந்தக் கூட்டம் அனுமதிப்பதில்லை. அவளது விழி, உலகில் உள்ள வனப்பான வாழ்க்கைச் சித்திரங்கள் மீது பாயலாம்.
ஆனால் என்ன பயன்? விம்மி விம்மி வாழலாம் விதவைக்கோலத்துடன். இல்லையேல் விபச்சாரியாகலாம். மறுமணத்துக்கு மார்க்கம் மலர் தூவியதாக இல்லை. கல்லும் மண்ணும் முள்ளும், குருட்டுக் கொள்கையினரின் முரட்டுப் போக்கும், சாத்திரமெனும் சேறும் நிரம்பியதாகவன்றோ இருக்கிறது.
அவள் பதினெட்டு ஆண்டுள்ள பாவையாக இருக்கலாம். மலர்ந்த மலராக இருக்கலாம். வாடை சுற்றுப்பக்கம் எங்கும் வீசலாம். அவளது தகப்பனார் மூன்றாம் மனைவியுடன் கொஞ்சிக் குலாவும் காட்சி அவளது கண்களில் படலாம்.
ஆனால் பூவிழந்த பூவை புத்தி கெட்டவர்களின் போக்கிரித்தனமான பொறியாகிய வைதிகத்தால் வாட்டப்பட்டு, நீலநிற வானத்திலே நின்றுலவும் நிலவைக்கண்டும், பாதி இராத்திரி வேளையிலே பலப்பல எண்ணியும், பாழான வாழ்வு வாழ வேண்டும். இல்லையேல் தொட்டிலில் கிடத்திச் சீராட்டிப் பாலூட்டி வளர்க்க வேண்டிய குழந்தையை, பாழும் கிணற்றில், கழுத்தை நெரித்து வீசவேண்டும்!
பேதைப் பெண், ஏன் இவ்வளவு துடுக்கு? இவ்வளவு பதைப்பா? என்று ”பெரிய பெரிய” மனிதர்களெல்லாம் கேட்பர் கோபத்துடன். எனவே பசித்தபாவை, பஞ்சத்தில் அடிபட்டு நசித்துவிடுவாள்.
ஆண் மகனுக்கென்ன; எத்தனை முறை வேண்டுமாயினம் மணம் செய்து கொள்ளலாம். காசநோய் இருக்கலாம். ஆனால் இதற்காக வேண்டி மணம் செய்து கொள்ளாதிருப்பானா? ஊரார், உனக்குக் காசம் இருக்கிறது. மணம் ஏன்? என்றா கேட்பர்! இல்லை! காசநோயால் கஷ்டப்படும் இவனுக்குக் காலமறிந்து கனிவுடன் ‘மருந்துதர’ ஒரு மங்கை நல்லாள் தேவை என்றுதான் கூறுவர். சட்டம் குறுக்கே நிற்காது. சமுதாயம் ஏனென்று கேட்காது. கொட்டு முழக்குடன் மங்கல ஒலியுடன் மணம் நடக்கும். மூன்றாம் முறையாயினுஞ் சரி, ஐந்தாம் ஆறாம் முறையாயினுஞ் சரி ஆண் மகனுக்கு அந்த உரிமை உண்டு! அக்ரமம்! என்று கூறுவர் அறிவாளிகள்.
ஆம்! அக்கிரமந்தான். ஆனால் கேட்பவர் யார்? கேட்டனர். ஒரு ஊரில்! கேட்டது மட்டுமல்ல, குறுக்கே நின்று இத்தகைய கூடா மணத்தைத் தடுத்தும் விட்டனர். தடுத்ததோடு நிற்கவில்லை. மணமகளை அதே நேரத்தில் தக்க மணமகனுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். அத்தகைய சீரிய செயல் புரிந்த சீலர்களை நாம் பாராட்டுகிறோம்.
சர்க்கார் கவனிப்பார்களா? சர்க்கார் கவனிக்கும்படி சமூகம் கேட்குமா?(திராவிட நாடு 10.07-49)இப்படி அதிக வயதுள்ள ஆண் மிகக் குறைந்த வயதுள்ள பெண்களை மணக்கக்கூடாது என்று பல கட்டுரைகள் – பல பிரசாரத்தின் மூலம் திராவிடர் கழகம் சொன்னது. இதை ஈ.வே. ராமசாமி நாயக்கரும் ஆதரித்தார்.இது மட்டுமல்ல;இராம. அரங்கண்ணல் கூறுகிறார்:-
”பழைய குடியரசு ஏட்டில் இருந்து பெரியாரின் பழைய பேச்சுகளை அடிக்கடி விடுதலையில் மறுபிரசுரம் செய்வேன். அதற்காக ஏடுகளை புரட்டிக் கொண்டிருந்தபோது பொருந்தாத திருமணம் பற்றிய பேச்சு கண்ணில் பட்டது. ஒரு இளம் பெண்ணை வயதானவர் கட்டிக்கொள்வது சரியல்ல என்கிற பேச்சு. அதை அப்படியே வெட்டி எடுத்து, ‘ தக்க வயதும் பொருத்தமே திருமணத்தின் இலட்சியங்கள்”- பெரியாரின் பேருரை என்று கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டு கம்போசிங்குக்கு கொடுத்தேன். அதுவும் வெளிவந்தது. பிறகு நான் வேலையில் ராஜினாமா செய்துவிட்டு பாக்கிப் பணத்தைப் பெறுவதற்காக சென்றபோது, ‘பெரியார் என்னைப் பார்த்து, “பெருமாள் வீட்டு சோத்தையே தின்னுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றானுங்க” என்று கூறினார்.(நூல்:- நினைவுகள்)
திருமணம் செய்து கொள்கின்றவர்களுக்கு போதிய வயது வேண்டும் என்று அறிவுரை கூறுகின்ற ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய திருமணத்தின் போது ஏன் கடைபிடிக்கவில்லை?கொண்ட கொள்கைகளில் உறுதியாக நிற்பவர்; சொல் ஒன்று, செயல் ஒன்று என்ற நிலைக்கே போகாதவர் என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி ஜம்பம் அடிக்கிறீர்களே. அப்படியானால் போதிய வயது இல்லாத திருமணம் சுயமரியாதையற்ற திருமணம் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் தன்னைவிட 46 வயது குறைந்த மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார்? இது தான் கொள்கைப்பிடிப்பா? ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி அண்ணா!
“நானே தலைவனாய், எழுத்தாளனாய், பேச்சாளனாய்..” என்று தான் ஒருவரால் மட்டுமே இயக்கம் வளர்வதாகப் பெரியார் இதுவரை கூறிவந்தார். அவரது மதிப்பைக் காலிழந்தும், கண்ணிழந்தும், பொருளிழந்தும், தியாகத் தழும்புகளைப் பெற்ற தொண்டர்கள் பெற்றதில்லை. “கட்சியின் வளர்ச்சி தன்னால்தான்” என்று சொல்லி வந்தாரே தவிர உண்மையாகவே யாரால்? என்பதை அவருடைய உள்ளம் உரைத்தது கிடையாது.
கழகத் தொண்டர்களைத் தலைவர் பாராட்டியதில்லையென்பது மட்டுமல்ல. அவரது மிரட்டலுக்கும் ஆடும்படியும் வைத்து வந்தார். தொண்டு என்றால் என்ன? தனிப்பட்ட ஒரு தொண்டரின் சேவையால் கட்சிக்கு ஏற்படும் பயன் என்ன? இயக்க வளர்ச்சி, தொண்டர்கள் சேவையின் கூட்டப் பலன்தான் என்ற கேள்விகளைக் கழகப் பணிபுரிந்தோர் இதுவரை எண்ணியது கிடையாது.(திராவிட நாடு 21-08-1949)ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!
மாபெரும்சக்தி, தன்னை விரும்பவில்லை, தன் தலைமையை உதறித் தள்ளுகிறது. தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது என்று உணர்ந்த பின் தலைவர் ‘கழகத் தலைமை’ என்கிற நாற்காலியிலிருந்து இறங்கியிருக்க வேண்டும் தானாகவே; அதுதான் முறை, சரியானதுங் கூட அப்படிச் செய்திருந்தால் நாணயம் உள்ளவர்களின் பாராட்டுக் கூட கிடைத்திருக்கும்.அப்படி நடந்ததா என்றால், தலைவர் தன் பீடமே பெரிது என்று கருதுகிறரே ஒழிய, சுயமரியாதையைப் பற்றி நினைத்தவராகத் தென்படவில்லை!கட்சியே தன்னை விரும்பவில்லையென்று, விளங்கியும் கூட அவ் ‘விளக்கம் உரைப்பதில் இருக்கிறாரே தவிர, ”தலைமைப் பெருமை”யில் ஆர்வத்தையும் ஆசையையும் பதித்திருக்கிறாரே தவிர கட்சி வளர வேண்டும், அதன் செயல்கள் நடைபெற வேண்டும் என்று எண்ணமில்லை!(திராவிட நாடு 21-08-1949)
ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!என்மீதும், என்னுடன் கூடிப் பணிபுரியும் தோழர்கள் மீதும்.துரோகிகள்! ஜூடாசுகள்!தேவதத்தர்கள்! பொதுவாழ்வினால் பிழைப்புத் தேடுவோர்!வயிறு வளர்ப்போர்! சுயநலமிகள்! எத்தர்கள்இப்படி ‘அர்ச்சனைகள்’ அனந்தம், நித்தநித்தம், அது மட்டுமா? பழங்காலத்துத் தவசிகள், ‘சாபம்’ கொடுப்பார்கள் என்று கதை கூறுவார்களே, அதுபோல, பகுத்தறிவுத் தந்தை, பலப்பல சாபமிடுகிறார்!விரட்டப்படுவார்கள்! விரண்டோ டுவார்கள்!மறைந்துபோவார்கள்! வேறுகட்சியில் சேர்வார்கள்!தேர்தலுக்கு நிற்பார்கள்! தேய்ந்து போவார்கள் என்றெல்லாம், ‘சாபம்’ இடுகிறார்.இந்த ‘ஏசல்,’ ‘சாபம்’ இவைகளை, நான் அவர் அடைந்துள்ளது ஏன் என்று அறிவதால், மாற்றத்தின் விளைவு என்று நன்றாக அறிவதால், எனக்குக் கோபம் அல்ல, சிரிப்புத்தான் வருகிறது.(திராவிட நாடு 09-10-1949)
ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!என்மீதும், என்னுடன் கூடிப் பணிபுரியும் தோழர்கள் மீதும்.துரோகிகள்! ஜூடாசுகள்!தேவதத்தர்கள்! பொதுவாழ்வினால் பிழைப்புத் தேடுவோர்!வயிறு வளர்ப்போர்! சுயநலமிகள்! எத்தர்கள்இப்படி ‘அர்ச்சனைகள்’ அனந்தம், நித்தநித்தம், அது மட்டுமா? பழங்காலத்துத் தவசிகள், ‘சாபம்’ கொடுப்பார்கள் என்று கதை கூறுவார்களே, அதுபோல, பகுத்தறிவுத் தந்தை, பலப்பல சாபமிடுகிறார்!விரட்டப்படுவார்கள்! விரண்டோ டுவார்கள்!மறைந்துபோவார்கள்! வேறுகட்சியில் சேர்வார்கள்!தேர்தலுக்கு நிற்பார்கள்! தேய்ந்து போவார்கள்என்றெல்லாம், ‘சாபம்’ இடுகிறார்.இந்த ‘ஏசல்,’ ‘சாபம்’ இவைகளை, நான் அவர் அடைந்துள்ளது ஏன் என்று அறிவதால், மாற்றத்தின் விளைவு என்று நன்றாக அறிவதால், எனக்குக் கோபம் அல்ல, சிரிப்புத்தான் வருகிறது.(திராவிட நாடு 09-10-1949)
ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!ஒட்டகத்துக்கு ஒரு சுபாவம் உண்டு என்று சொல்வார்கள். அதன் மீது பாரத்தை மேலும் மேலும் போட்டால், பளு தாங்காமல் ஒட்டகம் முரண்டிக் கொண்டு படுத்துவிடுமாம்! உடனே, சூட்சம புத்தியுள்ள ஒட்டகக்காரன், கடைசியாக ஒட்டகத்தின் மீது ஏற்றிய சாமானை எடுத்துவிடுவானாம். எடுத்தானதும், ஒட்டகம் சரி, சரி, நம்மீது போட்ட பாரத்தைக் கீழே இறக்கிவிட்டார்கள். நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று எண்ணிக் கொண்டு, எழுந்து நிற்குமாம். பிராயணத்துக்குத் தயாராக! இந்த ஒட்டகத்தின் சுபாவத்தை ஒரு சில சமயத்திலே, நல்லவர்களிடமும் காணலாம்.யாராவது, நல்லவர்களுக்கு மனவேதனை ஏற்படும்படியான தொல்லைகள் ஏற்பட்டால், தாங்கமுடியாத நிலை உண்டாகும்.. உண்டாகும்போது. இனிப் பொறுக்க முடியாது என்று கூறுவர், ஆனால் ஒட்டகத்தின் சுபாவ சூட்சமம் தெரிந்தவர்கள், கொடுத்த தொல்லைகளிலே, ஏதாவதொன்றை நீக்குவர்.. நீக்குவதன் மூலம் நல்லவரின் மனதிலே, சஞ்சலம் குறைந்து, சந்தோஷம் மலர்ந்து சொன்ன வண்ணம் கேட்கும் நிலை பெறுவதுண்டு!பெரியார், நம்மை, ஒட்டகச் சுபாவம் கொண்டவர்கள் என்றே தீர்மானித்திருக்கிறார் – அதே சூட்சமத்தையும் கையாண்டு பார்க்கிறார்.(திராவிடநாடு10-07-1949)
ஈ.வே. ராவின் திருமணத்தை எதிர்த்த அண்ணாதுரை!ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இரண்டாவது திருமணத்தை கடுமையாக எதிர்த்தவர்களுள் அண்ணாதுரை மிக முக்கியமானவர். இந்த திருமணம் தங்களுடைய இயக்கத்தின் கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்ட திருமணமாகும் என்று கருதிய காரணத்தாலேயே அண்ணாதுரை அதைக் கடுமையாக எதிர்த்தார். ஈ.வே. ராமசாமி நாயக்கரின் திருமணத்தை எதிர்த்து அண்ணாத்துரை எழுதிய கட்டுரையில் அந்தத் திருமணம் எப்படி தங்கள் கொள்கைக்கு முரண்பட்டது என்று கூறி ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கொள்கை நழுவலை தோலுரித்துக் காட்டுகிறார்.இதோ அந்தக் கட்டுரை..
சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 -வத ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம்.இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை – அறிவிக்கிறார்.கடந்த ஐந்தாறு அண்டுகளாகப் பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டிலே தன்னை ஒப்படைத்துப் பணியாற்றி வந்தார் திருமதி மணி அம்மையார்.இந்தத் திருமதிக்கு வயது 26.அவர்கள்தான் பெரியாருக்கு மனைவியாகும் தொண்டில் இப்போது ஈடுபட நேரிட்டிருக்கிறது.சென்னையில் இவர்கள் பதிவுத் திருமண மனு பதிவு நிலையத்தில் கடந்த ஒருவார காலமாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பலர் பார்த்து திகைப்படைந்துள்ளனர். பெரியாருக்கு வயது 72.மணியம்மைக்கு வயது 26. இவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது.
தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய், விடுதலை வீரர்களாய், ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள் இன்று உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பின்னும் கால்களுடன், பிசையும் கரங்களுடன் யார் பார்த்து என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துவிடும்.திருமணம் சொந்த விஷயம், வயோதிகப் பருவத்திலே திருமணம் செய்வதுகூடச் சொந்த விஷயந்தான். அதிலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது வெறும் அரசியல் கட்சித் தலைவராயுள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்வது வயோதிகத்திலே, செய்து கொண்டாலும் கூடக் கேட்டுத்திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ கோபமடைய மட்டுமேதான் தோன்றமே ஒழியக் கண்ணீர் கிளம்பாது. இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாரின் திருமணச் சேதி கேட்டு.நாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் குடும்பத் தலைவர் என, வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு எந்த இயக்கத்தவரும், எந்தத் தலைவரிடமும் காட்டாத அளவு மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம்..…அவரை நாம், பின்பற்றி வந்தது ஏறத்தாழ ”பக்தர்கள் அவதார புருஷர்களை”ப் பின்பற்றி வந்தது போலவேதான்.இதற்குக் காரணம், நாம் மற்ற எந்தத் தலைவரையும் விட இவரிடம் தனிப்பட்ட தன்மை, பண்பு, இருக்கிறது என்று உளமார எண்ணியதால்தான்.
வயத ஏற ஏற வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்தச் சுகத்தைப் பற்றிக் கவனப்படாமல் துறவிபோல இரவு பகலென்று பாராமல், அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு, நாம் வாழ, அவர் வாட்டத்தையும் பாடுகளையும் தாங்கிக் கொள்கிறார் என்று தெரிந்ததால் நாம் அவர் பெரியார் எனம் பண்புப் பெயருக்கு முற்றிலும் உரியார், அவர் போன்றோர் வேறு யாரும் இல்லையென்று இறும்பூ தெய்தி வந்தோம் இறுமாந்திருந்தோம்.
திருமண முறையிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவிகளாக்கும் கயமைத் தனத்தை ஒழிக்கவும், ஆண்களின் கொடுமையை அடக்கவும் அவர் ஆற்றியதுபோல் வேறு எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை.…பொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்து கேட்டு, கிழவர்கள் கலங்கினர், குமரிகள் குதூகலித்தனர்.காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே வாலிபப் பெண்ணைச் சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசைக் காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மானரோஷத்தில் அக்கரையுடைய வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார் – நமக்கெல்லாம் புதுமுறுக்கேற்றினார்.பிள்ளையில்லையென்ற காரணத்துக்காக சொத்துக்கு வாரிசுயில்லை என்ற காரணத்துக்காக, மனைவியைத் தேடும் டுமையை ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார்.பொருந்தாத் திருமணம் நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார்.அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து ‘தங்கபஸ்பம்’ தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார்.தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே ‘பொருந்தாதத் திருமணம்’ யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால், போலீஸ் பந்தோபஸ்துத் தேடக்கூடிய அளவுக்கு நாட்டு மக்களின் உணர்ச்சி வேகம் உருவெடுத்தது.ஏற்கனவே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட வெட்கத்தால் – வேதனையால் தாக்கப்பட்டனர்.
”என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே – பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா – காரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும் எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத ஊரில்லை.இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72-ம் வயதில் 26வயதுள்ள பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை இருக்கும்!”எம்பா! திராவிடர் கழகம்! உங்கள் தலைவருக்குத் திருமணமாமே!! என்று கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே.சீர்திருத்தம் இயக்கம் இது. இதோ பாரய்யா, ”சீர்திருத்தம் 71-க்கும் 26-க்கும் திருமணம்” என்ற கேலி பேசுகிறார்களே – கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறதே.”கையிலே தடி மணமகனுக்கு! கருப்பு உடை மணமகளுக்கு!” என்று பரிகாசம் பேசுகிறார்களே.”ஊருக்குத்தானய்யா உபதேசம்!” என்று இடித்துரைக்கிறார்களே.”எனக்கென்ன, வயதோ 70-க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் இன்னொரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை.” என்றெல்லாம் பேசின பெரியார் கலியாணம் செய்து கொள்கிறாரய்யா! என்று கடைவீதி பேசிக் கைகொட்டி சிரிக்கிறதே!
”ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே! சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே1 பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே! பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே, இதோ உங்கள் தலைவர் துறவிக்கோலத்தில், தள்ளாடும் பருவத்தில், இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாரே உங்கள் கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை, என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்? என்று சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- இனியும் பேசப்போகிறார்களே- என்ன செய்வோம்- என்ன சமாதானம் கூறுவோம்- எப்படி மனப்புண்ணை மாற்ற முடியும்- எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்று எண்ணினர்- எண்ணினதும் தாயோ, தகப்பனோ, மனைவியோ, மகளோ, அண்ணன், தம்பியோ உடன் பிறந்தவர்களோ இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தை விட அதிகமான அளவில் துக்கம் பீறிட்டுக் கிளம்பிக் கதறுகின்றனர் – கதறிக்கொண்டேயிருக்கிறோம் – கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது.
பொருந்தாத் திருமணம்! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்! எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை.-முகத்திலே கரி பூசிவிட்டார். மூக்கறுத்துவிட்டார்! மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் – சேதி தெரிந்தது முதல்.வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண!வேதனைப்படுகிறோம் தனிமையிலே!ஒருவர் கண்ணீரை, மற்றவர் துடைக்க முயலுகிறோம் – துடிக்கிறோம் -நெஞ்சத்தில் துயரத்தேள் கொட்டியதால்.பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை, எவ்வளவு காரசாரமாகக் கண்டித்திருக்கிறோம் – எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்தோம்.இப்போது, எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார். நம்மை நடைப்பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார் – நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்துவிட்டார்.
-எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும்? உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன? நீங்கள் காட்டிய வழி நடந்தோமே, அதற்கா இந்தப் பரிசு?
– எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 இதை மறுக்கமுடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே!இதைச் சீர்த்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்து மறுக்க முடியாதே! ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர்!கண்ணீரைத் துடைத்தப்படி நின்று, ஆயிரமாயிரம் இளைஞர்கள் கேட்டும் கேள்விகள் இல்லை!இந்தப் பொருந்தாத் திருமணம் நடைபெறக்கூடுமென்று நாம், யாரும் கனவிலும் எண்ணியதில்லை. பெரியாரின் கோலம், வயது, பேச்சு, வாழ்க்கையிலே அவருக்குப்பற்று அற்றது போலிருந்தது காட்டியத்தன்மை ஆகியவை நம்மை அவருடைய மனதிலும் ஒரு ‘மாது’ புகமுடியும் என்று எண்ணச் செய்யவில்லை, அதிலும் எப்படிப்பட்ட மாது?
பெரியாரின் உயிரைப் பாதுகாக்க, உடலைப் பாதுகாக்க தக்கவிதமான உணவு, மருந்து தருதல், பிரயாண காலத்தில் வசதி செய்து தருவது போன்ற காரியத்தைக் கவனிப்பது என்கிற முறையில் இயக்கத்தில் ஜந்தாறு வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்தான் மணியம்மையார்.…பெரியாரின் உடற்பாதுகாப்புக் காண பணிபுரிய, நான் நீ யென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம் படைத்தவர்கள் உண்டு.அவர்கள் யாரும் தேவைப்படவில்லை! மணியம்மை வர நேரிட்டது!புயல் நுழைகிறது என்று கருதியவன் நான்.புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால் அந்த அம்மையாரின் அருந்தோண்டு கண்டு, திராவிடர்கள் முதலிலே கொண்டிருந்த அருவருப்பையும் இழந்தனர்.அப்பா! அப்பா! என்று அம்மை மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும் அம்மா- அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.
அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார் – பதிவுத் திருமணம்!!இந்த நிலையை யார்த்தான் எந்தக் காரணங்கொண்டு தான், சாதாரணமானதென்று சொல்லமுடியும்.நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி ”இதோ, தாத்தா பார் – வணக்கஞ் சொல்லு” என்று கூறினார் – கேட்டோம் – களித்தோம்!பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி ”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன்.சரியா? முறையா? என்று உலகம் கேட்கிறது.அன்புள்ளசி. என். அண்ணாதுரை(திராவிட நாடு 3-7-49)
சுயமரியாதைத் திருமணம் மறந்து போனதேன்?ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணத்தில் வயது வித்தியாசக் கொள்கையை மட்டும் கைவிடவில்லை. தனது வாழ்நாள் முழுக்க எந்த சுயமரியாதைத் திருமணத்தை வலியுறுத்தினாரோ – அந்த சுயமரியாதைத் திருமணத்தையே அவர் தம் திருமணத்தின் போது கடைபிடிக்கவில்லை. ஆனால் சுயமரியாதைத் திருமணத்தை எந்த அளவுக்கு வலியுறுத்தினார் தெரியுமா? ஒருவர் இரு பெண்களை மணந்தாலும் பரவாயில்லை, ஆனால் அது சுயமரியாதைத் திருமணமாக இருக்கவேண்டும் என்று வற்புறுத்தினார். தன்னுடைய இயக்கத்தவர்களுக்கு சுயமரியாதைத் திருமணத்தையே நடத்திவைத்தார்.
இந்த அளவுக்கு சுயமரியாதை திருமண விஷயத்தில் கொள்கைப்பிடிப்புடன் இருந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்? திராவிடர்க் கழகத்தில் இருந்தவர்கள் கூட வயதுதான் ஈ.வே.ராமாசாமி நாயக்கர் பார்க்கவில்லை யென்றாலும் கூட திருமணத்தையாவது பதிவுத் திருமணமாக இல்லாமல் சுயமரியாதைத் திருமணமாக செய்து கொள்ள பெரியாரை வேண்டினர். ஆனால் பெரியார் கேட்கவில்லை. தன்னுடைய கொள்கைக்கு தானே சமாதி கட்டினார்.தனது கொள்கைக்கு தானே சமாதி கட்டக் காரணம் என்ன தெரியுமா?அன்று சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாத திருமணம். தனது சொத்துக்கும், இயக்கத்துக்கும் நம்பிக்கையான ஒருவர் தேவைப்பட்டார். அதனாலேயே திருமணம் செய்து கொண்டார் என்று சொல்கிறார்கள்.இருமணம் பிணைக்கப்பட்டு ஒருவரை ஒருவர் அறிந்து கொண்ட பின் திருமணம் எதற்கு என்றெல்லாம் கேட்ட பெரியார்தான் சொத்துக்களுக்காக திருமணம் செய்துகொண்டார்.சொத்துக்களுக்காக – இயக்கத்துக்காக என்றால் திருமணம் தான் தீர்வா? கொள்கைப் பிடிப்புக் கொண்ட மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டால்தான் சொத்தை இயக்கத்தை காப்பாற்றுவாரா? திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால் காப்பற்றமாட்டாரா? திருமணம் செய்து கொள்ளாமலேயே மணியம்மையாரே சொத்தை இயக்கத்தை காப்பற்றச் சொன்னால் மணியம்மையார் காப்பாற்றமாட்டாரா? திருமணம் செய்து கொண்டால் தான் காப்பாற்றுவரா? சொத்தை இயக்கத்தை காப்பாற்ற திருமணம் தான் தீர்வு என்றால்-
அதே சொத்தை – இயக்கத்தைக் காப்பற்ற மணியம்மை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?ஈ.வே.ராமசாமி நாயக்கரின் வழிமுறைப்படி மணியம்மை இயக்கத்துக்காக – சொத்துக்களுக்காக திருமணம் கொள்ளவில்லையே ஏன்? அதிலெல்லாம் அக்கறையில்லாததாலா? சொத்துக்களை காப்பாற்ற பெரியாரும் மணியம்மையாரும் மட்டும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர் என்றால் –ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சொல்படி 1967 வரை சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட எண்ணற்ற தோழர்களின் குடும்ப சொத்துக்களைப் பற்றியே கவலைப்படாதது ஏன்? (1968-ம் ஆண்டுதான் சுயமரியாதை திருமணம் சட்டப்படி ஆனது. அதில்தான் இதுவரை நடந்த சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சொல்லியது) அவர்கள் சொத்து எக்கேடாவது கெட்டுப்போகட்டும், என் சொத்துமட்டும் என் கையில் இருக்கவேண்டும் என்ற எண்ணப்படித்தானே அன்று சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதை திருமணத்தை மற்றவர்களுக்கும், சட்டப்படியான பதிவுத் திருமணத்தை தனக்கும் வகுத்துக் கொண்டார்! இது தானா கொள்கைப் பிடிப்பு?
சரி ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான் பதிவுத்திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். இதற்கு ஏன் மணியம்மை ஒத்துக்கொண்டார்? மணியம்மை சுயமரியாதை திருமணமே செய்து கொள்ளலாம் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரை வற்புறுத்திச் சொல்லியிருக்கலாமே! ஒருவேளை சொத்துக்கள் வந்தால் போதும் என்று நினைத்துவிட்டாரா? தலைவர் கொள்கையில் நழுவும் போது அதைத் தடுத்து நிறுத்துவது தானே தொண்டருக்கு அழகு! ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கொள்கையிலிருந்து நழுவும் போது மணியம்மையாரும் சம்மதித்தாரே ஏன்?ஏனென்றால் கொள்கை மற்றவர்களுக்குத்தான் நமக்கு இல்லை என்று மணியம்மையாரும், ஈ.வே.ராமசாமி நாயக்கரும் நினைத்தார்களோ என்னவோ! அவர்களுக்கே வெளிச்சம்!!தான் பதிவு திருமணம் செய்து கொண்ட பிறகு 1962-ம் ஆண்டுஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் நாங்கள் சட்டப்படிக் கணவனும், மனைவியுமாக ஏற்று நடக்க சம்மதிக்கிறோம் என்று மட்டும் தான் சொல்கிறார்கள். நாம் நடத்தும் திருமணத்தில் ‘நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் துணைவர்களாக வாழ்க்கை ஒப்பந்தம் செய்துக்கொள்வதோடு ஒருவருக்கொருவர் எல்லாத் துறைகளிலும் இன்ப-துன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்துவாழ உறுதி கூறுகின்றோம’ என்று சொல்லும் முறையை கையாள்கிறோம். நம்முடையது சம உரிமைத் திருமணம் அல்லவா?(விடுதலை 20-04-1962)
தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு மற்றவர்களுக்கு சுயமரியாதை திருமணத்தை கூறுகிறார் என்றால் இதுதான் கொள்கைப்பிடிப்பா?
தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டுவிட்டு மற்றவர்கள் சுயமரியாதை திருமணத்தை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்ல ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு என்ன தகுதியிருக்கிறது?
நம்முடையது சம உரிமைத் திருமணம் என்கிறார். அப்படியென்றால் இவர் ஏன் சம உரிமைத் திருமணம் செய்துகொள்ளவில்லை?