தமிழும் தமிழுரும்’ என்ற நூலில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:
”இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் இரண்டு மூன்று புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் 1. தொல்காப்பியன், 2. திருவள்ளுவன், 3. கம்பன். இம்மூவரில்,
1. தொல்காப்பியன் ஆரியக்கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட்ட மாபெரும் துரோகி.
2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றான்.
3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுப்படுத்தி கூலிவாங்கி பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். இம்மூவர்களும் ஜாதியையும், ஜாதித் தொழிலையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஆவார்கள்”.
”தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன்.” ”தமிழ்ப் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100 க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்வான்களாக… தமிழ்ப் புலவர்களாக வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்டதனால் அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.”
”தமிழை ஒதுக்கிவிடுவதால் உனக்கு (தமிழருக்கு) நட்டம் என்ன? வேறுமொழியை ஏற்றுக் கொள்வதால் உனக்கு பாதகம் என்ன?”
”புலவர்களுக்கு (தமிழ் படித்துத் தமிழால் பிழைப்பவர்களுக்கு) வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையே என்கிற காரணம் ஒன்றே ஒன்று அல்லாமல் தமிழர்கள் நல்வாழ்விற்கு தமிழ் எதற்கு ஆக வேண்டியிருக்கிறது?”
”யாருக்குப் பிறந்தாலும் மானம் தேவை. அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்பொழுது சிந்திக்க வேண்டிய தேவை. அதையும்விடத் தமிழ்மொழியிலும், தமிழ் சமுதாயத்திலும் இருக்கிறதா, இருப்பதற்குத் தமிழ் உதவியதா என்பதுதான் முக்கியமான, முதலாவதான கேள்வி?”
”இந்தியை நாட்டுமொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக்கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.”
தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொன்ன பாரதிதாசன் தமிழைப் பழித்த ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சீடராகவே இருந்தது, பாரதிதாசனின் தமிழ்ப் பற்றுமேல் சிறிது ஐயம் கொள்ளவைக்கிறது.
”ஆங்கிலம் தமிழன் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும்.”
”தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.”, ”தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?”
நூல்:- தமிழும் தமிழரும் இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச்சிக்கல் அல்ல. அரசியல் சிக்கல்தான். (விடுதலை 03.03.1965)
முதலில் பார்ப்பனருக்காக இந்தியை எதிர்த்தேன் என்றார். பின்பு ஆங்கில அறிவு தேவையென்பதால் இந்தியை எதிர்க்கிறேன் என்கிறார். எவ்வளவு முரண்பாடு.
”இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியேதான் ஆகும்.(குடியரசு 20.01.1920)
”காலையில் நான் இம்மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால், அதற்கு வாக்களிப்பேன் என்று கூறினேன்.”(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் III-ம் தொகுதி)
”இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ்த்தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப்பாலை அருந்தி இருப்பார் களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி இவர்கள் வாழ்க்கை நிலையை வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகியிருப்பார்கள் என்பதோடு மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உயரமுள்ள உழைப்பாளராகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுவேன்.”
”இன்றைக்கும் எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்பட வேண்டுமானால், அதற்காக நம் மக்களை மேல் நாடுகளுக்கு அனுப்பி (ஆங்கில) புட்டிப்பாலில்தான் எண்ணங்கள், செயல்முறைகள், பண்டங்களின் பெயர்கள், பாகங்களின் பெயர்கள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படைக் கருத்துக்கள் முதலியவற்றை அறிந்து வரும்படி செய்யத்தான் நம்மால் முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இவற்றில் எதற்காகவாவது பயன்படுகிறதா?”(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)
”ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால் நான் மிகமிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்று பேசியிருக்கிறேன்.”
”உங்கள் வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள்) தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள்.(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)
ஆங்கிலம் படித்தால் ஆற்றலும் திறமையும் உடையவர்களாகிவிடுவார்கள் என்று சொல்லுகின்றாரே ஈ. வே. ராமசாமி நாயக்கர் அதுமட்டுமல்ல, எல்லோரிடமும் ஆங்கிலமே பேசுங்கள் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர், தன் மனைவியுடனும், வேலைக்காரர்களுடனும் ஆங்கிலத்திலேயே பேசினாரா?
தமிழ் மொழி மீது வெறுப்பும், ஆங்கில மொழி மீது பற்றும் கொண்ட ‘ஈ. வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழுக்காக அரும்பாடுபட்டவர் என்று சொல்கின்றனர். ஆங்கில மோகம் கொண்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தொல்காப்பியரையும், கம்பனையும் தமிழ் துரோகிகள் என்று சொல்கின்றனர்.
No comments:
Post a Comment