தொழில் முனைவோருக்கான பல பண்புகளை வள்ளுவர் பல குறள்களில் பட்டியலிடுகிறார்.
`ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்.’ (குறள் எண் 484.)
ஆங்கிலத்தில் நிலம், தொழிலாளர், முதலீடு, நிறுவனம் (land, labour, capital, organisation) ஆகிய நான்கும் தொழிலுக்கு அவசியம் என்பார்கள். வள்ளுவர் இவற்றோடு காலம் அறிந்துதான் தொழில் தொடங்க வேண்டும் எனக் காலத்தையும் சேர்த்துக் கொள்கிறார். மார்கழி மாதம் இளநீர்க் கடை போட்டால் வியாபாரம் ஆகுமா? நல்ல வெயில் காலத்தில் கம்பளிப் போர்வை செலாவணி ஆகுமா? கோடை காலத்தில் தர்ப்பூசணி விற்பவனுக்கும் மழைக்காலத்தில் சூடான வேர்க்கடலை விற்பவனுக்கும்தான் தொழில் நடக்கும். எந்தக் காலத்தில் எதைச் செய்ய வேண்டும் என்பதில் கவனம் தேவை. அப்படிக் கவனமாகச் செயல்பட்டால் பூமியையே வளைத்துவிடலாம் என்கிறார் வள்ளுவர்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பதிழுக்கு.’ (குறள் எண் 467.)
ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு முன் நன்றாக எண்ணிப் பார்த்து ஆராய்ந்து பின்னர் தொடங்க வேண்டும். தொடங்கிய பின்னர், இதைத் தொடங்கியிருக்க வேண்டாமோ எனச் சிந்தித்தல் சரியல்ல. ‘‘தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்’’ என இன்னோர் இடத்திலும் முடிவெடுத்த பின்னர் சந்தேகப்படுவதால் விளையும் சங்கடத்தை வள்ளுவம் எடுத்துச் சொல்கிறது.
‘‘தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடம் கண்ட பின் அல்லது.’’ (குறள் எண்.491.)
ஏற்ற இடத்தை அறிந்த பின்னரே தொழிலைத் தொடங்க வேண்டும். அதற்குமுன் தொழில் போட்டியாளர்களை ஏளனமாக நினைத்து, அவர்களை விட அதிக லாபம் கண்டுவிடுவோம் என இறுமாந்திருப்பது நல்லதல்ல. சில தொழில்களுக்குச் சில வகையான சுற்றுச்சூழல் தேவைப்படுகிறது. அதனால் தான் சில இடங்களில் மட்டும் சில தொழில்கள் செழிக்கின்றன. ஓரிடத்தில் ஒரே தொழில் சார்ந்தவர்கள் கூடுதலாக இருந்தால், அவர்கள் நடத்தும் தொழிலுக்குத் தேவையான பொருட்கள் எளிதில் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. சிவகாசியில் பட்டாசுத் தொழிலும் திருப்பூரில் பனியன் தொழிலும் லூதியானாவில் சால்வை தயாரிக்கும் தொழிலும் செழிப்பதுஇக்காரணத்தால் தான்.
‘‘செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்.’’ (குறள் எண் 677.)
நாம் எந்தத் தொழிலில் ஈடுபடுகிறோமோ அந்தத் தொழிலில் அனுபவம் மிக்கவர்களைச் சந்தித்து எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்பன போன்ற விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அனுபவம் தரும் ஞானம் மிகப் பெரிது. ஒரு சோப்புக் கம்பெனியில் இறுதி நிலையில் `கன்வேயர் பெல்ட்’ மூலமாக சோப்பு டப்பாக்கள் வெளியே வந்து விழும். அந்த சோப்பு டப்பாக்களைத் திரட்டிக் கடைகளுக்கு அனுப்புவது வழக்கம். தொழில் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. முதலாளியும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். ஆனால் திடீரென்று ஒருநாள் ‘‘உள்ளே சோப்பே இல்லாத உள்ளீடற்றடப்பாக்களை ஏன் கலந்து அனுப்புகிறீர்கள்?’’ என ஒரு வாடிக்கையாளரிடமிருந்து கடிதம் வந்தது. பின் பல வாடிக்கையாளர்கள் அதே புகாரைச் சொல்லத் தொடங்கினார்கள். புகார் உண்மைதான் என முதலாளிக்குப் புரிந்தது. ஆனால் முன்னர் இல்லாத சங்கடம் திடீரென இப்போது ஏன் நேர்கிறது என்றுதான் கண்டுபிடிக்க முடியவில்லை. பல நிபுணர்கள் ஆராய்ந்தும் காரணம் தெரியவில்லை.
அந்த முதலாளி கல்வியால் பெறும் ஞானத்தை விட அனுபவத்தால் பெறும் ஞானத்தை மதிப்பவர். எனவே முதல் புகார்க் கடிதம் வருவதற்கு முன் கடைசியாக பணி ஓய்வு பெற்றவர் யார் என ஆராய்ந்தார். அவர் கன்வேயர் பெல்ட் அருகே பணிபுரிந்த முனுசாமி என்ற தொழிலாளி. அவர் வீட்டுக்கு ஆள் அனுப்பி அவரை வரவழைத்தார். அவர் இருக்கும் வரையில் புகார் வரவில்லையே, அவர் போன பிறகு ஏன் புகார் வருகிறது என ஆராய்ந்து சொல்லுமாறு அன்போடு கேட்டுக் கொண்டார். முனுசாமி தன் பழைய பணியிடத்தைப் பார்வையிட்டார். திடீரென `அடேய், இங்கிருந்த பெடஸ்டல் மின்விசிறியை யார் திருப்பி வைத்தது?’ எனச் சப்தம் போட்டுக் கேட்டார். ஒரு தொழிலாளி தனக்குக் காற்று வரவேண்டும் என்பதற்காகத் திருப்பி வைத்துக் கொண்டதாக ஒப்புக் கொண்டார். முனுசாமி முதலாளியைக் கூப்பிட்டு நேர்ந்துள்ள சிக்கலுக்கான காரணத்தை விளக்கினார்.
அந்த மின்விசிறி முன்இருந்த கோணத்திலேயே இருந்திருந்தால் கன்வேயர் பெல்டில் அது காற்றை வாரி அடித்திருக்கும். அப்போது உள்ளீடற்ற சோப்பு டப்பாக்கள் காற்றின் வேகத்தில் பறந்து பக்கவாட்டில் விழுந்திருக்கும். அவற்றை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டிருப்பார்கள். அந்தக் காலி டப்பாக்கள் உள்ளீடுள்ள டப்பாக்களோடு கலந்து இறுதிவரை சென்று கடைக்கும் சென்றுவிட வழியில்லாமல் போயிருக்கும். ஒரு மின்விசிறியின் கோணத்தை மாற்றி வைத்ததுதான் இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என்றவுடன் முதலாளி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மின்விசிறி திருப்பி வைக்கப்பட்டது மட்டுமல்ல, ஓய்வுபெற்ற அந்த ஊழியர் திரும்பவும் பகுதிநேரப் பணியில் அமர்த்தப்பட்டார். `அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்’ என்று வள்ளுவர் சொல்வது இந்த முதலாளியின் இயல்பைத்தான்.
‘‘எள்ளாத எள்ளிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு.’’ (குறள் எண் 470.)
மக்களுக்கும் நாட்டிற்கும் ஒவ்வாதவற்றை நாம் செய்யலாகாது. அப்படிச் செய்தால் வெற்றி கிட்டாது. உலகம் இகழ்ந்து ஒதுக்காத தொழிலை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
‘‘வினைவலியும் மாற்றான் வலியும் தன்வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.’’ (குறள் எண் 471.)
ஒரு தொழில் செய்ய வேண்டுமானால் அதற்குத் தேவையான வலிமை, அதே தொழிலில் போட்டியாளர்களின் வலிமை, தனிப்பட்ட முறையில் நம் வலிமை, நம்முடைய பங்குதாரரின் வலிமை அனைத்தையும் ஆராய்ந்து தொழில் செய்ய வேண்டும்.
‘‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.’’ (குறள் எண் 435.)
செய்யும் தொழிலில் வரப்போகும் கஷ்டங்களை முன்பே ஆராய்ந்து செயல்படாதவன் வாழ்வு, நெருப்பின் முன் வைத்த வைக்கோல்போர் போல எரிந்து சாம்பலாகிவிடும். சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் பெருவெள்ளம் வந்த செய்தி அனைவரும் அறிந்தது. ஒரு பதிப்பகத்தார் தங்கள் புத்தகக் கட்டுக்களை பூமிக்குக் கீழே இருந்த தாழ்வறை ஒன்றில் சேமித்து வைத்திருந்தார்கள். பள்ளத்தில் இருந்த அந்த இடத்தில் வெள்ளம் புகுந்ததால் பல லட்ச ரூபாய் இழப்பு நேர்ந்தது. இப்படி ஒருவேளை நேரலாம் என்பதை முன்னரே ஊகித்திருந்தால், அவர்களிடம் காலியாகவே இருந்த முதல் தளத்தில் புத்தகக் கட்டை முன்பே அடுக்கி வைத்து இந்தப் பொருள் இழப்பைத் தவிர்த்திருக்கலாம்.
‘‘தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கின்பின் என்குற்றம் ஆகும் இறைக்கு’’ (குறள் எண் 436.)
தொழில் நடத்தும் தொழிலதிபர் தன்னிடம் உள்ள குறை என்ன என்று உணர்ந்து அதன்பின் மற்றவர்களிடம் உள்ள குறைகளை ஆராய்ந்தால் அவருக்கு எந்தத் துன்பமும் வராது. முதலில் தன் குறைகளை அறிந்து அவற்றை நீக்கிக் கொண்டு தொழில் நடத்துதல் அவசியம். போட்டியாளர்கள் தங்கள் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு என்ன ஊதியம் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கு இணையாகவோ மேலாகவோ ஊதியம் கொடுத்தால்தான் தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் நிலைப்பார்கள். இல்லாவிட்டால் போட்டி நிறுவனத்தில் பணியில் சேர்ந்து விடுவார்கள். அதிக வருவாய் கிடைக்கும் நிறுவனத்தில் பணிபுரியச் செல்லும் மனப்போக்கு என்பது இயற்கை.
‘‘இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர்.’’ (குறள் எண் 447.)
தவறு செய்யும் தொழிலதிபரிடம் அவரது தவறை தைரியமாகச் சுட்டிக் காட்டும் ஒருவர் உடன் இருப்பாரானால், அந்தத் தொழிலதிபருக்கு எந்தக் கெடுதலும் வர வாய்ப்பில்லை.
‘‘நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு’’ என நட்பைப் பற்றிப் பேசும்போதும் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவன் துணையை எப்போதும் உடன் வைத்துக் கொள்ள வேண்டும் என வள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார்.
‘‘முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை மதலையாம் சார்பு இலார்க்கு இல்லை நிலை.’’ (குறள் எண் 449.)
முதல் போடாத வணிகனுக்கு வருமானம் இல்லை. தன்னை வழிநடத்தும் துணை இல்லாதவனுக்கு அந்த வணிகம் நிலைக்காது. வணிகத்தில் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது எனச் சொல்லி வழிநடத்துவதற்குக் கட்டாயம் ஒரு துணை தேவைப்படும். அப்படி இல்லாவிட்டால் மனம் போன போக்கில் வணிகம் செய்து நஷ்டத்தை எதிர்கொள்ள நேரலாம்.
‘‘அற்றாரைத் தேறுதல் ஓம்புக, மற்றவர் பற்றுஇலர் நாணார் பழி.’’ (குறள் எண் 506.)
பற்றில்லாதவரையும் சொந்த பந்தங்கள் இல்லாதவரையும் நம்ப வேண்டாம். அவர்கள் பழிக்கு அஞ்சமாட்டார்கள். தொழிலில் அவர்கள் மோசடி செய்ய வாய்ப்புண்டு. எனவே தொழில் பற்று உடைய நேர்மையாளர்களை உடன் வைத்துக் கொள்வது நல்லது.
‘‘தேறற்க யாரையும் தேறாது, தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்.’’ (குறள் எண் 509.)
யாரையும் ஆராயாது வேலையில் அமர்த்தக் கூடாது. நன்கு ஆராய்ந்த பின்னரே அவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். ஆராயாமல் ஒருவரைக் கல்லாப் பெட்டியில் உட்கார வைத்தால் என்ன ஆகும்? முதலுக்கே மோசம் வந்து சேரும்.
‘‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.’’ (குறள் எண் 517.)
எந்தச் செயல் செய்ய யார் பொருத்தமானவர் என்பதை ஆராய்ந்து அறிந்து அந்தச் செயலை அவரிடம் விட வேண்டும். கணக்கில் தேர்ச்சி பெற்ற நேர்மையாளரைக் கணக்காளராக வைத்துக் கொள்ளலாம். தோற்றப் பொலிவும் பேச்சுத் திறனும் உடையவரை வரவேற்கும் இடத்தில் பணியமர்த்தலாம்.
யார் எந்தப் பணிக்குப் பொருத்தமானவர் என்றறிந்து அவரை அங்கு பணியமர்த்துவது தொழில் தொடங்குவோர் கட்டாயம் அறிய வேண்டிய ஒரு கலை.
‘‘எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறுஆகும் மாந்தர் பலர்.’’ (குறள் எண் 514.)
என்னதான் நாம் ஆராய்ந்து தேர்ந்தெடுத்தாலும் ஒருவர் செயலாற்றும் நேரத்தில் மாறுபட வாய்ப்பிருக்கிறது. நாம் தேர்ந்தெடுத்தவர் தானே என மெத்தனமாக இருக்கலாகாது. எப்போதும் நம் கீழ் பணிபுரிபவர் மேல் ஒரு கண் இருப்பது நல்லது. நம்மால் தேர்வு செய்யப்பட்டவரே தவறிழைக்கக் கூடும். எச்சரிக்கை தேவை.
‘‘ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை.’’ (குறள் எண் 594.)
தளராத ஊக்கம் எவனிடம் இருக்கிறதோ அவனைத் தேடிச் செல்வம் செல்லும். எனவே தொழில் தொடங்குவோர் யாராயினும் தளர்வில்லாத ஊக்கத்தோடு இருப்பது மிகவும் முக்கியம். திருவள்ளுவர் எப்படியும் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறார். இன்று தொழில் முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களைப் பற்றி, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவர் ஆராய்ந்து வகுத்துச் சொன்னதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். `எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்!’ என்று மதுரைத் தமிழ்நாகனார் என்னும் புலவர் திருக்குறளைப் பாராட்டுவது எத்தனை உண்மையானது என்று சொல்லத் தேவையில்லை.
No comments:
Post a Comment