ஞானத் தமிழ்
கல்லுயர் கழுமல விஞ்சியுண் மேவிய கடவுடன்னை
நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்குணரச்
சொல்லிடல் கேட்டல்வல் லோர்தொல்லை வானவர் தங்களொடும்
செல்குவர் சீரரு ளாற்பெற லாஞ்சிவ லோகமதே.
திருஞானசம்பந்தர் .
பிறவிஎனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவிஎனுந் தோற்றோணி கண்டீர் – நிறைஉலகில்
பொன்மாலை மார்பன்புனற் காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.
நம்பியாண்டார் நம்பி .
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
பூதத்தாழ்வார்,
திருநெறிய தமிழ்
அருநெறிய மறைவல்ல முனியகன் பொய்கையலர்மேய
பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே
முதல் திருமுறை
அருந்தமிழ்
அலைபுனல் ஆவடுதுறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெமிறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்.
சம்பந்தர்
கூடல் ஆலவாய்க் குழகன் ஆவது
அறியாது அருந்தமிழ்ப் பழித்தனன் அடியேன்
ஈண்டிய சிறப்பில் இணையடிக் கீழ் நின்று
வேண்டு மதுவினி வேண்டுவன விரைந்தே
பெருந்தேவபாணி.
செந்தமிழ்
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கறை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.
பிறந்த பிறவியிற் பேணியெஞ்செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண்டாகில் இமையவர் கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங்கூடுவரே
முதல் திருமுறை, சம்பந்தர்
செந்தமிழ்த்திறம் வல்லிரோ செங்கண்
அரவம்முன்கையில் ஆடவே
வந்துநிற்கும்இது என்கொலோபலி
மாற்றமாட்டோம் இடகிலோம்
பைந்தண்மாமலர் உந்துசோலைகள்
கந்தம்நாறுபைஞ் ஞீலியீர்
அந்திவானமும் மேனியோசொலும்
ஆரணீய விடங்கரே.
செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை
முத்தமிழும் நான்மறையும் ஆனான் (அப்பர் தேவாரம்)
தென் தமிழ்
தென் தமிழ் நன்னாட்டு தீது தீர் மதுரை
சிலப்பதிகாரம்.
வடதிசை மருங்கின் மன்னர்க்கெல்லாம்
தென் தமிழ் நன்னாட்டுச் செழுவில் கயல்புலி
மண்தலை ஏற்ற வரைக
சிலப்பதிகாரம்.
வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்
கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்
பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்
தண்டமிழ்
கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை (மணிமேகலை)
தள்ளாப் பொருள் இயல்பின்
தண் தமிழாய் வந்திலார்
கொள்ளார் இக்குன்று பயன் –(பரிபாடல் 9)
தண்டமிழ் நூற் புலவாணர்க்கோர் அம்மானே –(சுந்தரர்)
குழுவு நுண்தொளை வேயினும் குறிநரம்பு எறிவுற்று
எழுவு தண்தமிழ் யாழினும் இனிய சொற்கிளியே –(கம்ப இரா.அயோத்தி.சித்திர 28)
தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை
மாணிக்கவாசகர், திருவாசகம்
தன்னேர் இலாத தமிழ்
ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருள் அகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்.
தண்டி அலங்காரம்
பசுந்தமிழ்
கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமொடு அமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச்சில இலக்கணவரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ –
திருவிளையாடல், நாடு.57
முத்தமிழ்
எத்திறத்தினும் ஏழுலகும் புகழ்
முத்து முத்தமிழும் தந்து முற்றுமே
கம்பன்
செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை
முத்தமிழும் நான்மறையும் ஆனான்
அப்பர் தேவாரம்.
அலகிறந்தனை தலை சிறந்தனை
அருள் சுரந்தனை இருள் துரந்தனை
உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை
ஒன்றும் ஆயினை பலவும் ஆயினை
காசிக் கலம்பகம்
சொற்றமிழ்
மற்றுநீ வன்மை பேசி வந்தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை; நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார்
பெரியபுராணம், சேக்கிழார்
தமிழ்
தாங்கா நல்லிசைத் தமிழ்க்கு விளக்காகென
வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ்
ஆனாப் பெருமை அகத்தியன்
பன்னிருபடலம்
காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !
நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்று
ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !
-சுத்தானந்த பாரதியார்
தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரை சிறுபாணாற்றுப்படை
இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்
பிங்கலந்தை.
இன் தமிழ் இயற்கை இன்பம்
சிந்தாமணி 2063
தமிழ் தழிய சாயலவர்
சிந்தாமணி சுர.32
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.
திருமூலர் திருமந்திரம்.
கடவுள் தந்த தமிழ்
வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் சங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்
கம்ப இராமா.ஆரணி. அகத்தி.41.
சாறு சுவை எனக் கூற நின்று இட்ட
ஆரியம் தீந்தமிழ் என்மனார் அவையே
ஓரிருமகாரின் பேறுகண்டு அவற்றுள்
கன்னியந்தமிழின் செவ்வியைப் புணர்ந்தோய்
பொய்கையார்.
"மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரை யுமங்கு வாழவைப்போன்" ...
கந்தர் அலங்காரம்-22, அருணகிரிநாதர்.
No comments:
Post a Comment