முதுகில் ஈட்டி பாய்ந்து இறந்தால், ஏன் பெற்றேன் இந்த மகனை எனத் துயர் தாய்க்கு. மார்பில் ஈட்டி பாய்ந்து இறந்தால் என்ன தவம் செய்தேன் என மகிழச்சி தாய்க்கு. பெற்ற பொழுது இல்லாத உவப்பும் மகிழ்ச்சியும் மாவீரன் தன் மகன் என்பதாய் தாய்க்கு.
இறந்த பொழுது, உயிர் பிரிந்த பொழுது எது? காலையா, நண்பகலா? மாலையா? முன்னிரவா? நள்ளிரவா? விடியலா? வளர் பிறையா? எத்தனையாம் நாள்? தேய் பிறையா? எத்தனையாம் நாள்? கணித்தாள். அவள் செஞ்சில் நீங்காப் பொழுது. கணித்த நாளில் ஒவ்வொரு மாதமும் வழிபாடு. உயிருக்கு வழிபாடு. உயிர் உலவிக்கொண்டே தொடர்கிறதாம். வாழ்ந்த பொழுதுகளை மீட்கிறதாம்.
குத்து விளக்கு ஒளி, குடம் நிறைத்த நீர் மூடிய மாவிலைத் தேங்காய், அரிசி மாக் குழையல்களே உயிரின் சாட்சியாக. பால் படையல், பழம் படையல், பொங்கல் படையல், வாழ்ந்த காலத்தில் விழைந்த உணவுகள் படையல்.
மனம் ஒடுங்கிப் பாடுகிறாள். தாலாட்டுத் தொடக்கம் வழிபாட்டுப் பாடல்களாக, தெய்வமாக மகனை உருவகித்துப் பாடுகிறாள். மகன் நினைவுகளில் கரைகிறாள். மாதந் தோறும் வழிபட ஓராண்டு. அடுத்து ஆண்டுக்கு ஒருமுறை படையலும் வழிபாடும். நீத்தார் கடன்.
மறக்காள் பிறை நாளை. ஆண்டு நினைவுக்கு அழைப்பாள் உறவுகளை. போரும் காதலுமா? காதலும் போருமா? அகமும் புறமுமா? புறமும் அகமுமா? மனித வரலாறே போரும் காதலுமாம்.
இராவணனன் தொடக்கம் சைவத் தமிழ் அரசர் கண்ட போர்க்களங்கள் எண்ணில் அடங்கா. இலங்கை தொடர்ச்சியாகவே போர்க்களத்தின் தளம் நெடிய சைவத் தமிழர் வரலாற்றில் இலங்கைப் போர்க்களங்களில் இறந்தோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா. இவர்களை நினைவு கூரும் சுற்றமும் உற்றமும் எண்ணுக் கணக்கில் அடங்கா.
402 ஆண்டுகளுக்கு முன் சைவத் தமிழ் அரசன் சங்கிலியன் போரில் மாய்ந்தான். அவனோடு கணக்கில் அடங்காச் சைவத் தமிழ் உயிர்களை இழந்தோம். இழந்த நாள் வைகாசி, தேய்பிறை எட்டாம் நாள் 05 யூன் 1619.
கத்தோலிக்க ஆண்டு 2009 18ம் திகதி MAY மாதம் முள்ளிவாய்க்காலில் சைவத் தமிழர் போரில் தோற்ற நாள், கணக்கிலடங்காச் சைவத் தமிழ் உயிர்களைப் போரில் பறிகொடுத்த நாள், வைகாசித் திங்கள் தேய்பிறை ஒன்பதாம் நாள்.
சங்கிலியன் நினைவேந்தல் நாளுக்கு அடுத்த நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள். 27 ஆண்டுகளுக்கு முன்னர், உரும்பராய் சிவகுமாரன் நினைவேந்தல் வைகாசி தேய்பிறை முதலாம் நாள்.
பிறந்த நாளுக்கு ஒருவர் பிறந்த நட்சத்திரம் வரும் நாளே பிறந்த நாள். மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால் மாசி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளன்றுதான் உங்கள் பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டும் அதுவே நமது மரபு.
திதியைப் பார்த்தே நினைவேந்தல். இறந்தவர்கள் இறந்து போன நாளன்றே அவ் உயிர்கள் நம்மை நாடி வருகின்றன. எனவே அதை விடுத்து அவர்கள் ? , இறந்து போன ஆங்கிலத் தேதியை கணக்கிட்டு திதி கொடுப்பது வீணானதே.
தமிழர்களாகியநாம் எமது பண்பாட்டு வழிமுறை நின்று பின்பற்றுவதுதானே முறையாகும். அன்னிய அடிமைத்தன மோகத்து தூக்கிஎறிவோம்.
No comments:
Post a Comment