Sunday, 25 July 2021

பிாித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் யாழ்ப்பாண விஜயம் கற்பிக்கும் பாடம் என்ன?

British Prime Minister David Cameron made a historic visit to Jaffna 16 Nov 2013.

                                                                     கமரூனின் யாழ்ப்பாணப் பயணமும் ஒரு அரசியல் பித்தலாட்டமாகவே அமையும் என்றே அனைவரும் அச்சம் கொண்டனர். ஆனால் அனைவரின் கணிப்புக்களையும் தவறாக்கித் தமிழர்களின் குரலாக யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் கமரூன் ஒலித்துள்ளார். 

எந்தவொரு மேற்குலகத் தலைவரும் செய்யத் துணியாத அரும்பெரும் செய்கையாக யாழ்ப்பாணத்தில் உள்ள ஏதிலிகள் முகாமிற்குப் பயணம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்து உரையாடினார் கமரூன். 

பிரித்தானிய ஊடகவியலாளர்கள் சூழ்ந்து நிற்க குடிசைகளுக்குள் நுழைந்து மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டார். இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகளை விரைவாக சிறீலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கத் தவறினால் பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குப் பிரித்தானியா தள்ளப்படும் என்று அங்கிருந்தவாறே எச்சரித்தார்.

அங்கிருந்து உடனடியாகக் கொழும்பு திரும்பி மகிந்தரை சந்தித்து தனது எச்சரிக்கையை அதிகாரபூர்வமாக விடுத்தார். மறுநாள் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுயாதீன விசாரணைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்வதற்கு 2014 மார்ச் மாதம் வரை காலக்கெடு விதித்தார். 

அடுத்தடுத்துப் பிரித்தானியப் பிரதமர் மேற்கொண்ட இவ் அதிரடி நடவடிக்கைகளும், சிங்களத்தின் வயிற்றில் புளியைக் கரைக்கும் வகையில் அவர் விடுத்த அறிவிப்புக்களும் நம்பிக்கையிழந்து கிடந்த தமிழர்களுக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளன. கருணாநிதியின் தந்தி அனுப்பும் ‘போராட்டத்திற்கு’ சளைக்காது தீர்மானம் நிறைவேற்றும் ஜெயலலிதாவின் முகத்திரை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கிழிந்து கிடக்கும் நிலையில் எமக்காகக் குரல்கொடுப்பதற்கு எவருமே இல்லையா? என்று தமிழர்கள் ஏங்கித் தவித்த ஓரிரு நாட்களிலேயே தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக கமரூன் மாறியுள்ளார்.

கமரூன் விடுத்த கோரிக்கையை ஏற்று உள்நாட்டில் சுயாதீன போர்க்குற்ற விசாரணைகளை மகிந்தர் மேற்கொள்ளப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். 

அவ்வாறு சுயாதீன விசாரணைகள் நடைபெறுவதற்கு இடமளித்தால் தானும், தனது குடும்பமும் கூண்டோடு அஞ்ஞாதவாசம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பது மகிந்தருக்குத் தெரியும்.

 அத்துடன் தனக்குப் பிறகு சிங்கள தேசத்தின் ஆட்சிக் கட்டிலின் முதிசத்தைத் தனது புதல்வனிடம் கையளிக்கும் கனவு அத்தோடு பகற்கனவாக மாறிவிடும் என்பதும் மகிந்தருக்குத் தெரியும்,

அதே நேரத்தில் ஈழத்தீவில் இன்னுமொரு ஆயுதப் போராட்டம் வெடிப்பதை தடுப்பதாயினும், மகிந்தரை ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதும் மேற்குலகிற்கு நன்கு தெரியும். 

 அரச மயப்படுத்தப்பட்ட பொருண்மியக் கொள்கைகளை அமுல்படுத்தும் மகிந்தரை ஆட்சிப்பீடத்திலிருந்து அகற்றுவதன் ஊடாகவே ஈழத்தீவில் சுதந்திரமாகத் தமது முதலீட்டாளர்கள் செயற்படுவதற்கான சூழலைத் தோற்றுவிக்க முடியும் என்பதும் மேற்குலகிற்குத் தெரியும்.

இதுதான் அரசியல் யதார்த்தம். இவ்வாறான நிலையில் பிரித்தானியப் பிரதமர் எச்சரித்தது போன்று பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணை நடைபெறுவதை இனியும் மகிந்தரால் தடுத்து நிறுத்த முடியாது. 

போர்க்குற்ற விசாரணை என்ற முனையில் இருந்து தொடங்கப் போகும் மேற்குலகின் இந்த இராசரீக யுத்தம் இனவழிப்பு என்ற முனையிலேயே முடிவுக்கு வரும். போர்க்குற்றவாளி என்ற இன்றைய நிலையில் இருந்து இனப்படுகொலையாளி என்ற நிலைக்கு மகிந்தர் மாறுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் எடுத்தாலும் ஈற்றில் தமிழர்களுக்கு நீதி கிட்டுவது உறுதி.




 



No comments:

Post a Comment