ஸ்ரீலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பிரபாகரனுடன் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச உச்சி மாநாடு ஒன்றைக்கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்காவிற்கான நோர்வேயின் முன்னாள் சமாதான ஏற்பாட்டாளரான எரிக் சொல்ஹெய்ம் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒரே ஸ்ரீலங்காவிற்குள் வடக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதிக்கம் செலுத்த மஹிந்த ராஜபக்ச தயாராக இருந்ததாகவும் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்தைகளின்போது பிரபாகரனுடன் முற்றிலும் திறந்தநிலை உச்சி மாநாடு ஒன்றை நடத்தி ஒரே ஸ்ரீலங்காவிற்குள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்துக்கு இணங்கமுடியும் என்று மஹிந்த ராஜபக்ச தம்மிடம் தெரிவித்ததாக சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இறுதிப்போரின்போது வடக்கில் உள்ள பொதுமக்களை கப்பல்களை பயன்படுத்தி வெளியேற்றுவதற்கு நோர்வே தயாராக இருந்தது.
இதன்போது ஒவ்வொரு பொதுமகனும், தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் பதிவுசெய்யப்பட வேண்டும் என்றும், பொதுமக்களை தென்னிலங்கைக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ அழைத்துச் செல்ல எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பிரபாகரன் அதற்கு இணங்கவில்லை என்று சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரையில் ஸ்ரீலங்காவின் சமாதான முன்னெடுப்புகளுக்கு அந்த நாடு ஆதரவாகவே இருந்தது. எனினும் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் பின்னர் இந்தியாவின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது.
ஸ்ரீலங்காவின் பிரச்சினையை இராணுவ நடவடிக்கையின் மூலம் தீர்க்கமுடியும் என்று இந்தியாவின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டதாக சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment