இலங்கைத் தீவானது, பெளத்த அரசனின் ஆளுகைக்கு உட்பட்டு பெரும்பான்மையான மக்கள் வாழ்ந்து வந்ததனால், அவர்கள் அனைவரும் பெளத்தர்களாக மாறிவிட்டிருந்தனர்.அரசன் பெளத்தனாக இருந்ததனாலா? இல்லை அரசனின் மீதான பயமா? எனத் தெரியாத அவர்கள் பெளத்தத்தையே தழுவி வாழ்ந்து வந்தனர்.
இலங்கைத் தீவிலிருக்கும் சிவாலயங்களை தரிசனம் செய்ய தமிழகத்து சிவத் தொண்டொருவர் இலங்கைக்குச் சென்றிருந்தார். அவர் சென்று தரித்த ஆலயங்களிலெல்லாம் *"பொன்னம்பலமே" "பொன்னம்பலமே"* என்று கூறி கூறி தொழுது தொடர்ந்த வண்ணமிருந்தார். சிவாலயத்தில் *"பொன்னம்பலமே"* எனக் கூறி தரிசனம் செய்த போது, அச்சமயம் சிவத்தொண்டரைக் கண்டனர். பெளத்த குருமார்கள், சிவனடியாரின் தோற்றத்தையும், ஓயாமல் அவர் கூறும் *"பொன்னம்பலமே"* திருவாக்கினையும் கேட்கவும், பார்க்கவும், பொறாமைத் தீயினால் பொருமினர். உடனடியாக அரசனிடம் சென்று முறையிட்டனர்.
பெளத்த குருமாரை விட அதிகம் கோபம் கொண்டான் அரசன். அந்த சிவத்தொண்டரை அழைத்து வரும்படி சேவகர்களுக்கு உத்தரவிட்டான் மன்னன். அரசவைக்கு வந்தார் சிவத்தொண்டர். அவர் அரசனிடம், தன்னாட்டிலுள்ள சிதம்பரநாதனின் அருள் பெருமழைகளை எடுத்துரைத்தார். எனவே தன் தாய்சமயத்தின் மீது உயிராக கலந்துருகியுளேன் என பெருமிதமாக உரைத்தார்.
இதைக் கேட்ட அரசவையில் இருந்த மூத்த புத்த குரு சினத்துடன் எழுந்தார். *"புத்தனே கடவுள்" பெளத்தமே உண்மையானது"* என வாதித்து கத்தினார். அதோடு விடாது, உன் பொய்யுரைப்புக்களை சிதம்பரம் வந்து காணக் காட்டுவேன், சிவனின் காற்சிலம்பைக் கழட்டுவேன், நந்திக் கொடியை அறுப்பேன், பெளத்தமே உண்மையானதெனச் சொல்லி சிதம்பரத்தினின் கோயிலை பெளத்தமாக்குவேன் என்று அகங்காரத்தில் ஊளையிட்டான்.
அவையில் சிவத்தொண்டர் கூறிய, சிதம்பரநாதனின் அருள்மழைகளை பொழிந்த விபரங்கள், அரசனின் மனவோட்டத்தில் ஏதோதொன்றை கிரகிக்கச் செய்தன. அந்த மன வோட்டத்தில் நாளை புறப்படும் தமிழகத்துக்கு தன்னோடு தனது பிறவி ஊமையான மகளையும் அழைத்துப் போக முடிவு செய்தார். பெளத்த அரசனும், மூத்த பெளத்த குருமாரும் தமிழகம் புறப்பட்டனர்.
சிதம்பரம் ஆலயம் வந்து சேர்ந்த அவர்கள், அங்கேயே அமர்ந்து சிவனடியார்கள் எல்லோரையும் வாதம் செய்ய வாருங்கள் என கூவி அழைப்பு விடுத்தான். உங்கள் அறிஞர்களிடமும், சேழ மன்னன் முன்பும் பெளத்தமே உண்மையான மதம் என்பதை நிரூபிக்க வந்துள்ளோம், என்று ஆலய நிர்வாகிகளிடம் புத்தகுருமார் கூறினார். இவ்வளவான சேதிகளை கேட்ட சிவனடியார்கள், சிவஞானிகளிடமும், சைவ நூல் அறிஞர்களிடமும் இச்செய்தியைக் கொண்டு சென்றனர். சோழ நாட்டு மன்னருக்கும் நடந்தவற்றை ஓலையெழுதி கொடுத்தனுப்பினார்கள்.
சைவப் பெரியோர்கள் அனைவரும் கூடி முடிவெடுத்தனர். இப்பெளத்தர்களோடு வாதத்தில் வெல்ல நம் மாணிக்கவாசகப் பெருமானே தகுதியானவர் என்று சபை முடிவெடுத்தது. மாணிக்கவாசகர் எங்கிருக்கிறாரென தேடி வருகையில், காட்டில் தவத்திலிருக்கிறார் என செய்தி கிடைத்தது. தவத்திலிருந்த அவரை *"திருவைந்தெழுத்து ஓதி விழிப்புணர்வு நிலை உருவாக்கி"* .....நடந்த விபரங்களைக் கூறி, பெளத்த குருமார்களோடு வாதம் செய்ய புறப்பட்டார்கள். சபை கூடியது.
பெளத்தத்தின் சமய நெறி உண்மைகளை பட்டியலாக படித்தனர் பெளத்தர்கள். புத்தனின் போதனைகளையும் கூறினார்கள். அவர்கள் கூறும் நெறியையும், போதனையையும் கேட்டு, அதற்கு மறுத்து வாதம் புரிந்து, சிவபெருமானின் பெருமைகள், லீலைகளை காட்டி விளக்கி சைவ சமய உண்மைகளை எடுத்துறைத்தாா் மாணிக்கவாசகர்.
ஒவ்வொரு வாதத்திலும் தோல்விச் சருக்கினைப் பெற்ற பெளத்தர்கள், தோல்விகளைப் பொறுக்க மாட்டாத பெளத்த குரு, கடைசியாக அநாகரிகமான வார்த்தைகளை உபயோகப் படுத்தத் தொடங்கினார்கள். தனக்கென்று ஒரு குறைவே காணினும், தாய்ச்சமய நெறிக்கென்று ஒன்றென்றால் அது மணிவாசகர் பொறுப்பாரா? கோபம் பொங்கித்தான் வந்தது, ஆனால் கோபத்தைக் காட்டாமல்.... மாணிக்கவாசகர், அநாகரீக வார்த்தை உதிர்த்த பெளத்த குரு ஊமையாகிப் போகுமாறு இறைவனிடம் வேண்டினார். அவ்வளவுதான், பெளத்த குருமார் ஊமையாகிப் போனார்.
இதைக் கண்ட பெளத்த மன்னன், ஏற்கனவே இலங்கையிலேயே மனவோட்டத்தில் கிரகித்துப் போயிருந்தவன், நடந்த சம்பவத்தைக் கண்ணுற்ற அவன், மாணிக்கவாசகரின் பாதகமலங்களில் வீழ்ந்து வணங்கினான். பிறவி ஊமையாகயிருக்கும் தன் மகளைப் பேச வைக்கும்படி மாணிக்கவாசகரிடம் வேண்டினார். அதன்படி மாணிக்கவாசகர், ஊமைப்பெண்ணை இறைவன் திருவருளுடன் பேச வைத்தார்.
தன்னுடன் வாதித்த பெளத்த குருவின் இருபது சீடர்கள் கேட்கின்ற சமயம் தொடர்பான நுட்பமான இருபது கேள்விகளுக்கும் பதிலளிக்கும்படி ஊமைப் பெண்ணிடம் சொன்னார். ஊமைப் பெண்ணும், அக்கேள்விகளுக்கு உண்மைகளும் நுட்பங்களும் பொருந்திய கேள்விகளுக்கு விபரமாக பதிலுறைத்தாள். இதன் காரணத்தால் அச்சமயத்தில் அங்கிருந்த புத்த குருவும் அவருடன் வந்திருந்த சீடர்களும் மனம் அழுக்கு நீங்கிப் போய், மாணிக்கவாசகரின் திருவடி பணிந்து திருநீறு பெற்று சிவமதம் சார்ந்தனர்.
இருபது பெளத்த சீடர்கள் கேட்ட கேள்விகளுக்கு , இலங்கை மன்னன் புதல்வி ஊமைக் குறை நீங்கி இருபது கேள்விகள்க்கான விடைகளையும் கூறினாள். அவ்விடைகளானாவைகளை கோர்த்தமைத்தவையே *திருச்சாழல்* என்னும் இருபது பாட்டுக்களை மாணிக்கவாசகர் அருளிச் செய்தவையாகும்.
அதன்பின்னர் தாய்ச்சமயத்தை நிந்தித்து அபவாதம் செய்த, மனந்திருந்தாமலிருந்த பெளத்தர்களை கரும்பாலையிலிட்டும், கழுவேற்றியும் தண்டிக்கும்படி சோழ மன்னனிடம் வேண்டினான் இலங்கை மன்னன்.
இலங்கை மன்னின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட சோழ மன்னன் அவ்வாறே தாய்ச்சமயம் திரும்பாத தாய்ச் சமயத்தை நிந்தித்த பெளத்தர்களுக்கு தண்டனையை வழங்கினான்.
ஆவுடையார் கோயில் திருத்தலத்தில் *ஆத்மநாத சுவாமி கோயில்* சுவர்களில் பெளத்தர்களைக் கழுவேற்றிய மற்றும் கரும்பாலையிலிட்ட காட்சியினை ஓவியமாக வரைந்து வைக்கப்பட்டு இருப்பது சான்று பகருகின்றது.
மாணிக்கவாசகர் தில்லையில் புத்தரை வாதில் வென்று இலங்கை மன்னனது ஊமைப் பெண்ணைப் பேசும்படி செய்து, புத்தரையும் அம்மன்னனையும் சைவராக்கினார்.
No comments:
Post a Comment