ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் பறவைகளையும் போல எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி கூடி வாழ்ந்த போது நடந்த ஒழுக்கக்கேடுகளை தவிர்க்க பெரியவர்கள் சேர்ந்து எடுத்த ஒரு முடிவே திருமண ஒப்பந்தமாகும். இதை தொல்காப்பியர் "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" என்று குறிப்பிடுவார். இங்கு கரணம் என்பது இறைவன் முன் செய்யப்படும் ஒப்பந்தம் என்று தேவநேய பாவாணர் குறிப்பிடுகிறார்.
இந்த ஒப்பந்தத்தின் அடையாளமாகவே பண்டைய காலம் முதல் தாலி திருமணத்தின் அடையாளமாக கருதப்பட்டது எனலாம். இரு மனங்களை இணைக்கும் விதமாக பலவிதமான சடங்குகள் நடத்தப்பட்டாலும் தாலி அணிவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வந்ததது. அவ்வகையில் பண்டைய தமிழர் திருமணங்களிலும் தாலி அணிவதற்கு தனி சடங்குகளும் நம்பிக்கைகளும் பின்பற்றப்பட்டு வந்தன. அதாவது பண்டைய காலத்தில் தாலியானது இழை, வீழ், மங்கல நாண் போன்ற பல்வேறு பெயர்களால் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை விரிவாக காணலாம்.
இந்த ஒப்பந்தத்தின் அடையாளமாகவே பண்டைய காலம் முதல் தாலி திருமணத்தின் அடையாளமாக கருதப்பட்டது எனலாம். இரு மனங்களை இணைக்கும் விதமாக பலவிதமான சடங்குகள் நடத்தப்பட்டாலும் தாலி அணிவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வந்ததது. அவ்வகையில் பண்டைய தமிழர் திருமணங்களிலும் தாலி அணிவதற்கு தனி சடங்குகளும் நம்பிக்கைகளும் பின்பற்றப்பட்டு வந்தன. அதாவது பண்டைய காலத்தில் தாலியானது இழை, வீழ், மங்கல நாண் போன்ற பல்வேறு பெயர்களால் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை விரிவாக காணலாம்.
பதினொன்றாம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
"ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற் பூட்டி எழிற்பனந்தாள் சாய்ந்த சிவன்நிலைத் தானென்பர் காதலி தாலிகொடுத் தாய்ந்தநற் குங்குலி யங்கொண் டனற்புகை காலனைமுன் காய்ந்த அரற்கிட்ட தென்கட வூரிர் கலயனையே"
இப்பாடலில் நாயனார் தம் குழந்தைகள் உணவின்றி வாடியபோதும் தம் மனைவி கழற்றித்தந்த தாலியை விற்று குழந்தைகளின் பசியை போக்க நெல் வாங்காமல் குங்கிலியம் வாங்கி இறை பணி செய்த நிகழ்வை குறிப்பிடுகிறார். இங்கே தான் முதன் முதலாக இழை, வீழ் போன்ற சொல்லாடல்கள் தவிர்த்து தாலி என்ற நேரடிச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இங்கும் பெண்கள் தாலி அணிந்திருந்த தகவல் தான் கிடைக்கிறதே அன்றி திருமணத்தின் அடையாளமாக தாலி அணிந்த நிகழ்வு 10 ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கவில்லை. ஆனால் வள்ளி தெய்வானை திருமண நிகழ்வை குறிக்க வந்த கச்சியப்ப சிவாச்சாரியார் தனது கந்த புராணத்தில் இந்த குறையையும் தீர்த்து வைக்கின்றார்.
"செங்கம் லத்திறை சிந்தையின் ஆற்றி அங்கையின் ஈந்திட ஆண்டகை கொண்ட மங்கல நாணை மணிக்களம் ஆர்த்து நங்கை முடிக்கோர் நறுந்தொடை சூழ்ந்தான்".
இங்கே தெய்வானையுடனான திருமணத்தின்போது இந்திரன் முருகனுக்கு பாதபூஜை செய்ததையும், பின்பு இந்திரன் கன்னிகாதானம் அளித்த நிகழ்வையும் பின்னர் முருகன் மங்கல நாணை தெய்வானையின் அழகிய கழுத்தில் அணிவித்த நிகழ்வையும் அழகாக சுட்டுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.
ஒருவேளை இங்கே மங்கல அணி என்றுதானே வருகிறது இதை எப்படி தாலி என்பது என்று யாராவது கேட்டால் அதே கச்சியப்ப சிவாச்சாரியார் இன்னொரு இடத்தில் கூறுகின்றாா்.
"நான்முகனே முதலோர் பாவை மார்கள் #பொற்றாலி தனையளித்தோன் புகழ்போற்றி" என்று சிவபெருமான் தேவர்களின் மனைவியர்களின் தாலியை காத்த நிகழ்வை சுட்டுகிறார்.
ஔவையாரின் பழம்பாடல் ஒன்றில் "தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம் சேயோடு தான்பெற்ற செல்வம்போம் ஆயவாழ்(வு) உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம் பொற்றாலி யோடெவையும் போம்" பொற்றாலி என்று குறிப்பிடுகின்றாா்.
சங்க இலக்கியங்களில் இடத்திற்கு ஏற்றவாறு பல்வேறு வகைப்பட்ட திருமண முறைகள் பற்றிய குறிப்புகள் பரந்து காணப்படுகின்றன.
அகநானூறு. "புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி, கற்பினின் வழாஅ, நற் பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆக".
இங்கு புலவர் நல்லூர் கிழார் என்ன சொல்ல வருகிறார் எனில் மங்கல நீராட்டும் வழக்கத்தின்போது வால் இழை மகளிர் என்ற வரியில் இழை என்பது திருமண சின்னத்தையே குறிக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். இழை என்று குறிப்பிடும் தாலியானது இதே அகப்பாடலில் இன்னொரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,
"இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி, தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்".
இங்கு இழை அணி சிறப்பின் என்று வருவதால் தாலியை அணிந்ததால் சிறப்புடைய பெண் என்ற பொருள் கொள்வது பொருந்தத்தக்கதாகிறது.
"ஈகை அரிய இழையணி மகளிரொடு சாயின்று என்ப ஆஅய் கோயில்;சுவைக்குஇனிது ஆகிய குய்யுடை அடிசில் பிறர்க்கு ஈவுஇன்றித் தம்வயிறு அருத்தி உரைசால் ஓங்குபுகழ் ஒரீய".
இப்பாடலில் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் எனும் வள்ளலின் மனைவியர் தம் கணவர் அணிந்த ஒரு இழையை மட்டும் கழற்றாமல் மற்றவற்றை இரவலர்க்கு பரிசளித்த செய்தியை குறிப்பிடுகிறார். திருமணமான பெண் எந்த நிலையிலும் கழற்றக்கூடாத இந்த மங்கல அணியையே புலவர் இழை என்று சுட்டுகிறார். புறநானூறு உரை ஆசிரியர்தளும் இந்த வரிகளுக்கு பிறிதோர் அணிலனுமின்றி கொடுத்ததற்கரிய மாங்கல்ய சூத்திரத்தை அணிந்த மகளிருடனே பொலிவிழந்து சாய்ந்ததென்று சொல்லும் ஆயுடை கோயில்" என்று கூறுவதில் கொடுத்ததற்காரிய மாங்கல்ய சூத்திரம் என்பது தாலியையே குறிக்கும் என்பதில் ஐயமேதும் இருக்க இயலாது.
நெடுநல்வாடை. இப்பாடலில் நக்கீரர் பாண்டியன் நெடுஞ்செழியன் போருக்கு சென்றிருந்தபோது அவனுடைய பெருந்தேவி மிகுந்த துயருற்றபோது மன்னர் இருந்தபோது முத்துமாலை அணியப்பெற்ற அவள் கழுத்து இப்போது வெறும் தாலி மட்டுமே தாழ்ந்து தொங்குகிறது என்ற பொருளை உவமையாக்குகிறார். இப்பாடலில் உள்ள "பின்னமை நெடுவீழ்" என்ற வரிகளுக்கு குத்துதலமைந்த நெடிய தாலி நாண் என்று நச்சினார்க்கினியர் உரை வகுக்கிறார்.இங்கு வீீீழ் என்பது தொங்குகின்ற பொருளை குறிக்கும். அதாவது தொங்குகின்ற மங்கல அணி என்றே பொருள்படும்.
மேலே கூறியதைப் போல் கோவலன் கண்ணகி திருமணம் பார்ப்பான் முன்னிலையில் அக்னி சாட்சியாக நடந்தது என்பதை பார்த்தோம். அச்சமயம் மடமுரசு மத்தளம் முழங்க மங்கல அணியை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட நிகழ்வை இளங்கோவடிகள் அழகாக சுட்டுகிறார்.
"அகலுள் மங்கலவணி எழுந்தது" என்ற சிலப்பதிகார வரிகளுக்கு அடியார்க்கு நல்லார் உரை எழுதுகையில் "மங்கலவணி ஊரெங்கும் எழுந்ததென்க" என்று எழுதுகிறார். அதோடு சிலம்பின் இரண்டாவது காதையில் கண்ணகியின் அழகை கோவலன் வருணிப்பதை சொல்ல வந்த இளங்கோவடிகள் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
சிலப்பதிகாரம். "பின் நலம் பாராட்டுநர் மனுவில் மங்கல அணியே யன்றியும் பிறிதணி அணியப்பெற்றதை எவன் கொல்"
என்று பாடுகிறார். ஆக இங்கு கண்ணகி மற்ற அணிகலன்களுடன் சேர்த்து தாலியும் அணிந்திருந்தாள் என்பதில் ஐயமில்லை. அதோடு "மங்கல வணியிற் பிறிதணி மகிழாள்" என்ற வரிகள் மூலம் தாலியை மட்டுமே அணிந்து மகிழ்ந்த நிகழ்வையும் இளங்கோவடிகள் அழகாக எடுத்துரைக்கிறார்.
"நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ! நிறை நெடு மங்கல நாணோ! இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின் இருக்கையோ! திருமகட்கு இனிய மலர்கொலோ! மாயோன் மார்பில் நன் மணிகள் வைத்த பொற் பெட்டியோ".
கம்பராமாயணம்.
நிலமகளின் முகம், திலகம், கண், மங்கல நாண், ஆரம்
முதலியனவாக அயோத்தி நகரத்தைப் புனைந்துரைத்தார். பெண்களும் மங்கல நாண் பெருமை தருவதாதலால் “நிறைநெடு மங்கல நாண்” என்றார்.
மங்கையர் மங்கலத்தாலி மற்றையோர் அங்கையின் வாங்குநர் எவரும் இன்றியே கொங்கையின் வீழ்ந்தன; குறித்த ஆற்றினால் இங்கிதின் அற்புதம் இன்னும் கேட்டியால்”
என்ற வரிகளால் மங்கையர் தாலி அணிந்தனர் என்பது திண்ணம். அதோடு 6ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றிய பக்தி இலக்கியங்களான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களிலும் திருமுறைகளிலும், முக்கூடற்பள்ளு முதலான சிற்றிலக்கியக்களிலும் தாலி பற்றிய தகவல்கள் உண்டு.
ஆக பழந்தமிழர் பண்பாட்டில் தாலி அணிவது என்பது மிக முக்கியமான ஒன்றாகவே இருந்து வந்தது என்பதை இந்த தரவுகள் மூலம் தெளிவாக அறியலாம்.
No comments:
Post a Comment