ஒரு நாட்டின் அமைதிக்கும் உறுதிக்கும் அதன் பொருளாதாரமே இன்றியமையாதது. அதனால் உலகம் தன் பொருளாதார வளங்களைப் பேணி வருகின்றது. முதலாளித்துவம் பொதுவுடமை என்று பொருளியல் கொள்கைகளைப் பிளந்து வைத்துக் கொண்டு அதில் ஏதோ ஒன்றுக்கு இசைவாக உலக நாடுகள் நடை போடுகின்றன.
இலாப நோக்கம் மிகுந்த முதலாளித்துவ நாடுகளை விட சமதர்மம் பேசும் பொதுவுடமை நாடுகளிலேயே பொருளாதாரச் சலசலப்புகள் அதிகம்! அதனால் கால்மாக்ஸ் போன்ற சிந்தனாவாதிகள் அதிகம் பேசப்பட்டார்கள்! அவர்கள் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்தார்கள்.
எதை உற்பத்தி செய்வது? எவ்வாறு உற்பத்தி செய்வது? அதை எப்படிப் பகிர்ந்து அளிப்பது? என்ற மூன்று கேள்விகளுமே பொதுவுடமைப் புரட்சியின் அடிப்படைச் சித்தாந்தங்களாக அமைந்தன.
இந்தச் சித்தாந்தங்களை வகுத்த மேதைகள் கல்வி அறிவு மிகுந்தவாகள். உலக நிலைப்பாடுகளையும் வரலாறுகளையும் சிரமமின்றி அறியும் வசதி படைத்த காலத்தில் வாழ்ந்தவர்கள். அவர்களால் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து திட்டங்களை வகுக்க முடியும்.
ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த மேதைகள் பிறக்காத காலத்தில் பொருளாதாரம் என்ற வார்த்தையே அறியப்படாத நேரத்தில் ஒரு நாட்டுக்கான பொருளாதாரத் திட்டம் பற்றி சைவத் திருக்குறள் சிந்தித்து இருக்கிறது. சைவ வள்ளுவன் சிந்தித்திருக்கிறான்!
ஒரு அரசாங்கத்துக்கு நல்ல திட்டங்களை உருவாக்கத் தெரிய வேண்டும். உருவாக்கிய திட்ங்களைக் கொண்டு உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ளத் தெரிய வேண்டும். அப்படிப் பெருகும் பொருளை ஒரு சிலர் மட்டும் அனுபவித்துவிட்டுப் போய்விடாமல் காப்பாற்றத் தெரிய வேண்டும்! அதாவது ஊழலுக்கு இடம் கொடுக்கக் கூடாது! அப்படிக் காப்பாற்றியதை எல்லாம் அனைவருக்கும் பாகுபாடு இன்றிக் கிடைக்கும் படி பிரித்துக் கொடுக்கத் தெரியவேண்டும். இது திருக்குறளின் பொருளாதார தத்துவம்.
சைவத்திருக்குறளின் அமைப்பிலேயே அறம், பொருள், இன்பம் என்ற படிநிலைகள் உள்ளன. அறவழியில் பொருளீட்டி அதன்மூலம் இன்பம் துய்ப்பதே நல்வாழ்க்கை என்பதுதான் திருவள்ளுவர் வகுத்த சாசனம்.
இவ்வுலகில் நாம் நலமாக வாழ பணம் அவசியம். அந்தப் பணத்தை ஏன் ஈட்ட வேண்டும், அதை எப்படி பெருக்குவது, அதை எதற்காகப் பயன்படுத்துவது என்ற கேள்விகளுக்கான பதில்களை திருக்குறள் கருத்துகளால் தெளிவுபடுத்துகிறார்.
"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்ததும் வல்லது அரசு."
திட்டங்களை இயற்றுவதும் அதைக்கொண்டு பொருள் ஈட்டுவதும் அதைக் காப்பாற்றுவதும் அப்படிக் காப்பாற்றியதை வகுத்துக் கொடுக்கக் கூடிய வல்லமையும் கொண்டதாக அரசாங்கம் இருக்க வேண்டும். இதுவே இக் குறளின் பொருள்.
இதுதானே பொதுவுடமை வாதிகளின் சித்தாந்தம்! எவ்வளவு அழகாவும் ஒழுங்காகவும் திருவள்ளுவர் சொல்லி விட்டார். இது மட்டுமா? ஒரு நாட்டிலே எதுக்காகவேனும் பல குழுக்கள் இயங்கிப் போராட அனுமதிக்கக் கூடாது. நாட்டைப் பாழாக்கும் கூட இருந்து குழி பறிக்கும் உட்பகையையும் விட்டு வைக்கக் கூடாது. அரசாங்கத்தை அலைக்கழித்து வேலைகளைத் தாமதப்படுத்தும் குறும்புத் தனங்களையும் நாச வேலைகளையும் அனுமதிக்கக் கூடாது என்றார் வள்ளுவர்.
"பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு."
என்றார் அவர். சமூக விரோத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கும் செயலுக்கு ஆதரவு தருகின்றதல்லவா இந்தக் குறள்? சீனாவிலும் சோவியத் நாட்டிலும் இதைத்தானே செய்தார்கள். குறள் காட்டும் பொருளாதாரக் கோட்பாடு மட்டுமல்ல இந்த நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ மயமான நடபடிக்கைகள் சிலவும் கூட திருக்குறளுக்கு அமைவாக நடைபெற்று இருப்பது வியப்பான ஒரு விடயமாகும்!
சைவத் திருக்குறள் பொருளாதாரத் தடையை உடைத்தெறியும் வழிவகைகளையும் கூறுகின்றது.
சைவத் திருக்குறள் இவற்றோடு மட்டும் நின்று விடவில்லை. அது பொருளாதாரத் தடை பற்றியும் பேசுகின்றது. ஒரு நாட்டுக்கு பிற நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பொருளாதாரத் தடையை விதிக்கக் கூடும். அப்படி விதித்தால் அதை உடைத்தெறியும் கடமை அரசினுடையது அல்ல. அந்த நாட்டு மக்களுடையது என்பார் திருவள்ளுவர். மக்கள் அரசை ஏமாற்றாமல் தாம் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை முழுமையாகக் கட்டுவது ஒன்றதான் பொருளாதாரத் தடைகளில் இருந்து தம் நாட்டை மீட்கும் வழி என்று அறுதியிட்டுக் கூறியது திருக்குறள்.
ஆம்! பொருளாதாரத் தடைக்கு உள்ளான நாட்டு மக்கள் வரி ஏய்ப்புச் செய்யச் கூடாது! இது சொல்லப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம். பழந்தமிழரின் சிந்தனைத் திறனுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்!
"பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு".
பிற நாடுகள் ஒன்று கூடித் தம்மீது திணிக்கும் பாரங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு தாம் துன்பப்படும் அந்த இக்கட்டான வேளையிலும் தம் அரசாங்கத்துக்கு தாம் செலுத்த வேண்டிய இறைப் பொருள் ஆகிய வரி முழுவதையும் கொடுத்து உதவும் மக்களை உடையதே நல்ல நாடாகும்.
மக்களைத் துன்பம் இன்றிக் காக்கும் அரசுக்கும் அந்த அரசுக்குத் துன்பம் ஏற்பட்டால் தோள் கொடுக்க வேண்டிய மக்களுக்கும் ஒரு சேர இலக்கணம் கண்ட நூல் சைவத் திருக்குறள் ஒன்றாகத்தான் இருக்க முடியும்!
தொகுப்பு அருளகம்.15-09-1990.
வாழ்க சைவத் திருக்குறள். வளர்க சைவத் திருக்குறள்.
No comments:
Post a Comment