இறைவனை மட்டுமல்ல, அவன் உறையும் கோயிலைக் கூட மனிதனைப் போலவே அமைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.
'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே' (திருமந்திரம். 1823).என்ற பாடல் காட்டுகிறது. திருமூலர் உடலினை நடமாடும் கோயிலாக உருவகிக்கிறார் (திரு.ம.1857). என்பது திருமூலர் அருட்பாடல்.
உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிருத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகாமண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.
கோயில் அமைப்பில், உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம்,மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்,ஆனந்த மய கோசம்ஆகியஐந்து உள்ளது போல கோயிலில்ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
உடலில் தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன.
ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம், கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன் விளங்கும்.
மேலும் நம் உடல் தோல், இரத்தம், நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது போல் ஆலயமும் செங்கல், காரை, கல், போன்ற ஏழு வகையான பொருள்களால் ஆனது என்கிறது நமது சாத்திரங்கள்.
கோயில் என்பதை கோ-இல் எனப்பிரித்து 'கோ' என்றால் இறைவன். −ல் என்றால் இருப்பிடம் என்கிறார்கள். ஆக, கோயில்என்பது இறைவனின் இருப்பிடம் என்றும் ஆலயம் என்பதை 'ஆ'ஆன்மா என்றும் லயம் சேருமிடம் என்றும் பொருள்படுகிறது.
மனிதனின் வடிவமாகச்சிவாலயத்தை ஒப்பிடும்போது (1)கருவறை- தலை, (2) அர்த்த மண்டபம்- கழுத்து, (3) மகா மண்டபம் -மார்பு, (4) யாகசாலை - நாடி, (5) கோபுரம் - பாதம் என்றும்கூறுவர். அதே போல் (1) ஆலயம் - உடல், (2)கோபுரம் - வாய், (3) நந்தி -நாக்கு, (4) துவஜஸ்தம்பம்(கொடிமரம்) - உள்நாக்கு, (5)தீபங்கள் - பஞ்சேந்திரியங்கள், (6)கருவறை - −தயம், (7) சிவலிங்கம்-உயிர் என்றும் கூறுவர்.உள்ளமே கோவில் என்று 'தத்துவார்த்தமாக'உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள் .
சைவ சமயத்தில் பூசலார் நாயனாரும் மனத்திலேயே கோயில் கட்டி வழிபாடு செய்தார். ஆழ்வார்களில் பொய்கையாழ்வார் தமது முதல் திருவந்தாதியில்
'வையந் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினன் சொன்மாலை
இடராழி நீங்குவவே என்று' என்றும், பூதத்தாழ்வார் தமது இரண்டாம் திருவந்தாதியில்,
'அன்பே தகளியா யார்வமே நெய்யாக
அன்புருகுஞ் சிந்தை யிடுதிரியாய் நன்புருக்கி
ஞானச் சுடர்விளக் கேற்றினன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்'
என்றும் குறிப்பிடுவது ஈண்டு நோக்கத்தக்கது. பிற்காலத்தில் தோன்றிய சிவவாக்கியார் எனும் சித்தர்,
'கோயிலும் குளங்களும் கும்பிடும் குலமாரே
கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே'
திருமூலர், மனத்தையே கோயிலாகக் கொண்டு விளங்கும் இறைவனுக்குக் காலையிலும், மாலையிலும் பாடும் பாட்டே நிவேதனப் பொருட்களாகும் என்று குறிப்பிடுகிறார் (திரு.ம.1824). மனத்துள்ளே விளங்கும் இறைவனை வழிபட மலரையும் நீரையும் அடுத்துக் கூறுகிறார். புறத்தேயுள்ள பெருமானை வழிபட நீரும், மலரும் இன்றியமையாதன. அதுபோல அகத்தேயுள்ள பெருமானை வழிபடக் கண்களையே மலராகவும், அதில் கசிந்துவரும் கண்ணீரையே நீராகவும் கொண்டு அபிடேகம் செய்து வழிபடுதலே சிறந்த வழிபாடு (திரு.ம.1826) எனக் குறிப்பிடுகிறார். இதனை,
'நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கலைகழல் ஈசசைக் காண அரிதாம்
கனைகழல் ஈசனைக்காண்குற வல்லால்
பனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே'
(திருமந்திரம். 1826)
என்ற பாடல் காட்டுகிறது. இவ்வாறு மலரையும், நீரையும் உணர்ந்து சிவனுக்கு வழங்குபவர்களே புண்ணியம் செய்தவர்கள். இவ்வுண்மையை அறியாது உலகத்தார் கெடுகின்றனரே (திரு.ம.1828) என்று வருந்துகிறார்.
திருமூலர், திருக்கோயிலில் பூசைகள் செய்தல் நூறுமடங்கு உயர்ந்தது. ஆனால் தவம் செய்வாரின் உடலில் (உள்ளத்தில்) செய்யப்படும் சிவபூசை ஆயிரம் மடங்கு உயர்ந்ததாகும் (திரு.ம.1851) எனப் புறவழிபாட்டை விட அகவழிபாடு சிறந்தது என்று அகவழிபாட்டின் மேன்மையை விளக்குகிறார்.
No comments:
Post a Comment