Friday, 4 September 2020

ஏழு சக்கரங்கள்

மனிதனின் சக்திநிலை பற்றிப் பேசும்போது ஏழு சக்கரங்கள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை மனிதனின் உடலில் காணப்படுபவை அல்ல. சூட்சும சரீரத்தில் உள்ளவை. இந்த சக்கரங்கள் பற்றி விரிவாக இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்...

எல்லா இயந்திரங்களும் சக்கரங்கள் வழியாகவே நகர்கின்றன. சக்கரங்கள் இல்லாமல் ஒரு மாட்டு வண்டியோ, காரோ நகர முடியாது. எனவே, சக்கரங்கள் இயக்கத்துக்கானவை. மனிதனை ஒரு பரிணாமத்திலிருந்து மற்றொரு பரிணாமத்திற்கு நகர்த்திச் செல்பவை தான் சக்கரங்கள்.

மனித உடலில் நூற்றுக்கணக்கான சக்கரங்கள் உள்ளன. ஆனால் நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழு சக்கரங்கள் உள்ளன. அவைதான் மனிதனின் சக்தி நிலைக்கான ஊற்றுக் கண்கள். ஏழு சக்கரங்களுக்கென்று தனித்தனி இடங்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் அவை ஒரே இடத்தில் இருக்குமென்று சொல்ல முடியாது.
சக்திநிலையில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கேற்ப அவை நகரக் கூடும். இந்த ஏழும் சக்கரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவை வட்ட வடிவத்தில் இராது. முக்கோணங்களாகவே இருக்கும். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகிய சக்கரங்களே அவை.
மூலாதாரம்:
உடலின் அடிப்படையான சக்கரம். இது ஆசனவாய்க்கும், பிறப்புறுப்புக்கும் இடையே இருக்கிறது. இந்த சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் உணவு, உறக்கம் ஆகியவற்றிலேயே அதிக நாட்டம் இருக்கும்.

சுவாதிஷ்டானம்:
பிறப்புறுப்புக்கு சற்று மேலே இருப்பது. உலகின் பொருள் தன்மை சார்ந்து நுகர்ச்சிகளில் இருக்கிற ஈடுபாட்டிற்குக் காரணமானது.

மணிப்பூரகம்:
தொப்புளுக்கு சற்று கீழே இருப்பது. உடலின் உறுதி மற்றும் நல மேம்பாட்டுக்கானது. இந்த சக்கரம் தூண்டப்பட்டவர்கள் கடும் உழைப்பாளிகளாக எறும்பைப் போல் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள்.

அனாஹதம்:

விலா எலும்புகள் ஒன்று சேரும் இடத்திற்கு சற்று கீழே இருக்கிறது. இந்த சக்கரத்துக்கென்று சில முக்கியத்துவங்கள் உண்டு. படைப்பாற்றல், அன்பு போன்றவற்றின் ஆதார சக்கரம் இது. முந்தைய மூன்று சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் ஆகியவை உலகியல் இன்பங்களுக்கும், வாழ்க்கைக்கும் உரியவை. அநாஹதத்தை அடுத்து வருகிற விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகியவை அருள் நிலை, ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றிற்கு உரியவை.

இந்த இருவேறு நிலைகளுக்கும் மத்தியில் ஒரு சமநிலையான தன்மை அநாஹதத்திற்கு உண்டு. இரண்டு இயல்புகளும் கலந்ததாக இது அமைந்துள்ளது. அதனால்தான், மேல்நோக்கிய ஒரு முக்கோணமும், கீழ் நோக்கிய ஒரு முக்கோணமும் பின்னிப் பிணைந்து ஒரு நட்சத்திரத்தை உருவாக்கும் தோற்றமே அநாஹத வடிவம். மேல் நோக்கிய முக்கோணம் அருளியல் வாழ்வுக்கும், கீழ்நோக்கிய முக்கோணம் உலகியல் வாழ்வுக்கும் அடையாளம். ஸ்ரீ சக்கரம் போன்ற எந்திரங்கள் முக்கோணங்கள் நிரம்பியதாய் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவை அநாஹதத்தில் இருந்து உருவானவைதான்.
விசுக்தி:
தொண்டை குழியில் அமைந்துள்ளது. இது தீயவற்றை வடிகட்டும் ஆற்றல். சிவபெருமானுக்கு "விசுகண்டன்" "நீலகண்டன்" என்று பெயர்கள் உண்டு. இதன் பொருள், விஷத்தை வெளியே நிறுத்தியவர் என்பது, விசுக்தி சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் தடுக்க முடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல. தீய உணர்வுகள், எண்ணங்கள், சக்திகள் என்று விஷத்தன்மை கொண்டவற்றிலிருந்து விடுபட முடியும்.
ஆக்னா:
புருவ மத்தியில் உள்ளது. இது ஞானம், தெளிவு போன்றவற்றுக்கான சக்கரம். விசுக்தியைப் பொறுத்தவரை, அந்தச் சக்கரம் தூண்டப்பட்டால் ஆற்றலோடு திகழ முடியுமே தவிர சமூகத்தில் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். சமூக வாழ்க்கையோடு உடன்பட இயலாது. மக்களிடமிருந்து விலகி வாழ்கிற நிலையிலேயே இருப்பார்கள். ஆனால் ஆக்ஞா முழுவதுமாகத் தூண்டப்பட்டவர்கள் சமூகத்தில் அங்கீகாரத்தைப் பெற்ற ஞானவான்களாகத் திகழ்வார்கள்.
சஹஸ்ரஹாரம்:
உச்சந்தலையில், பிறந்த குழந்தைக்கு மட்டும் தலையில் மென்மையாக இருக்கும் இடத்தில் இருக்கிறது. இந்த சக்கரம், பரவச நிலையைத் தரத்தக்கது. எப்போதும் ஒருவிதமான பரவச நிலையிலேயே இருக்கிற தன்மை, சஹஸ்ரஹாரா முழுமையாகத் தூண்டப்பட்டவர்களுக்கு உரியது.
இந்த ஏழு சக்கரங்களும், வாழ்வின் ஏழுவிதமான தீவிரத்தன்மைகள், பெரும்பான்மையான மக்கள் மூலதாரத்திற்கும், மணி பூரகத்திற்கும் நடுவில் சக்திநிலை தூண்டப்பட்டு வாழ்ந்து முடிக்கிறார்கள். சிலருக்கு மட்டுமே அநாஹதம் வரையில் அந்த ஆற்றல் தூண்டப்படுகிறது.
வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு விதமாய் சக்தி நிலை உயரும். ஆக்ஞாவிலிருந்து சஹஸ்ரஹாரா நோக்கி சக்தி நகர்வதற்கென்று பாதை எதுவுமில்லை. ஒரு மையத்திலிருந்து மறு மையத்திற்கு குதிக்கிற சூழ்நிலைதான் அங்கே. அதற்குத்தான் ஒரு குருவின் பூரணமான அருளும், துணையும் தேவைப்படுகிறது. அதற்கு அளப்பரிய நம்பிக்கை வேண்டும். பல்வேறு பிறவிகளுக்குப் பிறகும் நம்பிக்கை வைக்காததாலேயே இந்த வாய்ப்பை பலரும் இழக்கின்றனர்.
ஆக்ஞாவைத் தொட்டவர்கள் அந்த எல்லையிலேயே நின்று விடுகின்றனர். அடுத்த சக்கரம் நோக்கித் தாண்டிச் செல்வதற்கு மிகுந்த நம்பிக்கையும், அர்ப்பணிப்புணர்வும் தேவை.
நமது உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள் சகஸ்ரஹாரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே சிவசக்தி ஐக்கியம் என்பார்கள். இதுவே மோட்சம், இதுவே முக்தி. இதையே ஞானமடைதல் என்கிறோம்.
கபாலத்தில் உள்ள பத்தாம் வாசல்திறக்கும். இதையே திருமூலர்,மூலாதாரத் துவாரத்தையும், கபாலத்தில் உள்ள மேலைத் துவாரத்தையும் திறக்க வல்லவர்களுக்கு, காலனைக் குறித்த கவலையில்லை, பயமும் இல்லை என்கிறார்.
மூலாதாரத்தில் இருந்து குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும் அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை உண்டாக்குகின்றன.
சமுத்திர ஓசை, பேரிகைச்சத்தம், மத்தளம், சங்கு, கண்டாமணி, காகனம் போன்ற ஓசைகளைச் சாதகர்கள் கேட்பார்கள். கிண்கிணி, வேணி, வீணை, தந்திரி, வண்டு போன்றவற்றின் இனிய ரீங்காரமும் கேட்கும். மேலும் ஒவ்வொரு நிலைகளைக் கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி உண்டாகும். அதனால் ஏற்படும் சக்திதான் சித்தி எனப்படும்.
மூலாதாரத்தில் இருந்து அனாகதம் வரை பயனப்படும் குண்டலினியை அக்கினி குண்டலினி என்பர். அனாகதம் தொடங்கி ஆக்ஞாவரை பயனப்படும் போது சூரிய குண்டலினி என்பார்கள். அதையும் தாண்டி சுழுமுனையின் இறுதிவரை செல்லும் போது சந்திர குண்டலினி என்பார்கள். முடிவில் சகஸ்ராரத்தில் நிலை பெறும் போதுதுரிய குண்டலினி என்பார்கள்.
மேலும் குண்டலினியானது தோற்றம், நிலைபேறு, அழிவு என்கிற மூன்று நிலைகளைக் குறிக்கும் முக்கிரந்தி எனப்படும் மூன்று முடிச்சுகளையும் துளைத்தபடி மேலே செல்கிறது. அவை மூலாதாரத்தில் உள்ள பிரம்ம முடிச்சு, அனாகதத்தில் உள்ள விஷ்ணு முடிச்சு, ஆக்ஞாவிலுள்ள சிவ முடிச்சு என்பனவாம்.
யோகத்தின் குறிக்கோள் இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்த்து குண்டலினியை சகஸ்ராரத்தில் நிலைபெறச் செய்வதே ஆகும்.
அங்ஙனம் நிலைபெற்று, ஒடுங்கி சிவனோடு இணையும் போதுதான் சோமாசலம், மதியமுது, மாங்காய்ப்பால், காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச்சாறு, கபாலத்தேன், சோமப்பால், பஞ்சாமிர்தம், செம்மதிப்பால் என்றெல்லாம் சித்தர்களால் போற்றிப் புகழப்பட்ட அமுதத்தைப் பருகுகிறான். அமரத்துவம் பெறுகிறான். பேரின்பத்தில் திளைக்கிறான். இதையே உச்சியில் தாகம் தீர்த்தல் என்பார்கள்.
இந்த அமிர்தத்தை தானும் பருகித் திளைத்த பரவசத்தோடு குண்டலினியானவள் மீண்டும் சுழுமுனை வழியாக மூலாதாரத்தை அடைந்து சுகமாய் நித்திரை கொள்வாள் என்று சொல்லப்பட்டுள்ளது.
அவளோடு அமிர்தமும் மூலாதாரத்தை சேருவதால் உடம்பு கொழுந்து போன்று என்றும் பொலிவுடன் விளங்கும் என்று திருமூலர் சொல்கிறார்.
முதல் ஆறு சக்கரங்களையும் யோகா,தியானம், பக்தி, மந்திர உச்சாடனம் போன்ற பயிற்சிகளை முறையாகத் தொடர்ந்து செய்துவர தாண்டிவிடலாம், ஆனால் ஏழாவதான சகஸ்ராரத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு நீண்ட பயிற்சியும், பக்குவமும் தேவை.
ஒரு சிறந்த குருவின் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சக்கரங்களின் வாசல் எளிதில் திறக்காது. விடாமுயற்சியும், வைராக்கியம், இந்திரிய ஒழுக்கமும் அவசியம். இவையெல்லாம் கூடுமானால் மெல்ல மெல்லத் திறக்கும் ஞானத்தின் பத்தாம் வாசல்.

No comments:

Post a Comment