மகரிஷி சுஸ்ருதர் (Father of Plastic Surgery )
உலகிலேயே! முதன் முதலில் அறுவைச்சிகிச்சை செய்து சாதனை புரிந்தவர் - father of plastic surgery என்று அழைக்கப்படுகின்ற மகரிஷி சுஸ்ருதர் இவருக்கு அவுஸ்ரேலியாவில் Royal Australia College of Surgeons (RACS) என்னும் பல்கலைக்கழகத்தில் சிலை உள்ளது.
உலகின் பழமையான மருத்துவ முறை ஆயுர்வேதம். இது உடலில் ஏற்படும் நோயைத் தீர்ப்பதுடன், நோய் அணுகாத வகையில் உடல் வலிமை பெறவும் உதவுகிறது. பின்விளைவுகளற்ற பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம், சுமார் 5,000 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது.
மனம், உடல், ஆன்மா ஆகிய மூன்றும் இணைந்தவனே மனிதன் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. எனவே அதன் சிகிச்சை முறைகள், இம்மூன்றும் பண்படும் நிலைக்கான வழியாகவே உள்ளன. ஆயுர்வேதத்தின் மும்மூர்த்திகளாகக் கருதப்படும் சரகர், சுஷ்ருதர், வாக்படர் ஆகியோரில், சுஷ்ருதர் காலத்தால் மிகவும் முற்பட்டவர். பொது யுகத்துக்கு முன் ஆயிரம் முதல் 800 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தவராக அவர் கருதப்படுகிறார்.
மகாபாரதத்திலேயே சுஷ்ருதர் குறித்த குறிப்புகள் உள்ளன. விஸ்வாமித்திர மகரிஷியின் மகனான சுஷ்ருதர், ஆயுர்வேதக் கலையில் நிபுணத்துவம் பெற்ற காசி மன்னர் திவோசதசனின் பன்னிரு சீடர்களுள் முதன்மையானவர். அவரிடம் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் சல்லிய தந்திரம் நூலை முதல் நூலாகக் கொண்டு அவர் எழுதியதே ‘சுஷ்ருத சம்ஹிதை’ நூலாகும்.
ஆயுர்வேதத்தில் பொது மருத்துவராக (Doctor in Medicine) சரகரும், ரண சிகிச்சை நிபுணராக (Master of Surgery) சுஷ்ருதரும் கருதப்படுகிறார்கள். சுஷ்ருத சம்ஹிதை, நாகார்ஜுனராலும் (பொ.யு.மு. 150} 250), வாக்படராலும் (பொ.யு. 500) செம்மையாக்கப்பட்டது. இந்நூலில்தான் முதன்முதலாக அறுவைச் சிகிச்சை முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
ஷத்திரிய மரபைச் சேர்ந்தவர் என்பதால், ஆயுதங்களால் நேரிடும் ரத்தக் காயம், அமிலக் காயம், ரசாயனக் காயம், தீக்காயம் உள்ளிட்ட போர்க்களக் காயங்களின் வகைகளை நன்கு அறிந்திருந்த சுஷ்ருதர், அவற்றுக்கான தையல், கட்டுகள், சிகிச்சை முறைகளை விரிவாக விளக்கியுள்ளார்.
சிக்கலான மூளை மண்டல நரம்பியல் அறுவைச் சிகிச்சை, தோல் ஒட்டு அறுவைச் சிகிச்சை (Plastic Surgery), கண்புரை அறுவைச் சிகிச்சை (Catract Surgery) ஆகியவற்றை அவர் செய்துள்ளார். குறிப்பாக போர்க்களத்தில் வெட்டுப்பட்ட மூக்கின் மீது உடலின் வேறொரு பகுதியிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட தோலைத் தைத்து அறுபட்ட மூக்கை மறுசீரமைத்துள்ளார். அந்த வகையில், பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் நவீன மருத்துவத்தின் முன்னோடியாக சுஷ்ருதர் கருதப்படுகிறார்.
சுஷ்ருத சம்ஹிதை:
ஆயுர்வேத மருத்துவத்தின் முப்பெரும் அடிப்படை நூல்களுள் சுஷ்ருத சம்ஹிதை மூத்ததாகும். இது பூர்வ தந்திரம், உத்தர தந்திரம் என்ற இரு பெரும் பிரிவுகளில், 184 அத்தியாயங்களுடன், சமஸ்கிருத மொழியில் செய்யுள் நடையில் எழுதப்பட்டது.
பூர்வ தந்திரத்தில் சூத்திர ஸ்தானம் (ஆயுர்வேத அடிப்படை, அறுவை முறைகள்), நிதான ஸ்தானம் (பலவித நோய் அறிதல்), சரீர ஸ்தானம் (மகப்பேறு, தசைகள்), கல்ப ஸ்தானம் (உணவு, விஷ சிகிச்சை), சிகிச்சா ஸ்தானம் (நோய்களுக்கு மருத்துவம்) ஆகிய 5 பிரிவுகளில் 120 அத்தியாயங்கள் உள்ளன. இதை மட்டுமே சுஸ்ருதர் எழுதினார் என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உத்தர தந்திரத்தில் ஸலாக்கியம் (சிறு அறுவைகள்), பூத வித்யை (மனோவியல்), கௌமார மிருத்தியம் (குழந்தை மருத்துவம்)ஆகிய 3 பிரிவுகளில் 64 அத்தியாயங்கள் உள்ளன. இவற்றை திருதபாலர் பின்னாளில் சேர்த்ததாக ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால், ஆயுர்வேதத்தின் முழுமையான தொகுப்பையே சுஷ்ருதர் எழுதியிருக்க வேண்டும் என்போரும் உள்ளனர்.
1,120 வகையான நோய்களையும், அவற்றின் அறிகுறிகள், சிகிச்சை முறைகளையும் சுஷ்ருத சம்ஹிதை விளக்குகிறது. 700 விதமான மூலிகை மருந்துகள், 64 விதமான ரசாயனத் தாது மருந்துகள், விலங்குகளிலிருந்து எடுக்கப்படும் 57 மருந்துகள் குறித்து அவர் குறிப்பிடுகிறார். அவற்றைத் தயாரிக்கும் வழிமுறைகளையும், பயன்படுத்தும் முறைகளையும் அவர் தொகுத்துள்ளார். கடுக்காய், நெல்லிக்காய், தான்தோன்றிக்காய் ஆகிய மூன்றும் கலந்த ‘திரிபலா சூரணம்’ சர்வரோக நிவாரணி என்று அவர் குறிப்பிடுகிறார்.
அறுவைச் சிகிச்சையின்போது நோயாளியின் உடலில் குறிப்பிட்ட பகுதி மட்டும் மரத்துப் போக (Local Amnestesia) சம்மோஹினி என்ற மருந்தை சுஷ்ருதர் பயன்படுத்தியுள்ளார். அறுவை முடிந்த பின் நோயாளியை பழைய நிலைக்குக் கொண்டுவர சஞ்சீவினி என்ற மருந்தை அவர் பயன்படுத்தியுள்ளார். நோயாளியின் பத்தியம், ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான உணவுக் கட்டுப்பாடு, தினசரி உடற்பயிற்சியின் தேவை, உடல் தூய்மை ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உடலில் 300 எலும்புகள் உள்ளதாகக் கூறும் சுஷ்ருதர் அவற்றைப் பட்டியலிட்டுள்ளார். எலும்பு மூட்டுகளின் அறுவகைப் பிறழ்வுகள், 12 வகை எலும்பு முறிவுகள் குறித்து அவர் விளக்கியுள்ளார். மதுமேகம் (நீரிழிவு), உயரழுத்தம், உடல் பருமன், மூலம், குடலிறக்கம், தொழுநோய், இருதய அடைப்பு, உடலில் உருவாகும் கட்டிகள், விரைவீக்கம், சிறுநீர்க்குழாய் அடைப்பு, சிறுநீரகக் கற்கள், மனநோய்கள், கருச்சிதைவு உள்பட பல பிரச்னைகளுக்கும் அவர் சிகிச்சை முறைகளை வகுத்துள்ளார்.
அறுவைச் சிகிச்சையில் பயன்படும் உத்திகளாக, வெட்டுதல், கீறுதல், பிரித்தெடுத்தல், தீய்த்தல், உறுப்புகளை மாற்றுதல், செயற்கை உறுப்புகளைப் பொருத்துதல், நீக்குதல் ஆகியவற்றை சுஸ்ருதர் குறிப்பிட்டுள்ளார்; இயற்கையான முறையில் பிரசவம் ஆகாத பெண்களுக்கு அறுவைச் சிகிச்சை (Cesarean Surgery) மூலம் பிரசவம் பார்ப்பது குறித்து ஓர் அத்தியாயமே எழுதியுள்ளார்; பலவிதமான விஷ ஜந்துக்களின் தன்மை, விஷக்கடிகளுக்கு முறிவு மருந்துகள், விஷம் உட்கொண்டவருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை ஆகியவை குறித்தும் தனது நூலில் விளக்கியுள்ளார்.
அறுவைச் சிகிச்சைக்கு பயிற்சி பெறும் மாணவர்கள், முதலாவதாக அரசாணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் ஆகியவற்றைக் கீறி, தைத்துப் பயிற்சி பெற வேண்டும். பிறகு நீர் நிரம்பிய தோல்பையைத் தைத்துப் பயிற்சி பெற வேண்டும். பிறகு இறந்த விலங்கின் உடலில் அறுவைப் பயற்சி பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார் சுஷ்ருதர்.
பொ.யு. எட்டாம் நூற்றாண்டில், கலீபாக்கள் ஆட்சிக் காலத்தில் புத்தத் துறவிகள் வாயிலாக பாரசீகம் சென்ற இந்திய மருத்துவ நூல்கள் அரபி மொழியில் பெயர்க்கப்பட்டன. அப்போது, சுஷ்ருத சம்ஹிதை ‘கிதாபி-இ-சுஷ்ருத்’ நூலாக மொழி பெயர்க்கப்பட்டது. அங்கிருந்து ஐரோப்பாவுக்குச் சென்ற சுஷ்ருத சம்ஹிதை, உலக மருத்துவ மேதைகளால் வியந்து பாராட்டப்படுகிறது.
ஓர் அறுவைச் சிகிச்சை நிபுணருக்கு இருக்க வேண்டிய தகுதிகளை அவர் கீழ்க்கண்டபடி வரையறுத்துள்ளார்:
மருத்துவர் தமது விரல் நகங்களை ஒண்ட வெட்டியிருக்க வேண்டும்; தலைமுடியை குறுகலாகக் கத்தரித்திருக்க வேண்டும்; நோக்கத்தில் சுத்தமானவராகவும், தூய்மையான வெள்ளாடை தரித்தவராகவும் இருக்க வேண்டும்; மகிழ்ச்சியான மனோநிலையுடன், எல்லோருடனும் சிநேகபாவமாக இருக்க வேண்டும்; அவர் மாய, மந்திர வேலைகளில் ஈடுபடாமல், திறமையான தனது ஊழியர்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டும்.
இவ்வாறு கூறும் சுஷ்ருதர், அறுவைச் சிகிச்சையில் பயன்படும் 600 வகையான கருவிகள், சிகிச்சை ஸ்தானத்தின் தூய்மை, அறுவைக்கு நோயாளியை முன்தயாரிப்பது, பலவிதமான அறுவை முறைகள், மயக்கமடையச் செய்யும் வகைகள், அறுவைக்குப் பிந்தைய கவனிப்புகள் உள்பட, நவீன அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் கையாளும் பல அம்சங்களையும் 3,000 ஆண்டுகள் முன்னரே வகுத்திருக்கிறார். எனவேதான், அவரை ‘அறுவைச் சிகிச்சை முறையின் தந்தை’ என்று அழைக்கின்றனர்.
அறுவை மருத்துவரின் பண்புகளாக சுஷ்ருதர் கூறுவன:
“ஒரு சிறந்த ரண சிகிச்சை வைத்தியருக்கு இருக்க வேண்டிய பண்புகள், அஞ்சாமை, உடனடியாகச் செயல்படுதல், உபகரணங்களைக் கூர்மையாக வைத்திருத்தல், வியர்க்காமல் இருத்தல், கைநடுக்கமின்மை, குழப்பமின்மை ஆகியவையே”.
No comments:
Post a Comment