காரைநகர் (Karainagar) இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மேற்குத்திசையில் அமைந்துள்ள ஏழு சப்த தீவுகளில் ஒன்றாகும். மற்றைய தீவுகளை விட யாழ்நகருக்கு அண்மையில் இருப்பதுதான் காரைநகர். இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும்.இவ்வூரில் அப்பொழுது ஏராளமான காரைச்செடிகள் நின்றமையால் அப்பெயர் பெற்றது என்றும் பெயருக்குரிய காரணம் கூறப்படுகின்றது. காரைதீவு வடக்கு, மேற்கு திசைகளில் ஆழமான பாக்கு நீரிணைக் கடலாலும் கிழங்கு, தெற்கு திசைகளில் ஆழமற்ற வற்றும் தன்மையுள்ள பரவைக் கடலாலும் சூழப்பட்டுள்ளது.
கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட காலம், இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களின் காலம் ஜரோப்பிய அரசுகளின் காலம் என அனைத்து ஆட்சியாளர்களின் காலப் பகுதிகளிலும் ஊர்காவற்றுறை, காரைநகர் துறைமுகங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. வாணிப நடவடிக்கைகளிலும், போரியல் வரலாற்றிலும் காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களின் அமைவிடமே அவை முக்கியத்துவம் பெறக் காரணமாயிற்று. வரலாற்று ரீதியாக காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்கள் பெற்றிருந்த சிறப்பினை வரலாற்று ஆசிரியர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் தத்தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
1780 ல் காரைக்காலில் இருந்து வந்த கனகசபைபிள்ளை காரைநகர் துறைமுகத்திற்கு அண்மிய பகுதியில் வர்;த்தகர்கள், யாத்திரிகள், தங்கி போக்குவரத்து செய்வதற்கு வசதியாகமடம் ஒன்றை அமைத்தார். கப்பல்களில் சரக்கு ஏற்றி வர்த்தகம் செய்து வந்தமையால் பெருஞ்செல்வந்தராய் இருந்தார். வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் இப் பகுதியில் குடியேறி வாழ்ந்தார்கள். பிள்ளைமடம் அன்றைய நாளில் வர்த்தகத்தின் சிறப்பின் அடையாளமாக அமைந்திருந்தது.
செல்வந்தர்கள் பல கப்பல்களை வர்த்தக சேவையில் ஈடுபடுத்தி பெருஞ் செல்வந்தர்கள் ஆனார்கள். காரைநகர் துறைமுகப்பகுதியை மையப்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டனர். சி.க.ஆறுமுகம் வெள்ளையர் ஆறுமுகம் என்று மக்களால் அழைக்கப்படுபவர் இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து துறைமுகத்தடியில் பிரபல்யமான வர்த்தக ஸ்தாபனத்தை நடாத்தி துறைமுகப்பகுதி வர்த்தகத்தில் தனக்கென ஒரு ஸ்தானத்தை வகித்த பெரும் செல்வந்தர் ஆவார். வைரமுத்து சபாபதிப்பிள்ளை, வைரமுத்து ஆறுமுகம் சைவாசாரப் பரம்பரையில் பிறந்த சகோதரர்கள் கப்பல்களை வைத்து ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் செய்தவர்கள். துறைமுகப்பகுதியில் வர்த்தக ஸ்தாபனத்தை நடாத்தி வந்தனர். யாழ்ப்பாண நகரிலும் முன்னணி வர்த்தக ஸ்தாபனத்தின் உரிமையாளர்களாக இருந்தனர்.யாழ்ப்பாண ஜக்கிய பண்டகசாலையை ஆரம்பித்த முக்கியஸ்தர்களில் இவர்களும் அடங்குவர். எஸ்.வி. பொன்னம்பலம் காரைநகர் துறைமுகம் ஊடாக பீடியை இறக்குமதி செய்து வி;ற்பனை செய்யும் வர்த்தகத்தில் பிரபலம் பெற்றிருந்தார்.
தமிழரின் பொருளாதார வளத்தில் விவசாயம் முக்கிய பங்கினை பெற்றிருந்தது. விவசாயத்தை வாழ்வாதாரமாக கருதி வாழ்ந்தவர்கள் தென் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நல்லின காளை மாடுகளை தங்கள் வேளாண்மை செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம் உச்சப்பயனைப் பெறலாம் என கருதினர்.
அன்றைய கால கட்டத்தில் சாதாரண மக்கள் மாட்டு வண்டில்களிலும் வசதி மிக்கவர்கள் குதிரை வண்டில்களிலும் தங்கள் பயணங்களை மேற்கொண்டனர். நல்லின காளை மாடுகளை தங்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் வண்டில்களில் பூட்டி பயணம் செய்வதால் தங்கள் பயணங்ளை விரைவாக மேற்கொண்டனர். மேலும் நல்லின காளைகளை பயன்படுத்துவது அன்றைய கால கட்டத்தில் மேலான சமூக அந்தஸ்தாக கருதப்பட்டது
காரைநகரில் இருந்து திருவண்ணாமலைக்கு கார்த்திகை விளக்கீட்டினைப் பார்ப்பதற்கு செல்வார்கள். கார்த்திகை தீப திருவிழா காலத்தில் மாடுகள் ஏலத்தில் விற்பதற்காக திருவண்ணாமலை மாட்டுச் சந்தைக்கு கொண்டு வரப்படும். விரும்பிய மாடுகளை கொள்வனவு செய்வார்கள். இந்தியாவில் கொள்ளிடம் ஆற்றங்கரையிலிருந்து மாடுகள் ஏற்றப்படும். தை மாதத்தில் ஊர்காவற்றுறையில் மாடுகள் இறக்கப்படும். பருத்தி அடைப்பில் மாடுகள் பேணகத்தில் இரண்டு வாரங்களிற்கு மாடுகள் பராமரிக்கப்படும். இரண்டு வாரங்களிற்கு பின்னர் மாடுகள் காரைநகர் துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும். மாடுகளை கொள்வனவு செய்வதற்காக வெளியூர் மக்களும் கூடுவர். சிலர் தங்களிடம் இருக்கும் உள்ளுர் மாடுகளை கொடுத்து நல்லின காளைகளை எடுத்துச் செல்வர். திருநெல்வேலி மாவட்டம் காங்கேயன் மாட்டுச் சந்தையில் கொள்வனவு செய்யப்படும் மாடுகளும் காரைநகர் வழியாக யாழ்ப்பணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
காரைநகர் துறைமுகத்தில் இருந்து மாடுகளை நடத்திச் செல்வர். மாடுகளை நடத்திச் செல்பவர் கம்பீரமானவராக இருப்பார். வெள்ளை வேட்டி கட்டி தலைப்பாகை அணிவார். மாடுகளுக்கு கெச்சை, வெண்டயம், கொம்புக்குழாய், வெள்ளிச்சங்கிலி என்பவற்றுடன் நெத்திப்பவளம் கட்டப்படும். சிவப்பு பச்சை மணிகள் மணிமணியாக கோர்க்கப்பட்டு நடுவில் சங்கு வைத்து நெற்றியில் கட்டப்படும். காரைநகர் துறைமுகப்பகுதியில் இருந்து மாடுகள் வரிசையாக நடத்திச் செல்வது விழா போன்று அமையும்.
தொகுப்பு
அருளகம்
No comments:
Post a Comment