சித்தா்கலின் வானவியல் ஆதாரப்படி, தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் மேழ(சித்திரை) மாதம் தான்.ஆண்டின் தொடக்கம் வசந்தமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், மேழ(சித்திரை) மாதத்தை ஆண்டுத் தொடக்கமாக நம் மூதாதையர்கள் கணக்கிட்டுள்ளார்கள் .
மேழ மாத என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் மேழ மாத(சித்திரை மாதம்). சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக, சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை.
சோழர் கல்வெட்டுக்களிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுக்களிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அகத்தியரின், "பன்னாயிரத்தில்' பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. "திண்ணிலை, மருப்பின் ஆடுதலை' என்று நக்கீரர் கூறியிருக்கிறார். இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்துள்ளார், முனைவர் ராசமாணிக்கனார். புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று விளக்கம் கொடுத்துள்ளார். கமலை ஞானப்பிரகாசர். நாமக்கல் கவிஞரும், "சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்' என்ற தன் வாழ்த்துப் பாடலின் மூலம் தமிழ்ப்பண்பாட்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத்தெரிவித்துள்ளார். கோடைக்காலமே முதலாவது பருவம் என, சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment