இலங்கைக்கு புத்த மதம் வந்தபோது இருந்த மன்னன் யார்?
மகாவம்சக் கூற்றுப்படி இலங்கைக்குப் புத்த மதம் வந்தபோது அரசனாக இருந்தவன் யார் என்பது ஒரு பெரிய சந்தேகம். புத்த மதம் இலங்கைத் தீவுக்குள் நுழைந்தபோது இலங்கையை ஆண்ட மன்னன் மூத்தசிவனின் (மூத்த+சிவம்) மகன் தேவனாம்பிய தீசன். இவன்தான் மகிந்ததேரரை (அசோகனின் மகன் மகேந்திரன்-மகாவம்ச கூற்றுப்படி) வரவேற்றது. இவன் ஒரு தமிழ் மன்னன்.
இங்கு கூறப்படும் மூத்தசிவனின் மகனான தேவனாம்பிய தீசன் வேறு; அசோக மன்னனின் அடைமொழியைத் தன் பெயராக வைத்துக்கொண்ட தேவனாம்பிரிய தீசன் வேறு.
தேவனாம்பிரிய~என்றால் தேவனுக்குப் பிரியமான என்பதைக் குறிக்கும். இங்கு தேவன் என்பது புத்தரைக் குறிக்கிறது. தீசன் என்பது மோகாலி என்பவருடைய மகன் ஆகிறது. இந்த மோகாலி, அசோக மன்னனின் காலத்தில் இருந்த புத்தமகாசபையின் தலைவர் ஆவார்.
இக்குறிப்புகள் மூலம் சிங்கள வரலாற்று அறிஞர்கள் அசோகனின் மகனான மகிந்ததேரரை வரவேற்றது தமிழ் மன்னன் மூத்தசிவனின் மகனான தேவனாம்பிய தீசன் என்பதைத் திரித்து புத்த மகாசபையின் தலைவர் மோகாலியின் மகனான தேவனாம்பிரியதீசன் என்று உண்மைக்கு மாறாக வரலாற்றை உலகிற்குக் கூறுகின்றனர்.இந்த திரித்தல் வேலை ஏன் நடைபெற வேண்டும்?
விடை சுலபமானது. இந்த திரித்தல் மூலம் மகிந்ததேரரை வரவேற்றது தேவனாம்பிரியதீசன் என்று குறிப்பிட்டுவிட்டால் தமிழர்களுக்கு முன்பாகவே புத்தர்கள் இலங்கையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்று வலியுறுத்த முடியும். அதற்காகவே தேவனாம்பியதீசன்~தேவனாம்பிரிய தீசன் ஆகிய இருபெயர்களிலும் இருக்கும் ஓர் எழுத்து (ரி) வித்தியாசத்தை மூடி மறைத்து தேவனாம்பிய தீசனுக்குப் பதில் தேவனாம்பிரிய தீசனை நுழைக்கிறார்கள். இப்படி நுழைப்பதன் மூலம் புத்தமத வாதத்திற்கு மேலும் வலுவிருக்கும் என்று நம்புகின்றனர் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும்.
இரண்டு சாம்ராஜ்யாதிபதிகளும், அதாவது தேவனாம்பிரியதீசனும் தம்மசோகாவும் ஏற்கெனவே ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதில்லை. இருப்பினும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நட்புக் கொண்டிருந்தார்கள்'' (மகாவம்சம் ௧௧:௧௯) என்பதாகும்.
இதிலிருந்து தேவனாம்பிரிய தீசனும் தம்மசோகாவும் (தர்ம அசோகர்) வேறுவேறு மன்னர்கள் என்பதும் அவர்கள் நட்புரிமையுடன் பழகி வந்தார்கள் எனவும் தெரிகிறது. சிங்கள அறிஞர்களின் கூற்றுப்படி மோகாலியின் மகன்தான் அசோகனின் மகனை வரவேற்றது என்பது உண்மையானால், அசோக மன்னனை அவன் சந்திக்காது இருந்திருக்க முடியுமா என்பது வரலாற்று அறிஞர்களின் கேள்வியாக இருக்கிறது.
சிங்கள வரலாற்று அறிஞர்கள் இத்துடன் நின்று விடவில்லை. சிங்கள இனத்தை ஆரிய இனமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக மேலும் பல திரிப்பு வேலைகளைச் செய்கிறார்கள். தென்னிந்தியாவில் மதுரையையும் அதை ஆண்ட பாண்டியர்களையும் பற்றிய குறிப்புகளை (மகாவம்சத்தில் வரும்போது) யமுனை நதிக்கரையில் வாழ்ந்த பாண்டுவுடனும், முத்ராவுடனும் முடிச்சுப்போட்டு திரிக்கின்றனர்.
அதுமட்டுமல்ல; மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் இலங்கைக்கு, இந்தியாவுடனான தெற்கத்திய தொடர்புகளைப் பற்றி ஏனைய அறிஞர்கள் ஏற்றுக் கொண்டாலும், சிங்களவர்கள் மட்டும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை, என்றும் பொருளாகிறது.
இப்படி யமுனை நதிக்கரைப் பாண்டுவோடும், முத்ராவோடும் விஜயனைத் தொடர்புப்படுத்தித் திரித்துக் கூறுவதன் மூலம் மகாவம்சத்தின் ஆசிரியர் மகாநாமதேரரைக் கேலிக்குரியவராக்குகிறார்கள் என்பதே பொருள்.
வேதகாலத்திற்குப் பின் குருவம்சம் மிகச் சிறப்பான ஒரு பழங்குடி வம்சம் என்று இந்திய வரலாறு (பக். 46-இல்) எழுதிய சின்ஹா~பானர்ஜி தெரிவிக்கிறார்கள். மிகச் சிறப்பான வம்சம் என்று கருதப்படும் குருவம்சத்துடன் விஜயன் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் கீழான நாகரிகம் கொண்ட யமுனை நதிக்கரைப் பாண்டுவுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக மூல நூலான மகாவம்சம் கூறியிருக்க முடியுமா? (1) இலங்கையின் ஆதிக்குடிகளான தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களே என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
தமிழர்கள் மீது தொழிலிகளை அடிப்படையாக கொண்ட சாதிய முறமையை திணித்தவரும் , கிறிஸ்தவ மதத்தை திணித்தவரும் , தமிழர்களின் ஒலை சுவடிகளை கொள்ளையிட்டவருமாகிய கால்டுவெல் கருத்துப்படி முதல்சங்க, இடைச்சங்க காலத்தில் நிகழ்ந்த கடல் கொந்தளிப்பின் விளைவாக லெமூரியாக் கண்டத்திலிருந்து பிரிந்த நிலத்திட்டுத்தான் இலங்கை ஆகும். இதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள புராதனத் தொடர்பை அறிய முடியும். மேலும், சின்ஹா~பானர்ஜி தமது இந்திய வரலாற்றில் குறிப்பிடுகையில் வரலாற்றுக்கு முந்தைய திராவிடர்கள் கடற்பயணம் மேற்கொண்டு அதன் மூலம் வணிகத்தில் சிறந்து விளங்கினார்கள்; சிறந்த பயன் அடைந்தார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அதுபோலவே, ஆங்கில வரலாற்று ஆசிரியர் டியோலி கிழக்கத்திய மற்றும் தூரக்கிழக்கு நாடுகளோடு மிக நீண்ட காலமாகவே வணிகத் தொடர்பினைத் தமிழர்கள் கொண்டிருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார்.
ஆனால், வட இந்திய ஆரியர்கள் கடல் போக்குவரத்துப் பற்றிய தெளிவான அறிவினை கொண்டிருந்தார்கள் என்று நம்புவதற்குப் போதிய ஆதாரம் இல்லை. கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு, சமீபத்தில் அங்கு நடந்த அகழ்வாய்வுச் சான்றுகளின் மூலம் அறியப்படுகிறது. அச்சான்றுகளை மூன்று பிரிவாக வகைப்படுத்தலாம்.
1. சிர்கா (Circa-Wintle and Oakley-1972) குகை ஓவியம்
2. அநுராதபுரத்தைச் சேர்ந்த ""கிடுக்கி'' பகுதி அகழ்வாய்வுகள் ((Gadige-S. Deraniyagala-1972; S.Deraniyagala-1971))
3. பொன்பரப்பி (Ponbarippu) குருகல் கின்னா (Gurugal hinna) கதிரவெளி (Katiraveli) போடியகம்பளை (Podiya Gampala).
இப்பகுதியில் கிடைத்த சான்றுகள் தென்னிந்தியத் தொடர்போடு இலங்கைக்கிருக்கும் நெருக்கத்தை சுட்டிக் காட்டுகின்றன.
முதல் பிரிவான சிர்கா மற்றும் குகை ஓவியச் சான்றுகளின்படி அவை சுமார் கி.மு. 4500-க்கு முந்தைய காலத்தைச் சார்ந்தன என அறிஞர்கள் மதிப்பீடு செய்கின்றனர். இவைகளின் காலத்தை வரையறுக்கும்போது இச்சான்றுகள் ஸ்ட்ராட்டம்-1 ((Stratum-1) காலம் என மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் வரையறுக்கின்றனர்.
மனித சமூகம் காட்டுமிராண்டிக் கால நிலையிலிருந்து வேட்டையாடுவதை விட்டுவிட்டு, நாகரிகமடைந்து, ஓரிடத்தில் நிலையாகத் தங்கி விவசாயம் செய்யும் தொழிலில் இறங்கியது வரையிலான வளர்ச்சிக் காலத்தை, மானுடவியலாளர் ""ஸ்ட்ராட்டம்'' என்று குறிப்பிட்டு, அதன் வளர்நிலையைக் கணிக்கின்றனர். அதன்படி ""சிர்கா'' பகுதியின் காலம் முதல் பிரிவைச் சார்ந்ததாகிறது. மனித சமூகம் கல் ஆயுதத்தைப் பயன்படுத்திய காலம். இந்தப் பகுதியில் கல் ஆயுதங்கள் மற்றும் அக்கால மனித சமூகம் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்தன.
அதேபோன்று இரண்டாவது பிரிவான அநுராதபுரத்தின் கிடுக்கிப் பகுதியில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்த ஆயுதங்கள், நாணயங்கள், ஓடுகள் ஆகிய சான்றுகளின் மூலம் இவைகளின் காலம் ஸ்ட்ராட்டம் ஐஐ-ன் காலம் என அறிஞர்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் கிடைத்த நாணயங்களை மதிப்பீடு செய்த அறிஞர் மறைதிரு டாக்டர் எஸ். தனிநாயகம், ""குறைந்தபட்சம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் மொகஞ்சதாரோ, ஹரப்பாவின் காலத்தை ஒட்டிய தமிழர்களின் சிந்துவெளி நாகரிக வரலாற்றைச் சேர்ந்தவை'' என்கின்றார்.
மூன்றாவது பிரிவைச் சார்ந்த பொன்பரப்பி, குருகல்கின்னா, கதிரவெளி, போடிய கம்பளை, யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளின் அகழ்வாய்வுகளில் இரும்பாலான ஆயுதங்களும், அக் காலத்தைச் சேர்ந்த பொருட்களும் கிடைத்தன. இவை தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்ட ஆதித்தநல்லூரில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியை ஒத்தும் தமிழ் எழுத்துக்களுடன் காணப்படுகின்றன ஆகையால் அப்பகுதி மக்கள் இரும்புக் காலத்தைச் ((Megalithic Age) சேர்ந்தவர்கள் என கணிக்கப்படுகின்றனர். இந்தச் சமூக மக்கள் இரும்பைப் பயன்படுத்த தெரிந்துகொண்டு, அலைந்து திரியும் நாடோடிக் கூட்டமாக இல்லாது ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ்ந்தனர். விவசாயத்தை அறிந்து இருந்தனர். மூன்றாவது பிரிவைச் சார்ந்த அகழ்வாய்வுச் சான்றுகளின்படி இரும்பாயுதக் காலத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இக்காலமே ஸ்ட்ராட்டம்-IIIA ஆகும். இந்த ஆய்வுகளின்படி கிடைத்த தகவல்களிலிருந்து பார்க்கையில் இவை தென்னிந்திய இரும்புக் காலத்தை (கி.மு. 800-100) ஒத்து உள்ளன. மேலும், இப்பகுதி வாழ் மக்கள், குடியிருப்பு விவசாயத்தை மேற்கொண்டிருந்த தமிழர்கள் என வரலாற்று அறிஞர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.
ஆக மேற்கண்ட அகழ்வாய்வுகளின் மூலம் இலங்கை வாழ் பூர்வகுடிகள் அம்மண்ணில் குளங்களின் மூலம் பாசனம் செய்து விவசாயத்தை மேற்கொண்டதாக அறிய முடிகிறது. உதாரணமாக அநுராதபுரத்தில் கிடைத்த சான்றின்படி அப்பகுதியில் இருக்கும் குளமானது ஐம்பத்து நான்கு மைல் நீளமான கால்வாயுடன் இணைக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கொண்ட சோழன்
வட இந்தியர் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே அம்மண்ணில் மனித சமூகம் வாழ்ந்துள்ளது. அவர்கள் இயல்பாகப் படிப்படியாக நாகரிகமடைந்துள்ளனர். அவர்கள் தமிழ் பூர்வகுடிகள் இனத்தைச் சேர்ந்தவர்கள். இத் தமிழ் பூர்வகுடிகள் காலமும், தென்னிந்தியத் தமிழர்களின் காலமும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை. தென்னகத்திலும் இலங்கையிலும் கிடைத்த சான்றுகளின்படி இரு பகுதிகளினது சமூக நாகரிகமும் ஒத்தே உள்ளன. அப்பகுதி வாழ் மக்கள் குளங்களின் மூலம் விவசாயம் செய்யும்-குடியிருப்பு விவசாயம் மேற்கொண்ட நாகரிகச் சமூகமாகும்.
ஆக, இலங்கைக்கு விஜயன் வருவதற்கு முன்னரே அப்பகுதி மக்கள் விவசாயத்தை அறிந்து இருந்தனர் என்பது தெளிவாகும். ஆனால் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் இந்தோ ஆரியர்கள்தான் இலங்கைத் தீவிற்கு வந்து விவசாயத்தை அறிமுகம் செய்தார்கள் என்று கூறுகின்றனர். மேற்காணும் சான்றுகளின் மூலம் அந்த வாதம் வரலாற்றைத் திரித்துக் கூறும் மிகப்பெரிய பொய் என்பது தெளிவாகும்.
இதைப்பற்றி இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி இயக்குநர் ஒருவர், "ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட எல்லாள மன்னன், கடவுளாக மதிக்கப்பட்டு வணங்கப்படுகிறான் என்றால், அவனது செல்வாக்கு அசாத்தியமானது' என்கிறார்.
மகாவம்சம் குறிப்பிடும் தமிழ் மன்னனின் புகழ்ச்சியைப் பொறுத்துக் கொள்ளாத சிங்கள வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் மன்னனின் செல்வாக்கு, வீரம் ஆகியவற்றை மறைத்து, துட்டகாமினியின் செயலைப் புகழ்ந்து புத்தமத கலாசாரத்தின் சிறப்பம்சமாக, அதன் மேன்மையை வெளிப்படுத்துவதாக இந்நிகழ்ச்சிக்கும் புதிய விளக்கம் அளிக்கின்றனர்.
சிங்களவரின் வரலாறாகக் கருதப்படும் மகாவம்சம், எல்லாளன் என்ற தமிழ் மன்னனுக்கும் துட்டகாமினி என்ற சிங்கள மன்னனுக்கும் நடந்த போரைக் குறிப்பிடுகிறது.
(1)
இந்தப் போர் கி.மு. 161-இல் நடந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மன்னர்கள் சார்பில் படைவீரர்கள் மோதுவது உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும். ஆகவே, இதைத் தவிர்க்கும் பொருட்டு இரு மன்னர்களும் யானை மீது அமர்ந்து மோதினர். எல்லாளன் யானை துட்டகாமினியின் யானையான கந்துலனைவிட உருவத்தில் சிறியது. உயரத்தில் பெரிய யானையான கந்துலன் மீது அமர்ந்து துட்டகாமினி வீசிய வேலால் தாக்குண்டு எல்லாளன் இறந்தான். எல்லாளன் எதிரி என்றும் கருதாமல், அவனது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு, அவனை அடக்கம் செய்த இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்றும் எழுப்புகிறான் துட்டகாமினி.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சம் மேலும் அதைப் பற்றிக் குறிப்பிடுவது என்னவென்றால், ""இளவரசர்கள் அனைவரும் அந்த நினைவுச் சின்னத்திற்குச் சென்று இன்றும் கூட அஞ்சலி செலுத்துகிறார்கள்'' என்பதாகும். இதன் மூலம் தெரிவது இரு சமூகக் குழுக்களும் ஆரம்ப நாட்களிலிருந்தே பகைமை கொண்ட சமூக குழுக்களா என்றால், இல்லை.
இரு மன்னர்கள் தங்கள் தங்கள் ஆட்சியை நிலைநாட்ட எடுத்துக்கொண்ட யுத்தங்கள்தான் அவை. இரண்டு இனங்களிலும் அக்கம் பக்கமிருந்து சட்டம், அமைப்பு முதலியவற்றில் ஒரே சீரான நடைமுறைதான் தொடர்ந்து பேணப்பட்டு வந்திருக்கிறது என்பது புலனாகும்.
அடுத்து, வரலாற்றுக் காலத்தை எடுத்துக் கொண்டால் ஏழாம் நூற்றாண்டில் நரசிம்ம பல்லவன் புலிகேசியுடன் போர் புரிந்தபோது இலங்கை அரசன் மானவர்மன் படைத் தலைவனாகச் சென்றதாக சரித்திரக் குறிப்பு ஒன்று கூறுகிறது.
இதற்குப் பிரதியுபகாரமாக நரசிம்ம பல்லவன் இலங்கை மன்னனான மானவர்மனுக்கு உதவியாக பெரும் படையொன்றை அனுப்பி, அவன் இழந்த நாட்டை மீட்டுத் தந்ததாக காசுக்குடிப் பட்டயம் கூறுகிறது.
சோழ அரசன் முதலாம் பராந்தகனுக்கும் பாண்டிய மன்னன் இராசசிம்மனுக்கும் நடந்த போரில் பாண்டியன் தோற்கிறான். அவன் தனது அரச முடியையும், அரசியின் முடியையும், இந்திர ஹாரத்தையும் இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனிடம் அளித்துவிட்டு சேரநாடு ஓடுகிறான்.
பாண்டியனின் குலச்சொத்தை கைப்பற்றச் சோழ அரசர்கள் பலமுறை படையெடுப்பை நடத்துகிறார்கள். பராந்தக சோழனின் மகன் சுந்தரசோழன் ஆட்சியிலும், அவனது மகன் இராஜராஜசோழன் ஆட்சியிலும் கூட படையெடுப்பு நிகழ்கிறது. முடிவில் இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன் சிங்களவரைக் கொன்றதோடு "முன்னவர் பக்கல் தென்னவன் வைத்த சுந்திரமுடியும், இந்திரஹாரமும் அங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்' திரும்பப் பெற்றதாக ஒரு கல்வெட்டு மூலம் பெருமை கொள்கிறான்.
சோழர்கள் இலங்கை கொண்ட சோழராக மாறி அந்நாட்டை ஒரே மண்டலமாக்கி அநுராதபுரத்தை தலைநகராக மாற்றி ஆட்சி புரிகின்றனர்.
மேலும் இலங்கையின் வரலாற்றுச் சான்றுகளை வைத்து மதிப்பீடு செய்த அறிஞர்,
"நேரிடையாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும் சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது, இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் சிறந்த நாகரிகம் உடையவர்களாகவும் குடியிருப்புப் பாசன விவசாயத்தை மேற்கொண்டவர்களாகவும் இருந்தனர்.
இச்சமூக மக்கள் வட இந்திய மொழி பேசும் மக்களுக்கு முந்தைய காலகட்டத்து மக்கள் சமூகமாகும்' (டாக்டர் சுசந்தா குணதிலகா~"சாட்டர்டே ரிவ்யூ'~30, டிசம்பர் 1983) என்கிறார்.
இதன் மூலம் சிங்கள அறிஞர்கள் கூறும் ஆரியர்கள் குளநீர்ப் பாசன விவசாயத்தை இலங்கைத் தீவில் அறிமுகம் செய்தனர் என்பது தவறான கூற்றாகும் என்பது தெளிவு.
சிங்களமொழி உருவானது எப்படி?
மொழியியல் ஆராய்ச்சியின்படி சிங்களம் தமிழ் இனமொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்கிறார் மொழி இயலாளர் எச்.எஸ். டேவிட் (டேவிட் 1981-இல் யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட செய்தி கேட்டு மாரடைப்பால் மரணமுற்றவர்).
(1)*
""சிங்களம் இலங்கைத் தீவில் பேசப்பட்டதை கி.மு. 2000-த்துடன் இணைக்கலாம். அப்போது அம்மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை; பேச்சு வழக்கில் மட்டுமே அம்மொழி இருந்தது. அந்தப் பேச்சு வழக்கோ ஆதிகால தமிழ் இன மொழிக் குடும்பத்தில் பிறந்தது. அப்படிப் பிறந்தனவே சிங்கள மொழி'' என்கிறார். மொழியியல் அறிஞர் ஆக்ஸிமோரன் (ஞஷ்ஹ்ம்ர்ழ்ர்ய்).
(2)*
பழந்தமிழர் இலக்கியங்களில் இலங்கை "ஈழம்' என்றே குறிப்பிடப்படுகிறது.
இப்படிப் பழந்தமிழ் வடிவம் இங்கு வழக்கில் இருந்தபோதுதான் புத்தமதம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இலங்கையில் நுழைகிறது. அப்போதுதான் பாலி மொழி இலங்கைக்குள் அடியெடுத்து வைக்கிறது. பேச்சு வடிவத்தில் இருந்த ஈழமொழியின் மீது பாலியும் சம்ஸ்கிருதமும் ஆதிக்கம் செலுத்த, இந்த ஆதிக்கத்தின் விளைவால் உருவான கலப்பு இன மொழியே சிங்கள மொழியாகும். அதனாலேயே தமிழ்மொழியில் உள்ள அநேக சொற்கள் சிங்களத்திலும் கலந்து இன்று வரை பேசப்பட்டு வருகின்றன.
தமிழ்தேவி, சோழமக்கள், அன்னியக்கரை, மறுகரை போன்றவை மகாவம்சத்தில் காணப்படும் தமிழ்ச் சொற்களாகும்.
(3)*
கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் ஆதிக்கத்தில் இலங்கை வந்த பிறகே சிங்களமொழிக்கென எழுத்து வடிவம் கிடைத்தது என்பது அறிஞர்கள் பலரின் கருத்தாகும்.
தமிழர்கள் புத்த மதத்துக்கு தீராத விரோதிகளாக என்றும் இருந்ததில்லை. அவரவர் தத்தமது மதக் கொள்கையை கடைப்பிடித்து வந்தனர் என்பதற்கும் சான்றுகள் இலங்கையில் மட்டுமல்ல; தென்னிந்தியாவிலும் உண்டு.
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலையும், சீவகசிந்தாமணியும் புத்தமத்தை உயர்த்திப் பிடித்திருக்கின்றன. இலங்கையிலோ தமிழர்களும் புத்த மதப்பீடத்தில் தலைமைக் குருமார்களாக பொறுப்பு வகித்து சிறப்பித்திருக்கிறார்கள். புத்த மடாலயத் தலைவர்களாக இருந்த தமிழர்கள்:
சங்கமிதா - 4-ஆம் நூற்றாண்டு புத்தமித்ரா - 5-ஆம் நூற்றாண்டு வஜ்ரபோதி - 7-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும். அனுராதா - 12-ஆம் நூற்றாண்டு,br> தர்மகீர்த்தி - 12-ஆம் நூற்றாண்டு மற்றும் குபலன்கா - 13-ஆம் நூற்றாண்டு. மேலும் திக்கநாகர், (வட இந்திய நாளந்தா பல்கலைக்கழகத்தில்) தர்மபாலா போன்ற தமிழர்கள் புத்த பீடத்திற்குத் தலைவர்களாகத் தங்களது பங்கினை விரும்பி அளித்திருக்கிறார்கள்.
போர்த்துக்கீசியர் இலங்கைக்கு வந்தபோது இருந்த கோட்டை மன்னனின் ஆட்சிப் பகுதியில் தமிழர்கள் நிறையப் பேர் வசித்ததாகவும், மேற்கு, வடமேற்கு ஆட்சிப் பகுதியில் தமிழ்ப் பள்ளிக்கூடங்களைக் கண்டதாகவும், நிர்வாகத்தில் கூட அவர்கள் பங்கேற்றிருந்ததாகவும் போர்த்துக்கீசியக் குறிப்புகள் கூறுகின்றன.
இன்றைய சிங்கள வரலாற்று ஆசிரியர்களோ இலங்கையின் வரலாற்றை, தமிழர்-சிங்களவர் ஆகியோரின் பகைமையை அவ்விரு இனங்களும் போரிட்டுக் கொண்டே இருந்த வரலாறாகவே உள்ளது என்று திரித்து எழுதுகின்றனர். மேலும் வரலாற்றில் தமிழர்களின், தமிழ் மக்களின் கலாசாரப் பங்களிப்பை அதன்மூலம் கிடைத்த மேன்மையை இழிவுபடுத்தி, குறைத்து மதிப்பிட்டு அல்லது மறைத்துவிடும் முயற்சியில் இலங்கையின் வரலாற்றை அவர்கள் சித்திரிக்கின்றனர்.
இது மன்னராட்சிக் காலத்தில் தங்களது மதமான புத்த மதத்தின் மேலாண்மை வீழ்ந்தது என்ற கருத்துக் கொண்டு மதவாதிகளின் உள்ளங்களில் ஏற்பட்ட கருத்துக் குழப்பமாகும்.
(4)*
மகாவம்சத்தையும் புத்தமத தத்துவத்தையும் விவாதிக்கையில் மூன்று நம்பிக்கைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
(1) ஆரிய இனம் என்ற நம்பிக்கை; சிங்கள மொழி பேசும் மக்கள் இனரீதியாக ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற நம்பிக்கை.
(2) சிங்கதீவு~விஜயன் என்ற மன்னன் இலங்கைத் தீவில் அடியெடுத்து வைத்து ஆட்சியை நிலைநாட்டுவதற்கு காரணமானவன் என்ற மூட நம்பிக்கை.
(3) தர்மதீவு~புத்தரின் இலங்கையோடு உள்ள அவரது சிறப்பான உறவு பற்றிய மூட நம்பிக்கை.
(5)* இவை யாவும் தவறான தத்துவங்களின் மேல் எழுந்த நம்பிக்கைகள் ஆகும். இவை ஏன் எழுப்பப்பட்டன? கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இலங்கையில் வடபகுதியைத் தமிழர்கள் கைப்பற்றி ஆண்டபோது வெறுப்புற்ற புத்த மதவாதிகளால் தோற்றுவிக்கப்பட்ட பொய்யான கருத்துக்களே இவை.
அப்போது உறுதியான தேசியத் தத்துவம் எதையும் புத்தர்கள் கொண்டிருக்கவில்லை. தங்களின் தனித் தன்மைக்கு ஒரு தத்துவத்தைத் தேடிக் கொண்டிருக்கையில் இது பிறந்தது.
(6)* இதன் மூலம் "இன மேலாண்மை, நாகரிகப் புகழ்பாடுதல், ஆரிய இனத்துடன் சிங்கள இனத்தை இணைத்த கடந்த காலத்துதி, புத்த கலாசார நம்பிக்கை முதலியவற்றை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்' என்று வரலாற்று ஆய்வாளர் டாக்டர் குமாரி. ஜெயவர்த்தனே குறிப்பிடுகிறார்.
No comments:
Post a Comment