Wednesday, 23 September 2020

லக்மிகடாட்சமான தமிழர்களின் மணிப்பிரவாள வீடு.

 யாழ்ப்பாணத்தின் சிறப்பான அடையாளங்களில் மணிப்பிரவாள லக்மிகடாட்சமான வீடுகளும் ஒன்று வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும்,    கடும் குளிர் காலத்தில் மிதமான குளிர்ச்சியோடு காணப்படும். இன்றும்  யாழ்ப்பாணத்தில் இப்படியான பல வீடுகள் எமது பாரம்பரியத்தையும், தெய்வீகத்தன்மையையும் தாங்கி கம்பீரமாகவும், எழில்மையோடு காட்சியளிக்கின்றது.

இது கோயிலோ ஆச்சிரமமோ இல்லை.இதுதான் ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்து வீடுகள்.இங்கு வாழ்பவனைவிடக் கட்டியவன் ரசித்து அனுபவித்து கட்டியுள்ளதை நீங்கள் பார்க்கலாம்.ஒவ்வொரு சுவர்களிலும் கலைநயம் கொட்டிக்கிடக்கும்.

ஜன்னல்நிலைகள் தொட்டு கதவு வரை அத்தனை மரங்களிலும் யாரோ ஒரு ஆசாரியின் உள்ளத்துக்கிடைக்கைகள் செதுக்கப்ட்டிருக்கும்.ஒருகலைஞனின் கலைப்படைப்பு எவ்வளவுக்கு எவ்வளவு அழகானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்தப்படைப்பிற்காக அந்தக்கலைஞன் தியாகம்புரிந்திருப்பான்.

அன்று அவர்கள் கைகளால் கட்டிய வீடுகள் நூறு இருநூறு ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாய் நிற்கிறது.இன்று பத்தே ஆண்டில் பத்திரிப்பு பப்பரபா எண்டு கிடக்கிறது.காரணம் என்ன இன்று நுகர்வோரை அவர்களுடய மனநிலையை கவனிப்பவர்கள் மிகக்குறைவு.நுகர்வோரைப்பிழிந்து அதிகலாபம் பெறுவது எப்படி என்ற சிந்தனைதான் அதிகம்.

வீடு என்றால் மழையும் வெயிலும் படாமல் திருடன்வராமல் இருந்தால் போதும் தானே என்று நினைக்கக்கூடாது.வீடு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத்தேவை என்பதைத் தாண்டி மன ஆறுதல் தரும் இடமாக இருக்கவேண்டும்.வீட்டுச்சுவர்களில்  மன உற்சாகத்தை தரும்வகையிலான  கலைகள் நிரம்பிய வேலைப்பாடுகள் ஓவியங்கள் இருப்பது மனநிம்மதியையும் உற்சாகத்தையும் தரும்.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் அந்தக்காலத்துவீடுகளுக்குள் விசிறிகள் தேவைப்படுவதில்லை.மேற்காவுகையோட்டம் இலகுவில் நடக்கக்கூடியவாறும் அதேபோல இயற்கையான சூரிய,சந்திர,நட்சத்திர ஒளிகள் கிடைக்கவும் பொருத்தமான வகையில் நாச்சார் வீடுகளை அமைத்திருப்பார்கள்.

வீட்டை தமக்காக மட்டுமன்றி அன்பேசிவம் என்ற உயரிய உயிர்நேயங்களை நோக்கமாக கொண்டு  கால்நடைகள்,பறவைகள்,வழிப்போக்கர்கள் ஆகியோரின் நன்மைகருதியும் அமைத்திருப்பது இன்னும் வியப்பானது எங்கள் முன்னோரின் தாராளமனதையும் சமூகம்சார் சூழலியல்சார் அக்கறையையும் தெளிவாகக்காட்டிநிற்கிறது.

வீட்டுவாசலில் கால்நடைகளும் பறவைகளும் நீரருந்தத் தொட்டியும். வழிப்போக்கர்கள் இழைப்பாற திண்ணைகளும் அவர்களுக்காக மண்பானைகளில் தண்ணீரும் கூடவைத்திருப்பார்கள்.யாரென்று முகம் தெரியாத வழிப்போக்கர்களையே இவ்வளவு கவனித்திருக்கிறார்கள் என்றால் எங்கள் முன்னோரின் விருந்தோம்பல் பண்பையும்,  பிற உயிா்களிடம் நேசித்த அன்பேசிவம் பண்பையும் எடுத்துக் காட்டுகின்றது.

புதிதாக வீடுகட்டும்போது எமது சூழலுக்குப் பொருத்தமான எமதுகட்டடக்கலை மரபை பின்பற்றி வீடுகள்கட்டுபவர்கள் தான் உண்மையில் எமதுசூழலின் பாக்கியசாலிகள். எங்கள் பனைமரச்சலசலப்பும்,தென்னங்கீற்றொளியும் ஒலியும்,பலாமரத்து மாமரத்து நிழலும் வேப்பமரத்து காத்தும் என்று அனுபவித்தபடி எங்கட ஊர் வீட்டில் நிலத்தில் கிடந்துருளும் நிம்மதியான தூக்கத்தை சொர்க்கம்கூடத்தராது.


No comments:

Post a Comment