Thursday, 18 February 2021

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். (University of Jaffna).

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (University of Jaffna) இலங்கையிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களுள் ஒன்று. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமொன்றின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்த போதிலும், 1974 ஆம் ஆண்டிலேயே இது நிறுவப்பட்டது. சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியை மையமாக வைத்து இப்பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இராமநாதன் 90ஆண்டுகளுக்கு முன்பு நிறுவிய இந்த சிவன் கோயிலே அருள்மிகு பரமேஸ்வரன் கோயில். இக் கோயில் பரமேசுவராக் கல்லூரி அறக்கட்டளைச் சொத்தாக இருந்து வருகிறது. 1974 வளாகத்தை அரசுக்குக் கையளித்த பரமேசுவராக் கல்லூரி அறக்கட்டளை கோயிலையும் சுற்றியுள்ள நிலத்தையும் அரசுக்கு கை கையளிக்க வில்லை.இன்றுவரை அறக்கட்டளையின் சொத்தாக இருந்து வரும் கோயிலை திருப்பணி செய்து போற்றி வளர்த்து வருவது அறக்கட்டளை ஆகும்.

இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகளில் பல்கலைக்கழகமொன்று இல்லாமை ஒரு பெருங் குறையாக இருந்துவந்தது. எனினும் இத்தகைய ஒரு பல்கலைக்கழகம் எங்கே நிறுவப்பட வேண்டுமென்பதில் தமிழர் பிரதிநிதிகளிடையே ஒத்தகருத்து நிலவவில்லை. இலங்கைத் தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, திருகோணமலையிலேயே பல்கலைக் கழகம் நிறுவப்பட வேண்டுமென்று வாதிட்டுவந்தது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரும் வேறு சிலரும் யாழ்ப்பாணத்தில் இது அமையவேண்டுமென்றனர். இலங்கையின் தமிழர் பிரதேசத்தின் மத்திய பகுதியில் திருகோணமலை அமைந்திருப்பதும், தமிழர் பகுதியின் தலைமையிடமாகத் திருகோணமலையை வளர்த்தெடுக்கும் நோக்கம் இருந்ததும் தமிழரசுக் கட்சியினர் திருகோணமலையை அமைவிடமாக வலியுறுத்தி வந்ததற்கான காரணங்களிற் சில. திருகோணமலையில் குடித்தொகை அடிப்படையில் தமிழர் விகிதாசாரம் குறைந்துவருவதைத் தடுத்து நிறுத்தவும் இது உதவுமென அவர்கள் கருதினார்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பெயர்ப்பலகை

அக்காலத்தில் யாழ்ப்பாண மாணவர்களே மிகப் பெரும்பான்மையாகப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகினர். எனவே உடனடியாக யாழ்ப்பாணத்திலேயே பல்கலைக்கழகம் தேவை என எதிரணியினர் வாதாடியதுடன், திருகோணமலையின் குடித்தொகை நோக்கங்களைப் பொறுத்தவரை தமிழருக்குப் பாதகமான விளைவுகளே ஏற்படக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்தார்கள்.

1965 ல் பதவிக்குவந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசில், தமிழரசு, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பங்காளிகளாக இருந்தும், தமிழர் பகுதியொன்றில் பல்கலைக்கழகமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு சாதகமான நிலைமை இருந்தபோதிலும் கூட, தமிழரிடையே ஒத்தகருத்தின்மை காரணமாக எதுவும் நடைபெறவில்லை. 1972ல் இலங்கை சுதந்திரக் கட்சி வெற்றிபெற்று சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமரான பின்னர். தமிழரசுக் கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமொன்றை நிறுவினார்.

வட்டுக்கோட்டையில் உள்ள யாழ்ப்பாணக் கல்லூரி வளவிலமைந்துள்ள பட்டதாரி மாணவப் பிரிவையும் 1921 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் சேர். பொன்னம்பலம் இராமநாதனால் திருநெல்வேலியில் அமைக்கப்பட்டிருந்த பரமேசுவராக் கல்லூரியையும் இணைப்பதன் மூலம் 1974 ஆகத்து 1 ஆம் நாள் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் நிறுவப்பட்டது. 1974 யூூலை 19 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான எல். எச். சுமணதாச வித்தியாலங்காரப் பல்கலைக்கழகத்தின் இந்துக் கற்கை, தமிழ் ஆகிய துறைகளின் தலைவரான கலாநிதி க. கைலாசபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டதை அறிவித்தார்.

இவ்வாறு 1974 சூலை 25 வியாழக்கிழமை வெளியிடப்பட்ட 121/5 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியாகிய பிரகடனத்தின் மூலம் 1974 ஆகத்து முதலாம் நாள் நிறுவப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் சட்டபீடம், உடற்கல்விப்பீடம் என்பவற்றை நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் ஆரம்பத்தில் விஞ்ஞான பீடம், மனிதப் பண்பியற் பீடம் என்பவற்றுடன் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாண வளாகத்தின் முதல் போதனைசார் ஊழியர்களாக 1974 செப்டெம்பர் 1 ஆம் திகதியன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பணியாற்றிய சில ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்நிலைமைகளைத் தொடர்ந்து இலங்கையின் அப்போதைய பிரதம மந்திரியான சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களால் 1974 அக்டோபர் 6 ஆம் நாள் பிற்பகல் 2.25 மணியளவில் யாழ்ப்பாண வளாகம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் யாழ்ப்பாண வளாகத்தின் முதல் 14 மாணவர்களுக்கான மாணவர் பதிவுப் புத்தகம் பிரதமரால் வழங்கப்பட்டது.

அக்காலத்தில் இலங்கையிலிருந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இலங்கைப் பல்கலைக் கழகம் என்ற ஒரே பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு வளாகங்களாகவே செயற்பட்டு வந்தன. எனவே யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகமும், "இலங்கைப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாண வளாகம்" என்றே அழைக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக்கழகங்கள் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதன் விளைவாக உயர்கல்வி நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் 1979 சனவரி 1 ஆம் நாள் தன்னாதிக்கமுள்ள பல்கலைக்கழகமாகியது. தமிழறிஞர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.



Jafna visit of Hon Sirimavo Bandaranaike.

https://www.youtube.com/watch?v=QdTd9WLFdYE&ab_channel=Archivevideos

No comments:

Post a Comment