ஈழம்--
"ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி நமோ நமோ தாயே, நம் ஸ்ரீலங்கா நமோ நமோ தாயே" என்பதானது இலங்கையானது ஈழ சிரோமணி என்றே அடையாளப்படுத்துகின்றது.
ஈழம் என்ற பெயர் எவ்வாறு வரலாற்றுக்காலங்களில் அழைக்கப்பட்டது என்பதனை தொல்லியல், மற்றும் கல்வெட்டியல் ஆய்வியல் நோக்கில் பார்க்கின்றபோது பூநகரி மண்ணித்தலையில் 1992 ஆண்டு பேரா.பரமு புஸ்பரட்ணம் தலைமையில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில் இரண்டு உடைந்த எழுத்துக்கள் கொண்ட இரண்டு மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகக் காலக் கணிப்பிடப்பட்டிருக்கிறது.
இவ் இரண்டு மட்பாண்டங்களில் "ஈலா" என்ற எழுத்துப்பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் முக்கியமானவை. இதில் இரண்டு எழுத்துக்களை உடைய முதலாவது சாசனம் உடைந்த நிலையில் "ஈ" என்ற ஒலிப்பெறுமானம் கொண்ட எழுத்தும், இரண்டாவது மட்பாண்டத்தில் "ல" என்ற பெறுமானம் கொண்ட எழுத்தும் காணப்படுவதாகவும், இவ்விரு எழுத்துக்களுக்கும் இடையிலான இடைவெளியை நோக்கும்போது இடையில் வேறு எழுத்துக்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.எனவே பொருந்தக்கூடிய இரண்டு மட்பாண்டங்களையும் சேர்த்து வாசிக்கும் போது முதல் மண்பாண்டத்திலுள்ள எழுத்தில் 'ஈ" என்ற ஒலியும், இரண்டாவது மட்பாண்டத்திலுள்ள எழுத்தில் 'ல" என்ற ஒலியையும் சேர்த்து 'ஈல" அல்லது 'ஈலெ" என்றும் வாசிக்கமுடியும் என்கிறார் பேரா.புஸ்பரட்ணம்.
மேலும் அங்கு கிடைத்த மற்றுமொரு சாசனத்தில் மூன்று எழுத்துக்கள் காணப்படுகின்றன எனவும் இதன் முதலெழுத்திற்கு 'ஈ" என்ற ஒலிப்பெறுமானமும், இரண்டாவது எழுத்திற்கு 'ழ" என்ற ஒலிப்பெறுமானமும் கொடுத்து 'ஈழ" என வாசிக்க முடியும் எனவும் அவ்விரு எழுத்துக்களைத் தொடர்ந்து மூன்றாவது எழுத்து சிறு கோட்டினை மட்டும் கொண்டிருப்பதால் இவ்விரு எழுத்துக்களையும் நோக்கும் போது இது இலங்கையின் புனைபெயரான ஈழத்தையே குறிக்கின்றது என்றும் பேரா.பரமு புஸ்பரட்ணம் தனது பூநகரி தொல்பொருளாய்வு நூலில் கூறியுள்ளார்.
மேலும் இங்கு காணப்பட்ட எழுத்துக்களை 'வேளான்" 'ஈழ" என புகழ்பெற்ற மறைந்த கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் வாசித்ததாகவும், இதன் காலம் கி.மு 2 என அவர் கணித்திருந்ததாகவும், தமிழ் எழுத்தின் தோற்றம் (பக்7) பேரா புஸ்பரட்ணம் எழுதியுள்ளார்.இதுவே ஈழ என்ற பெயரிலமைந்த கி.மு.2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதல் தொல்பொருட்சான்றாகும்.
அடுத்து அனுராதபுரத்திலுள்ள அபயகிரி விகாரையில் உள்ள பாறைக்கல்வெட்டில் உள்ள கி.மு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி சாசனமானது (இல.94) மூன்று வரிகளைக் கொண்டது. இதில் முதல் வரியில் "ஈழ பரதகி தமிட சமணநே கரிதே தமிட கபதிகந பசதே" என்ற தமிழ்பிராமியும், அசோகப்பிராமியும் கலந்த பிராகிருத வசனத்தில் ஈழபரத என்ற சமணனால் உருவாக்கப்பட்ட தமிழ்வீடு என்று வருகிறது.
பேராசிரியர் வேலுப்பிள்ளை தமிழ் பிராமியிலமைந்த இந்தக் கல்வெட்டானது "ஈழபரத" (ஈழத்துப்பரதவர்) என வாசித்து ஈழபரதத்தில் வாழும் தமிழ்ச் சமணரும், தமிழ்க் குடும்பத்தலைவனும் கட்டுவித்த மாடம் என விளக்கமளித்துள்ளார்.
மகாவம்சம் கி.பி 1 ஆம் நூற்றாண்டில் (95 - 101) ஈழநாகன் என்பவன் 6 ஆண்டுகள் அனுராதபுரத்தை ஆண்டதாகவும், இந்த ஈழநாக என்ற அரசனின் பெயர் ராஜவலிய என்ற நூலில் எலுநாக, எலுந்நாக என பதியப்பட்டுள்ளது. பண்டைய ஈழத்தில் தமிழர் தமிழர் (பக்.48) என்னும் நூலில் சி.க சி;ற்றம்பலம் அவர்கள் எழு, ஈழ என்பன ஒரே பொருள் கொண்ட ஒன்றிலிருந்து திரிபடைந்த பதங்கள் என்கிறார்.
இதிலிருந்து மகாவம்சம், ராஜவலிய ஆகிய சிங்கள வாரலாற்று நூல்களே ஈழம் என்கின்ற பெயர் பெயரில் ஆண்ட ஈழமண்ணின் மைந்தர்கள் என்பதை சுட்டிக்காட்டி நிற்கின்றது.
அத்துடன் ஈழத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலுள்ள திருப்பரங்குன்றத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் (கல்:- 03) "எருகாடூர் ஈழக்குடுமிகன் பொலாலையன் செய்த ஆய்சயன் நெடுஞ்சாதன்" என்ற வரி வருகிறது இது எருகாட்டூர் ஈழக்குடுமிகன் பொலாலையன் திருப்பரங்குன்றத்து சைன மதகுருவுக்கு தானம் வழங்கியது பற்றிய குறிப்பை சொல்லுகிறது.
ஈழம் என்பது முழு இலங்கையையும் குறிக்கின்றது என்பதற்கு தமிழகத்தில் சங்ககாலத்தில் கி.பி.முதலாம் நூற்றாண்டில் எழுந்த பட்டிணப்பாலை காவிரிப்பூம்பட்டினத்திற்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் விபரிக்கும் பொழுது (வரி 190 -192)* 'கங்கை வாரியும், காவிரிப்பயனும், ஈழத்துணவும், காழகத்து ஆக்கமும்" .. எனப்புகழ்ந்துரைக்கின்றது. இது முழு ஈழத்தையும் குறிப்பனவாகவே அமைகின்றது. பட்டிணப்பாலை எழுந்த காலத்தில் ஈழம் என்னும் நாட்டின் பெயர் தமிழகத்தில் நன்கு அறிமுகமாகிவிட்டதனை அறியலாம்.
சுப்பிரமணியன்.அ.வே, சங்க இலக்கியம் பத்துப்பாட்டு, பக.450, 2010. கலிங்கத்துப் பரணியிலும் அதன் வரி 200 இல் ஈழமும் தமிழ்க் கூடலும் சிதைந்து.. என இடம்பெறுகிறது. இது ஒட்டுமொத்த இலங்கையையும் ஈழம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு மற்றுமொரு சான்றாக அமைகிறது. அத்துடன் கடியலூர் உருத்திரன் கண்ணனாரின் காலத்தில் ஈழமென்பது இலங்கையின் வடபகுதியினை மட்டும் குறித்ததென்பதை கருத முடியுமென பேரா.சி.பத்மநாதன் தனது யாழ்ப்பாண இராச்சியம் நூலில் (பக்05) குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இற்றைக்கு 12000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியகிழக்கில் யூப்பிரட்டீஸ் நதிக்கரையோரம் உருவாகிய மொசப்பத்தோமிய நாகரிகத்தில் ஈரானின் தென்மேற்குப்பகுதியில் அதாவது சுமேரியாவின் கிழக்கே ஸாகுரொஸ் மலைத்தொடத் தொடருக்குத் தெற்கே உருவாகிய நாகரிகமே "இலம்" (ELAM) எனப்பட்டது.சிந்துவெளியின் சிந்து நாகரீகத்தை கட்டியெழுப்பியவர்களே சுமேரியாவில் சுமேரியன் என்ற நாகரீகத்தை கட்டியெழுப்பினாா்கள் இவர்களும் தமிழரே ஆகும். அதே போன்று மாயான் என்ற அறிவியல் சமூகத்தையும் உருவாக்கியவர்கள் தமிழர்களே ஆகும்.
இவர்கள் உருவாக்கிய நகரங்களான ஊர், சூசா என்பவற்றைச் சொல்லலாம். சுமேரியமும், இலமும் தனித்தனி நாடுகளாக விளங்கின. இவர்கள் உருவாக்கிய மொழி ஆதி இலமைற் (Proto Elamite) எனப்பட்டது. பின்னர் இலத்தின் தலைநகரான ஊர் சுமேரியர் வசமானது. இந்த இலம் நாடு இன்றைய குஸிஸ்தானாகும்.
பின்னர் சுமேரிய நகரங்களை அக்காடியர்கள் கைப்பற்றினர். இதன்பின்னர் அக்காடிய மூன்றாவது அரசமுறை மன்னனான ஷுல்கி என்பவன் இலத்தை கைப்பற்ற, அதை மீண்டும் இலவர்கள் திரண்டெழுந்து கைப்பற்றினர்.
பின்னர் பின்னர் கி.மு.18 ஆம் நூற்றாண்டில் பபிலோனியர்கள் சுமேரியத்தையும், இலத்தையும் கைப்பற்றி பபிலோனிய நாகரிகத்தை உருவாக்க கி.மு.17 இல் இலவர்களின் மூவாயிரமாண்டு சரித்திரம் முடிவுற இவர்கள் கி.மு 9000 இல் இந்தியாவுக்கு வந்தனர் என நவீன மரபணுவியல்கள் நிரூபிக்கின்றன. இவர்களினுடைய மரபணுவியல் குறியீடு M172 ஆகும்.
இந்த இலம் மொழிக்கு நெருக்கமான மொழி சங்ககாலத் தமிழாகும் என டேவிட் மக்அல்பின் குறிப்பிடுகின்றார். இதை அவர் ''...among all the Dravidian languages, the Samgam Tamil is most close to middle Elamite than any of its peer" (David McAlpan 1981) எனவே இலமக்கள் வந்திருந்து தங்கியதனால் இலங்கை ஈழமென அழைக்கப்பட்டது எனக்கூறுவர் மானிடவியலாளர்கள்.
மேலும் சங்கப்பாடல் பாடிய புலவர்களின் ஒருவராக கி.பி.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த "ஈழத்துப் பூதந்தேவனார்" எனப்படுபவர் காணப்படுகின்றார்.
இவரது பெயரின் முன்னுள்ள ஈழம் என்ற பெயர் ஒட்டுமொத்த இலங்கையையும் குறிப்பதாக அமைகிறது. இதே காலப்பகுதியைச் சேர்ந்த ஈழத்துப் பிராமிக்கல்வெட்டுக்களில் பூதன், பூத, பூதி ஆகிய பெயர்கள் வருகின்றன. பல்லவர்காலத்தில் ஈழம் பற்றிய மிகப்பழைய குறிப்பு வருகிறது. அது "ஈழம்பூட்சி" என்ற கூட்டுமொழியில் வருகிறது. ஈழம்பூட்சி என்பது ஒரு வகையான வரி. அதாவது இச்சொல் கள்ளினை உற்பத்தி செய்வோர்களிடமிருந்து அறவிடப்படும் வரியைக்குறிக்கிறது. இதனால் கள் உற்பத்தி செய்பவர்களை "ஈழவர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தெங்கும் பனையும் ஈழவர் ஏறப்பெறாதாராகவும்" என்று சில நலமானியங்கள் தொடர்பாக சாசனங்களிற் குறிப்பிருக்கின்றது. இது தற்போது பூநகரியில் உள்ள கிராஞ்சி கிராமம் முன்னொருகாலத்தில் ஈழவூர் என அழைக்கப்பட்டதை அங்கு பெறப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளிலிருந்து அறிய முடிகிறது.
பேராசிரியர் சி.பத்மநாதன் பெருங்கற் பண்பாட்டு மக்கள் குடியிருப்புக்களை ஏற்படுத்தியபொழுது அங்கு பனைமரங்கள் மிகுதியாகக் காணப்பட்டதனால் அவற்றை ஈழம் எனக்குறிப்பிட்டனர்.
சேது சமுத்திரம் என வழங்கும் கடற்பரப்பின் கரைகளிலும் வாழ்ந்தவர்கள் ஈழம் என்ற நாட்டின் பெயராக பயன்படுத்தினர் என தனது யாழ்ப்பாண இராச்சியம் ஒரு சுருக்க வரலாறு (2011) என்னும் நூலில் எழுதியுள்ளார்.
பேராசிரியர்.க.இந்திரபாலா இலங்கையில் தமிழர் (2004) பக்.338 இல் இன்று தென்னை, தெங்கு எனப்படும் மரப்பெயருக்கு பழந்தமிழில் ஈழம் என்றொரு இன்னொரு பெயரும் இருந்ததாகச் சொல்லுகின்றார். இச்சொற்களனைத்தும் இலங்கைத்தீவின் இன்னொரு பெயராகிய ஈழம் என்ற பெயருடன் தொடர்புபட்டிருப்பதைக் காணலாம் என்கிறார்.
இலங்கையிலிருந்து வந்த மரம் என்ற பொருளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னைக்கு ஈழமரம் என்ற பெயரும் இருந்தது. அந்த மரத்தில் காய்க்கும் காய்க்கு ஈழக்காய் என்றும், அக்காயிலுள்ள நீருக்கு ஈழநீர் என்றும் வழங்கபட்டிருந்ததாகவும், இந்த ஈழநீர் மருவி இளநீராக இன்றுவரை வழங்கப்படுவதையும், ஆயிரம் ஆண்டுகளின் முன்னர் தென்னிந்தியாவில் ஒரு தனிச்சமுகப்பிரிவாக ஈழவர் என்ற பிரிவு இருந்தனர் என்பதை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன என்றும் பேரா.இந்திரபாலா குறிப்பிடுகின்றார்.
அனுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி.7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு அங்குள்ள ஆலயமொன்றுக்கு 30 ஈழக்காசுகள் தானமாக கொடுக்கப்பட்ட செய்தி பற்றிக்கூறுகிறது. அதேபோல் பராந்தக சோழன்காலத்தில் வேலூரில் பாண்டிர்களுக்கு எதிரான போரில் ஈழத்து ஆட்சியாளனாக ஈழத்து மன்னன் சென்று போரிட்டான் இதை "ஈழத்து ஆரியன்" என சோழக்கல்வெட்டுக்கள் பதிவு செய்வதை பேரா.நீலகண்டசாஸ்திரி அவர்கள் பதிவுசெய்துள்ளார்.
கி.பி 10 நூற்றாண்டில் (993) ஈழம் சோழர்கள் வசமானதால் அது சோழர்களின் ஆட்சிமண்டலங்களில் ஒன்றானது. இதனால் இதை "ஈழமான மும்முடிச்சோழ மண்டலம்" என அழைத்தனர்.சோழர் ஈழத்தை வெற்றிகொண்டதன் நினைவாக ஈழக்காசு, ஈழக்கருங்காசு என்ற பெயரில் நாணயங்கள் வெளியிட்டதை சோழர் காலக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
முதலாம் இராஜராஜனின் மெய்க்கீர்த்திகள் "எண்திசை புகழ்தர ஈழ மண்டலமும்" எனப்புகழ்கிறது. இதன்போது ஈழத்திலும் "ஈழவளநாட்டு வரி" என்றொரு வரிமுறையையும் சோழர்கள் நடைமுறைப்படுத்தியிருந்தனர். அத்துடன் 10ஆம் நூற்றாண்டுகால சோழக்கல்வெட்டுக்களில் "ஈழக்காசு, ஈழக்கருங்காசு" பற்றிய செய்திகள் காணப்படுகிறது.
11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருக்கேதீஸ்வரம் மாந்தைக் கல்வெட்டில் தமிழகம் சோழமண்டலத்தைச் சேர்ந்த ஒரு நிலக்கிளாந்தர் ஈழத்தில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு நன்கொடை அளித்திருப்பதாக உள்ளது. இக்கல்வெட்டை கிருஸ்ணசாஸ்திரி அவர்கள் வாசித்து படியெடுத்துள்ளார். (கிருஸ்ண சாஸ்திரி 1923)
இக்கல்வெட்டு தற்போது கொழும்பு அருங்காட்சியகத்திலுள்ளது. எனவே 11 ஆம் நூற்றாண்டிலும் இலங்கையில் ஈழம் என்கின்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதனை மாதோட்டம் கல்வெட்டு சான்றுபகர்கின்றது.
12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் ராஜேந்திர சோழனின் சாசனத்தில் "முரட்டெழில் சிங்களர் ஈழமண்டலமும்" எனவும், இராசாதிராசன் 1 கல்வெட்டுக்கள் மதுரையும் ஈழமும் கொண்டவன்" என்றும், மூன்றாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்திகள் "சிங்களவன் தலைமையாற் தென்னீழங் கொள்கவென்னத் திரைகடலை அடைக்கவென்ன" எனவும் குறிப்பிடப்பட்டிருப்பதானது. ஈழம் என்கின்ற பெயர் முழு இலங்கைக்கும் வழங்கப்பட்டிருப்பதனை அறியமுடிகிறது.
மேலும் முத்தள்ளாயிரம் என்ற இலக்கியத் தொகைநூலானது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக பலரும் கருதுவர். இது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட 2700 பாடல்களைக்கொண்ட தொகுப்பாகும். கோழி என்னும் உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரியும் கிள்ளிவளவனின் யானையானது போர் புரியும் விதத்தை பாடும்போது "கச்சி ஒருகால் மிதியா ஒரு காலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் - பிறையும் ஈழம் ஒருகால் மிதியா வருமேதங் கோழியர் கோக்கிள்ளி கயிறு" என்று பாடுகிறார் கவிஞர். (எஸ்.வையாபுரிப்பிள்ளை 1943)
இங்கு கிள்ளிவளவனின் யானை ஈழத்திலும் ஒரு காலை வைத்து போரிட்டதாம் என்பதிலிருந்து இலங்கை ஈழம் என அழைக்கப்பட்டிருப்பதனைக் காணமுடிகிறது. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜாடவர்மன் சுந்தரபாண்டடியனின் இளைய சகோதரன் வீரபாண்டியன் (1253 - 1273) ஈழத்தின் மீது படையெடுத்தனை அவனது மெய்க்கீர்த்தி கூறும்போது "சோனேடும் ஈழமுங்கொண்டு சாவகன் முடியும், முடித்தலையும் கொண்டருளிய வீரபாண்டிய தேவர்க்கு...." என வருகிறது.
இதில் இலங்கைக்கு ஈழம் என்னும் பெயரைப் பாவிப்பதனை அறியலாம். அதேபோல் ஈழத்தின் மீது படையெடுத்து அங்கு ஆட்சிசெய்த சாவகமன்னனை வெற்றி கொண்டதாக கொங்குநாட்டு வீரபாண்டியன் கல்வெட்டிலும் கூறப்படுகிறது."கொங்கீழம் கொண்டு கொடுவடுகு கோடழித்து கங்கை இருகரையும் காவீரியும் கொண்டு" என்னும் வரிகளினூடாக தெளிவுபடுத்துகிறது.
திருக்கோணேஸ்வர வரலாற்றுப் படைப்பு பற்றிக்கூறுமிடத்து அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஜயவீரசிங்கை ஆரியனுக்கு (1380 - 1410) இந்தப் படைப்புரிமை வழங்கப்பட்டதாகவும், ஈழத்தை இந்தக் கோயிலின் நாடு என்று அழைக்கப்படுவதாகவும் தட்சிண கைலாய புராணம் கூறுகிறது.
கி.பி.1607 இல் சேதுபதிகள் பட்டையத்தில் "ஈழமுங் கொங்கும் யாழ்ப்பாணப் பட்டணமும்" என்று வருகிறது. இது ஈழத்தில் யாழ்ப்பாணம் தனியான பகுதி என்பதனைக் காட்டிநிற்கிறது (தஞ்சை மராட்டியர் செப்பேடு, செ.இராசு. பக்.69, 1963) 18 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தர் காலத்தில் நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் (1716 - 1780) அவர்களால் சுழிபுரம் பறாளைவிநாயகர் மீது பாடப்பட்ட பறாளை விநாயகர் பள்ளிலே பள்ளனின் மனைவிகளான ஈழமண்டலப் பள்ளி, சோழமண்டலப்பள்ளி என இருவரின் கதாபாத்திரங்களின் மூலம் ஈழமண்டலச் சிறப்பையும், சோழமண்டலச் சிறப்பையும் சின்னத்தம்பிப் புலவர் பாடுகிறார். மூத்தவளான ஈழமண்டலப்பள்ளி தம் வரலாற்றைக் கூறும் போது "ஈழமண்டலத்தினிற் பள்ளி நானே" என்றும், அவள் தம் நாட்டுவளம் பற்றி பாடும் பாடல்களின் இறுதியில் "ஈழமண்டல நாடேங்க நாடே" என்று பாடுகிறார்.இது இலங்கையை ஈழமண்டலம் எனப்புகழ்ந்து அதன் சிறப்புக்களைப்பாடுகிறது.
கி.பி.19ஆம் நூற்றாண்டில் மட்டுவில் ம.க.வேற்பிள்ளை (1848) அவர்களால் "ஈழமண்டலச் சதகம்" என்னும் நூல் எழுதப்பட்டது. இவர் இந்தியாவில் இருந்த சமயத்தில் ஈழத்தின் பெருமையறியாது இகழ்ந்தோருக்கு அதன் பெருமையை எடுத்துச்சொல்லும் முகமாக ஈழமண்டலச் சதகம் ம.க.வேற்பிள்ளையினால் இயற்றப்பட்டதாகும். அதனைத் தொடர்ந்து வித்துவசிரோமணி கணேசய்யர் அவர்களும் தாம் எழுதிய ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரத்தில் "இவ்வீழநாடு பண்டுதொட்டு முத்தமிழுக்கும் உறைவிடமாய் உள்ளதென்று" கூறுகின்றார்.
ஈழகேசரி பத்திரிகையும் ஈழம் என்ற பெயரில் 1976 இற்கு முன்னரே வெளிவந்திருப்பதனையும் நோக்கத்தக்கது.சி.வை.தாமோதரம்பிள்ளை, சுவாமி ஞானப்பிரகாசர் முதலானோரும் ஈழம் என்ற பெயரை பயன்படுத்தியிருந்தமையைக் காணலாம்.
1957 ஆம் ஆண்டு தமிழருக்கு தனிநாடு கேட்டு 'ஆ.தியாகராஜா ' "இருபத்தினான்கு லட்சம் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும்" என்ற நூலினை எழுதினார். இது பதுளையையும் உள்ளடக்கியது. இதன் படி முஸ்லிம்களும் அடங்குகின்றனர். இதன்பின்னர் சி.சுந்தரலிங்கம் 1964 ஆம் ஆண்டு ஈழத்தின் அவசியத்தை உணர்ந்தவராக எழுத்து மூலமாக Eylom: Beginings of freedom Struggle என்ற நூலை எழுதுகின்றார். இதுவே தமிழீழம் வேண்டும் என எழுதப்பட்ட முதலாவது நூலாகும்.
No comments:
Post a Comment