Sunday, 9 August 2020
சங்க காலத் தமிழர்களின் வாழ்வியல்
மனித நேயம்
மனித நேயம் = மனிதம் + நேயம் தொடர்புடைய பலம் வாய்ந்த குணங்களாக அன்பு, கருணை, இரக்கம் மற்றும் சமூக நுண்ணறிவு இருக்கின்றன. சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். . பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் ஆகும்.
மனிதன் சக மனிதனை நேசிக்கிற-சக மனிதன் துன்பம் போக்கி வாழ்கின்ற மனித நேயத் துக்கும் அப்பால், உலகத்தில் உள்ள எல்லா உயிர் களிடமும் அன்பு காட்டுகின்ற-எல்லா உயிர்க ளின் துன்பம் போக்குகின்ற உன்னதமான வாழ்க்கை நெறியைச் சங்ககாலம் காட்டுகிறது.
பெரிய வள்ளல் என்று இன்றும் போற்றப்படுகின்ற பாரிவள்ளல் மனிதர்களிடம் மட்டுமா அன்பு காட்டினான்? அவனுடைய அன்பு, வாடிய முல்லைக் கொடியிடம் கூட சென்றதே! படரக் கொடியின்றி வாடிய முல்லைக் கொடி படர, தன் தேரையே நிறுத்திவிட்டு நடந்து வந்த பாரியின் மனம், சகல உயிர்களையும் நேசித்த உணர்வு மிக்கதல்லவா! வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரின் முன் னோடி பாரிதான்! பாரியைப் போலவே பெரிய வள்ளலாக, சங்க காலத்தில் வாழ்ந்தவன் பேகன். அவனும் புலவர் களையும் இரவலர்களையும் நேசித்ததோடு, அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டினான்.
மனிதனின் வாட்டத்ததைப் போக்கிய மன்னன் பேகன், குளிரால் வாடிய மயிலுக்கு உயர்ந்த போர்வையைப் போர்த்தினான். இவனும், எவ்வு யிரும் தம் உயிர் போல் எண்ணி இரங்கிய வட லூர் வள்ளலாரின் முன்னோடியே! குறுங்குடி மருதனார் என்ற சங்ககாலப் புலவர் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்று எண்ணத் தக்கது. தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைத்து வாடும் தலைவியை நோக்கி, "கார்கா லம் வந்துவிட்டது; தலைவன் விரைவில் வந்து விடுவான்' என்று, பருவ காலத்தைச் சுட்டிக் காட்டி ஆற்றுவிக்கும் தோழி, தலைவனின் நல்ல மனதைக் கூறுவதில் சங்ககால மனித உணர்வைக் காணலாம்.
"பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்'' (அகநா-4)
பூத்த சோலையில் தம் துணையோடு தேனில் திளைத்து மகிழும் வண்டினங்கள், மணியொலி கேட்டு பயந்து, கலைந்து சென்று விடுமோ என்று கருணையோடு எண்ணி, தன் தேர் மணிக ளின் நாவை ஒலிக்காத வண்ணம் கட்டி, தேரைச் செலுத்துபவனாம் தலைவன். பலநாள் பிரிந்து கிடந்து, வாடும் தலைவியைக் காண விரைந்து வரும் வேளையிலும், வண்டினங்கள் மகிழ்வைச் சிதைத்துவிடக் கூடாதே என்று நினைத்த உள் ளம் சங்ககாலச் சமுதாயப் பண்பைப் பிரதிபலிப் பதாகும்.
எவ்வுயிர்க்கும் தன்னால் துன்பம் நேர்ந் துவிடக் கூடாது என்பதையும், எவ்வுயிரிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்பதையும் குறுங்குடி மருதனார் இக் காட்சியின் மூலம் உணர்த்துகிறார்.
சீத்தலைச் சாத்தனார் பாடிய அகப்பாடல் ஒன்றும் நினைக்கத்தத்தது. காதலியைப் பிரிந்து சென்ற தலைவன், தன் பணி முடித்துக் குதிரை பூட்டிய தேரில் திரும்பும் போது, தன் பாகனுக்கு உரைத்ததில் காணப்படும் அன்புணர்ச்சி கற் றோர் நினைவை விட்டு அகலாதது.
"வாஅப் பாணி வயங்குதொழில் கலிமாத்
தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க
இடமறந் தேமதி வலவ குவிமுகை
வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக்கால் அம்பிணைக் காமர் புணைநிலை
கடுமான் தேர்ஒலி கேட்பின்
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே'' (அகநா-134)
காதலியை விரைவில் காண வேண்டும் என்று வரும் வழியில், ஆண்மானும் பெண்மானுமாய்க் கூடி மகிழ்ந்திருப்பதைக் கண்ட தலைவன், தேரொலி கேட்டு அவைகள் கலைந்துவிடும் என்று எண்ணி, குதிரையைச் சாட்டையால் அடித்து ஓட்டாது மெல்ல நடத்திச் செல்க என்று பாகனுக்கு உரைக்கிறானாம். மனித நேயத் தையும் தாண்டி அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டும் தலைவனின் உயர்ந்த நெறியைச் சங்க இலக்கியம் நமக்குக் காட்டுகிறது.
சங்க இலக்கியங்கள் தமிழ் மொழியின் மூத்த இலக்கியங்கள் ஆகும். இதனுள் சங்ககாலத் தமிழரின் அறம், அன்பு, பண்பியல் , அறிவியல், வணிகம், பகுத்தறிவு கோட்பாடுகள் , சமத்துவ கோட்பாடுகள், பொருளியல் கோட்பாடுகள், காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, பெண்ணிய இலக்கியம் போன்ற பல தரப்பட்ட சிந்தனை வளக்கோட்பாடுகள் பொதிந்து கிடக்கின்றன.
சங்க இலக்கிய ஈகைக் கோட்பாடு.
பசியும் பாலுணர்வும் உயிரினங்களுக்கு இயற்கை அளித்த கொடை. உயிரினங்களின் சந்ததிச் சங்கிலி அறுபடாமல் தொடர, தமது இனத்தைத் தொடர்ந்து பெருக்கிக்கொண்டே செல்ல, இனப்பெருக்கத்திற்கான இயல்பூக்கமாக பாலுணர்வு அமைந்தது. உயிரினங்கள் வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும் இதன்பொருட்டே. வாழ்தலுக்கு உணவு தேவை. உணவுண்ணத் தேவைப்படுவது பசி என்னும் இயல்பூக்கம். பசி இயற்கையானது. பசியாறத் தேவைப்படும் உணவு இயல்பாய்த் தேவைப்படும் போதெல்லாம் கிடைத்துக் கொண்டிருக்கும்வரை உயிரினங்களுக்குப் போராட்டம் இல்லை. மனித சமூகத்திற்கும் இதே விதிதான்.
உணவு உள்ளவன் உணவு இல்லாதவனுக்குப் பகிர்ந்தளித்த சங்க காலத்து குறுநிலத் தலைவர்கள், மன்னர்கள் என்று வருணிக்கப்பட்ட வள்ளல்களிடம் இயல்பாக இருந்தது. இந்தவகை உணவுப் பங்கீட்டில் கொடுப்பவன், பெறுபவன் என்ற ஏற்றத்தாழ்வு இருப்பதில்லை. இந்நிலை காலப்போக்கில் மாற்றமடைந்து உடைமைச் சமூகத்தில், உணவு உள்ளவன் உணவு இல்லாதவனுக்கு இரக்கத்தோடு உணவளித்தல், வழங்குதல், ஈதல் என்ற அறமாக மாற்றம் பெற்றது..
குறுநிலத் தலைவர்களின் இவ்வகை உபசரிப்பு குறித்த பாடல்கள் பல புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலைச் சான்றாகக் காண்போம். அதியமான் நெடுமான் அஞ்சியைக் குறித்து ஒளவையார் பாடிய பாடலின் பகுதி இது,
''புன்தலைப் பொருநன் அளியன் தான்எனத்
தன்உழைக் குறுகல் வேண்டி, என்அரை
முதுநீர் பாசி அன்னஉடை களைந்து
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ
மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்
அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி
முன்னூர்ப் பொதியில் சேர்ந்த மென்னடை
இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற
அகடுநனை வேங்கை வீகண் டன்ன
பகடுதரு செந்நெல் போரொடு நல்கி
கொண்டி பெறுக என்றானே "
(புறநானூறு பா. 390)
அதியமான் தன் நெடுமனை முற்றத்தில் நின்று முன்னிரவு நேரத்தில் தடாரிப் பறையை இசைக்கும் பொருநனைக் கண்டவுடன், இப்பொருநன் இரங்கத் தக்கவன் என்று கருதி அவன் இடையிலிருந்த நீர்ப்பாசியன்ன பழைய ஆடையை நீக்கி மலர் போன்ற புத்தாடையை அணியுமாறு செய்து மதுவோடு ஊன் துவையையும் சோற்றையும் வெள்ளிக் கலத்தில் இட்டு அதனை உண்பித்ததோடு அவன்சுற்றத்தாரது வறுமைத் துயரத்தையும் போக்க நெற்குவியலையும் கொடுத்தான் என்று ஒளவையார் பாடுகின்றார்.
மற்றுமொரு பாடல், 'பாணன் ஒருவன் ஓய்ந்த நடையினை உடையவனாய் வருத்தத்துடன் பலா மரத்தினடியில் தன் சுற்றத்துடன் தங்கியிருந்த போது அங்கு வந்த வில்லையுடைய வேட்டுவன் ஒருவன் விலங்கின் ஊனைத் தீயினில் சுட்டு அவர்களை உண்ணச் செய்ததோடு, தான் காட்டு வழியில் இருப்பதால் அவர்களுக்குக் கொடுப்பதற்கு வேறு பரிசுப் பொருள்கள் இல்லை என்றுகூறித் தனது மார்பில் அணிந்திருந்த முத்து வடங்களையுடைய ஆரத்தையும் முன்கைக்கணிந்த கடகத்தையும் கொடுத்தான் என்றும் அவனது பெயரையும் நாட்டையும் கேட்டபோது கூறாமல் போய்விட்டான் என்றும் வழியில் பிறரைக் கேட்டபோது அவன் கண்டீரக்கோ பெருநள்ளி என்பதைப் பாணன் அறிந்தான் என்றும் வண்பரணர், பெருநள்ளி என்ற குறுநிலத் தலைவனின் புகழ்விரும்பா வள்ளண்மையைப் புகழ்கின்றார்.
வீறுசால் நன்கலம்
பிறிதுஒன்று இல்லை, காட்டு நாட்டேம்என
மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம்
மடைசெறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்
எந்நாடோ என நாடும் சொல்லான்
யாரீரோ எனப் பேரும் சொல்லான்
(புறநானூறு பா. 150)
தம்பெயர் மற்றும் ஊரின் பெயரைக் கேட்டும் சொல்லாமல், உணவும் பரிசிலும் வழங்கிச் சென்ற கண்டீரக்கோ பெருநள்ளியின் செயல், உடைமைச் சமூக அறம், ஈகை குறித்த சொல்லாடல்களிலிருந்து வேறுபட்டது.
ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் ஆய் அண்டிரனின் வள்ளண்மையைப் புகழும்போது
இம்மை செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறிஎன
ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே
(புறநானூறு பா. 134)
ஆய் அண்டிரனின் கைவண்மை மறுமை நோக்கிச் செய்யப்பட்ட அறமன்று என்றும் அப்படி மறுமை நோக்கிச் செய்யப்படும் ஈகை அறம் அறத்தை விலைகூறி விற்கும் வணிகத்தை ஒத்தது என்றும் முடமோசியார் பாடுகிறார். அவர் பாடுவதிலிருந்து ஆய் மன்னன் காலத்திலேயே பாணர் மரபினரைப் பேணி உபசரிக்கும் அறமதிப்பு பெறாத பகுத்துண்ணும் மரபும் புலவர் மரபினரைப் போற்றிப் புரந்து பரிசில் வழங்கும் அறமதிப்புடைய ஈகை அறமும் வழக்கில் இருந்ததனைக் கவனத்தில் கொள்ளலாம்.
பாணர் மரபினரைப் புரக்கும் குறுநில மன்னர் /தலைவர்களின் செயல்களில் வரிசை அறிதல் இல்லை. ஆனால் புலவர் மரபினருக்கு வழங்கப்படும் ஈகையில் வரிசை அறிதல் உண்டு. வரிசை அறியாது மன்னன் தரும் பரிசில் புலவர்களால் கடியப்பட்டது. மலையமான் திருமுடிக்காரி புலவர்களிடத்துப் பொதுநோக்கு உடையவனாய் இருந்தமையைக் கபிலர் கடிந்து கூறிப் பாடிய பாடல் வருமாறு,
ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசை
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே, மாவண் தோன்றல்
அதுநன்கு அறிந்தனை யாயின்
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே
(புறநானூறு பா. 121)
ஈகை எளியசெயல், பரிசுபெற வந்தவர்களின் தகுதியை அறிந்து வழங்குவதுதான் அரியசெயல். எனவே புலவர்களைப் பொறுத்தமட்டில் பொது நோக்கைக் கைவிடுவாயாக என்கிறார் புலவர். அதியமான் நெடுமானஞ்சியிடம் பெருஞ்சித்திரனார் என்ற புலவர் பரிசில் பெறச் சென்றபோது, மன்னன் அவரை நேரில் காணாமலே அவருக்குப் பரிசுப் பொருள்களைக் கொடுத்தனுப்புகின்றான்.
காணா தீத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
திணையனைத் தாயினும் இனிதவர்
துணையள வறிந்து நல்கினர் விடினே
(புறநானூறு பா. 208)
ஷஷபல குன்றுகளும் மலைகளும் கடந்து வந்த என்னை நயந்து நேரில் காணாமலேயே, ''இப்பொருள்களைப் பெற்றுக்கொண்டு செல்க" என்று சொல்ல வேந்தன் எவ்வாறு என்தகுதியை அறிந்துகொண்டான். என்னைக் காணாமல் தந்த இப்பரிசுப் பொருள்களைப் பெற்றுச்செல்ல நான் வாணிகப் பரிசிலன் அல்லன். புலவர்களது கல்வி, புலமை முதலான தகுதிகளை அறிந்து விரும்பித் தினையளவு பரிசு கொடுத்தாலும் அதுவே நன்று என்கிறார் பெருஞ்சித்திரனார்.பாணர் மரபினருக்கு வரிசை அறிதல், அதாவது பெறுபவன் தகுதியைப் பற்றிய எந்த ஓர்மையும் இல்லாமல் அவன் பசி மற்றும் தேவைகளை மட்டுமே கருதி பகிர்ந்தளிக்கப்பட்ட /வழங்கப்பட்ட ஈகை, மாற்றம் பெற்றுப் புலவர் மரபினர்க்கு வழங்கப்படும் போது பசி மற்றும் தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வழங்குபவன் தகுதி, பெறுபவன் தகுதி முதலான அளவுகோல் களுக்கிடையே அறத்தகுதியும் பெறுவதாயிற்று. இவ்வகை ஈதலறம் கொடுப்பவன் பெறுபவனுக்கிடையிலான வணிகமாகவும் பரிணாமம் பெற்றது. வணிகத்தில் கொடுப்பது பெறுவது இரண்டும் ஒரே சமயத்தில் நடைபெறும். இவ்வகையில் கொடுப்பவன் பொருள்களைக் கொடுக்கிறான் கொடுத்ததற்கு மாற்றாக இவ்வணிகத்தில் எதைப்பெறுகிறான் என்றால் ஈத்துவக்கும் இன்பத்தையும் புகழாகிய இசையையும் பெறுகின்றான். பெறுபவன் நிலையிலிருந்து பார்த்தாலும் இந்தவகைப் பரிமாற்றம் நடைபெறுகின்றது. அறவிலை வணிகன் ஆஅய் அல்லன், வாணிகப் பரிசிலன் அல்லேன் முதலான சங்க இலக்கியச் சொல்லாடல்கள் அறம் வணிகமாகிப் போன நிலைமையை எதிர்மறையில் பதிவுசெய்கின்றன. சங்க காலத்திலேயே இம்மையில் ஒருவன் செய்த நன்மை மறுமையில் அவனுக்குப் பெரிய இன்பமாக வந்து விளையும் என்னும் கருத்து நிலைபெறத் தொடங்கிவிட்டது.
எத்துணை யாயினும் ஈத்தல் நன்றுஎன
மறுமை நோக்கிற்றோ அன்றே, பிறர்
வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே
(புறநானூறு பா. 141)
என்று வையாவிக் கோப்பெரும் பேகனின் கைவண்மையைப் புகழ்ந்துரைக்கின்றார் பரணர். இப்பாடலும் நமக்கு இருவகை ஈகையைச் சுட்டிக்காட்டுகின்றது. ஒன்று பிறர் வறுமை நோக்கிய ஈகை. மற்றொன்று தம் மறுமை நோக்கிய ஈகை. இரண்டாவது வகை ஈகையே அறத்தகுதி பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.
இல்லற அறம் ஈகையும் விருந்தோம்பலும்.
குழுத் தலைவர்களின், அரசர்களின், வேந்தர்களின் வழங்கல் மரபு பங்கிட்டுண்ணல், கொடுத்தல், ஈகை என்றெல்லாம் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து அறம் என்ற புதிய வடிவமெடுத்த பின்னர், இயல்பாகச் சக மனிதனின் பசியாற்றல் என்ற உயிர்ப் பண்பிலிருந்து மேலெழுந்த ஈகை, இல்லறக் கடமையாகவும், இல்லறத்தானின் கடமையாகவும் புதிய பரிமாணம் பெற்றது. இந்நிலை உடைமைச் சமூகத்தில், இல்- அறம் என்றானது. மன்னர்களைப் பாடிப் பரிசில்களாகக் கொண்டுவந்த பலவகைப் பொருட்களையும் தானே வைத்து அனுபவிக்க வேண்டும் என்று நினைக்காமல் எல்லோருக்கும் கொடு என்கிறார் ஒரு புலவர்.
நின்நயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும்
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னார்க்கு என்னாது என்னொடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே!
(புறநானூறு பா. 163)
''குமணவள்ளல் தந்த இந்த வளங்களை எல்லாம், கொடு, கொடு, எல்லோர்க்கும் கொடு, உற்றார் உறவினர்களுக்கும் நம்முடைய வறுமைக்காலத்தில் நமக்குத் தந்து உதவியவர்களுக்கும் கொடு. யாருக்குக் கொடுப்பது என்று யோசிக்க வேண்டாம். என்னைக் கேட்காமலேயே கொடு, இந்த வளங்களையெல்லாம் நாமே வைத்துக்கொண்டு வளமாக வாழலாம் என்றெல்லாம் நினைக்காமல் எல்லோர்க்கும் கொடு'' என்று மனமகிழ்ச்சியோடு மனைவிக்கு அனுமதி வழங்குகின்றார் பெருஞ்சித்திரனார்.
சங்க காலத்தில் உடைமைச் சமூக அமைப்பு மெல்லத் துவங்கி இறுக்கம் பெற்ற நிலையில் இருப்பவன் -இல்லாதவன் இடையிலான வேறுபாடு பெரிதாகத் தெரியத் தொடங்குகிறது. உடைமைச் சமூகத்தின் உடனடி விளைவான பசியும் பட்டினியும் சமூகச் சிக்கல்களாகின்றன. உடைமையாளர்களுக்குப் பிறர் பங்கைத் திருடிய குற்றஉணர்வு சிறிதுமில்லை. உடைமைச் சமூகத்தை நியாயப்படுத்தவும் இருக்கிற சமூக அமைப்பைக் கட்டிக் காக்கவும் உருவாக்கப்பட்ட அறங்கள், ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் உள்நோக்கத்தோடு கொடையை, ஈகையை, விருந்தோம்பலை முன்மொழிகின்றன. ஷசெல்வத்துப் பயனே ஈதல் என்கிறபோது ஈகைக்குப் பயன்படுகிற செல்வம், ஈகைக்காகவே செல்வம் என, செல்வம் நியாயப்படுத்தப்படுகிறது. உபரி உணவும் சொத்தும் பொருளும் அறத்தோடு பிணைக்கப்பட்டு விட்டதால் குற்றமற்றதாகி விடுகின்றன.
''ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்''
(குறுந்தொகை- 63)
என்றும் பொருளைத் தேடுவதே பிறருக்குக் கொடுக்கத்தான் என்னும் பொருளில்
''பிறர்க்கென முயலும் பேரருள் நெஞ்சமொடு
காமர் பொருட்பிணி போகிய நங்காதலர்''
(நற்றிணை- 186)
என்றும் சங்க இலக்கியங்கள் அறத்தின் பேரால் நியாயம் பேசின.
சஙக இலக்கியங்களில் பகிர்ந்துண்ணல், கொடை, பரிசில், உணவிடல் என்ற பலநிலைகளில் சமூக வழக்கிலிருந்த ஈகை, திருக்குறள் முதலான நீதி நூல்களில் சமண, பௌத்த மதச்சொல்லாடல்களுக்கு ஒப்பப் பசி தீர்த்தல் என்ற பொருளில் இறுக்கம் பெற்றது. அற்றார் அழி பசி தீர்த்தல் (குறள்- 226) ஈகை, வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை (குறள்- 221) என்றெல்லாம் ஈகை அறம், பசி தீர்த்தல் அதுவும் வறியவனின் பசியைத் தீர்த்தல் என்ற பொருளில் வலியுறுத்தப்பட்டது. புகழ் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் ஈதலால் இசைபெறலாம் என்று ஈகையைப் புகழோடு இணைக்கின்றார். விருந்தோம்பல் என்ற சங்க இலக்கியத்து ஈகையைத் திருவள்ளுவர் இல்லறத்தான் கடமைகளில் ஒன்றாகத் தனித்து வலியுறுத்துகின்றார்.
சங்க கால பெண்களின் சமத்துவமான சுதந்திரம்.
பெண்ணிய சிந்தனை என்பதும் பெண்ணிய இலக்கியம் என்பதும் நமக்கு புதிதல்ல. சங்ககால புலவர்களில் பல பெண்பால் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். ஔவையார் அவர்களில் புகழ்பெற்றவர். பின்னர் தோன்றிய பக்தி இலக்கிய காலத்திலும் பல பெண் கவிகள் இறையை போற்றி பாடி அமரத்துவம் எய்துள்ளனர். ஆண்டால், காரைக்கால் அம்மையார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர். அக்கால பெண்பால் கவிகளின் பாடுபொருள் இயற்கை, இறைபக்தி, நன்னெறி கூறுகள் போன்ற வற்றை அடிப்படையாக கொண்டிருந்தது. அக்காலகட்ட மக்களின் வாழ்க்கை முறையில் பெண்களின் பங்களிப்பு பலவகையிலும் மாறிக் கொண்டே வந்திருப்பதை இலக்கியங்களில் காண முடிகிறது. சங்க கால மகளிரிடம் சுதந்திரம் காணப்பட்டது.சங்க பாடல்கள் உணர்த்தும் பெண் வாழ்க்கை சுதந்திரம்.
யாரும் இல்லை; தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.
No comments:
Post a Comment