இலங்கையில் கடுமையான குற்றச்செயல்களுக்கு காரணமானவர்கள் எனத் தெரிவிக்கப்படுபவர்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிக்கிடைக்கவேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் போரினால்;பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றைப் பெற உதவக்கூடிய வெற்றியாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
தீர்மானத்திற்காக பிரசாரம் செய்த செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு பழிவாங்கலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் பேரவை,மற்றும் உறுப்புநாடுகள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 46-1, எதிர்காலத்தில் இலங்கையில் சர்வதேச குற்றங்களின் ஆதாரங்களை சேகரிக்கவும், பகுப்பாய்வு செய்யவும், பாதுகாக்கவும் ஒரு புதிய பொறுப்புக்கூறல் செயல்முறையை நிறுவுகிறது.
இந்தநிலையில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் முக்கிய தீர்மானமானது,உலகில் நீதி மறுக்கப்பட்டால், கொடுமைகளுக்கு பொறுப்புக்கூற ஐக்கிய நாடுகள் சபை செயற்படும் என்பதைக் காட்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவா இயக்குனர் ஜோன்பிஷர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் போரினால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியவும்,பொறுப்புள்ளவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்கவும் பல ஆண்டுகளாக போராடி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையின் பொறுப்புக்கூறலில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த நடவடிக்கை குற்றங்களுக்கு நீதியை நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment